புதுச்சேரியில் கழிவறைக்கு சென்ற 3 பெண்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி செந்தாமரை வீட்டு கழிவறையில் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவரை மீட்கச் சென்ற மகள் மற்றும் பேத்தியும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். மூச்சு திணறல் ஏற்பட்டு மகள் காமாட்சி உயிரிழந்த நிலையில், மயங்கி விழுந்த பேத்தி பாக்கியலட்சுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் விஷவாயு புதுநகர் பகுதி முழுவதும் பரவியது. இதன் காரணமாக செல்வராணி என்பவரும் திடீரென மயங்கி விழுந்தார். அவரையும் மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த செல்வராணியும் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அப்பகுதியில் வீடுகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் விஷவாயு தாக்கும் அபாயம் உள்ளதால் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அந்த தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து தான் இந்த விஷவாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பாதாள சாக்கடை நிரம்பி வழிவது குறித்து தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.