கேரளாவைச் சேர்ந்த 105 வயது பாகிரதி அம்மாள் என்ற பாட்டி எழுத்தறிவு திட்டத்தின் மூலம் நான்காம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளார்.
கொல்லம் மாவட்டத்தில் உள்ள திரிக்கருவா பகுதியைச் சேர்ந்தவர் பாகிரதி அம்மாள். சிறுவயதிலேயே மூன்றாம் படிப்பை முடித்த நிலையில் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. கணவரும் பாகிரதிக்கு 30 வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டதால் குடும்ப சுமை முழுவதும் இவரின் மேல் விழுந்துள்ளது. குழந்தைகள் அனைவரையும் படிக்கவைத்து திருமணம் செய்து வைத்துள்ளார்.
தற்போது அவருக்கு 105 வயது. 16 பேரன், பேத்திகள் உள்ளனர். இந்நிலையில் பேரக்குழந்தைகள் பாட்டியின் ஆசை எதாவது இருக்கிறதா எனக் கேட்டதற்கு படிக்கவேண்டும் என சொல்லியுள்ளார். அதை நிறைவேற்றும் விதமாக எழுத்தறிவு திட்டத்தின் படிப்பை தொடர ஏற்பாடு செய்துள்ளனர்.
இதையடுத்து கடந்த 16ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற்ற சுற்றுச்சூழல், கணிதம், மலையாளம் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார். இதற்கு முன்னதாக 96 வயது மூதாட்டி ஒருவர் எழுத்தறிவு திட்டத்தின் மூலம் தேர்வு எழுதியது கேரளாவில் சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.