பாஜக வலையில் சிக்கி தவிக்கும் அதிமுக? - பின்னணி என்ன?

எம். முருகன்
வியாழன், 23 மார்ச் 2017 (14:30 IST)
தினகரன் மற்றும் ஓ.பி.எஸ் ஆணி ஆகிய இருவரும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


 

 
அதற்கும் ஒரு படி மேலே போய், அதிமுக என்ற பெயரையே யாரும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது ஓ.பி.எஸ் அணிக்கு எப்படியோ.. நிச்சயமாக தினகரன் தரப்பிற்கு இது பெரிய அடிதான். ஏனெனில் அதிமுக என்ற பெயருக்கும், இரட்டை இலை என்ற சின்னத்திற்கு விழும் ஒட்டுகளே அதிகம். தற்போது அந்த ஓட்டுகள் சிதறிப் போக அதிகம் வாய்ப்புள்ளது. அப்படி பிரியும் ஓட்டுகள்,  எதிர்கட்சியான திமுகவிற்கு கண்டிப்பாக சாதகமாக அமையும்.
 
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவல் வளர்த்தெடுக்கப்பட்ட இரட்டை இலை என்ற சின்னம் 28 ஆண்டுகளுக்கு பின்பு முடக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின், அதிமுகவில் ஜானகி அணி, ஜெயலலிதா என்ற இரு அணி உருவான போது, அவர்கள் இருவரும் இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சி செய்தனர். அதனால், அந்த சின்னம் முதல் முறையாக அப்போது முடக்கப்பட்டது. அதன்பின், தற்போது அது மீண்டும் நடந்துள்ளது.
 
பல வருடங்களாக தமிழகத்தை அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கிறது. திமுக தலைவரான கலைஞர் கருணாநிதி தற்போது, உடல் நிலை காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் ஓய்வில் இருக்கிறார்.  அதிமுகவின் தலைவியான ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார்.
 
எனவே, தலைமை இல்லாமல் இரு கழகங்களும் தள்ளாடி வரும் நிலையில், இந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ள பாஜக போன்ற கட்சி முயற்சி செய்யும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். அதுதான் அரசியலும் கூட. ஏற்கனவே தமிழகத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கும் பாஜக, தற்போது அதிரடியாக சில வியூகங்களை வகுக்கும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 3வது இடத்தையாவது எப்படியாவது பிடிக்க வேண்டும் என பாஜக முயற்சி செய்து வருவதாக தெரிகிறது.


 

 
அதனால்தான், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன் கூட, இது வரவேற்கதக்கது. இதன் மூலம் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் மக்களின் மனநிலையும் மாறும் என சூசகமாக கருத்து தெரிவித்தார்.
 
இரட்டை இலை சின்னம் முடக்கத்திற்கு பின் பாஜக இருப்பதாக பல அதிமுக நிர்வாகிகள் கொந்தளிக்கிறார்கள். இதுபற்றி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது கூட, யார் இருக்கிறார்கள் என மக்களுக்கு தெரியும் என அவர் மறைமுகமாக பாஜகவையே கூறினார் என கூறுகிறார்கள்.
 
ஏனெனில், இரட்டை இலையை எப்படியாவது பெற்றே ஆக வேண்டும் என சசிகலாவின் சகோதரர் திவாகரனும், கணவர் நடராஜனும் டெல்லியில் தங்கியிருந்து காய் நகர்த்தினார்கள். ஆனால், அவர்களுக்கு தோல்வியே கிடைத்துள்ளது. இந்த முடிவு அவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும், ஆளும் பாஜக தரப்பு மீது அவர்கள் கோபத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. 
 
பாஜகவின் அரசியல் முடிவுகளுக்கு எதிர்ப்பு காட்டாமல், பணிந்து நடப்பதே இதற்கெல்லாம் காரணம் எனவும், இனிமேல், ஜெயலலிதா கடை பிடித்தது போல்,  மத்திய அரசுடன் இணக்கம் காட்டமால் செயல்பட வேண்டும் என்ற முடிவிற்கு தினகரன் தரப்பு வந்துள்ளதாக தெரிகிறது. 


 

 
முக்கியமாக, நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று பாஜக வலிமை அடைந்துள்ளது. இனி, அவர்களின் பார்வை தமிழகம் பக்கம் நிச்சயம் திரும்பும். முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றவும், ஜனாதிபதி நியமனத்தின் போதும் அதிமுகவின் ஆதரவு பெற வேண்டிய அவசியம் தற்போது பாஜகவிற்கு இல்லை. திமுகவின் ஆதரவை பெற்றாலே போதும். எனவே, அவர்கள் அதிமுகவிற்கு எதிராக இனி செயல்பட துவங்கலாம் என்பதையும், இப்படியே போனால், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பதே சிரமம் ஆகிவிடும் என்பதை தினகரன் தரப்பு உணர்ந்துள்ளது. எனவே, சட்ட ரீதியாக செயல்பட வேண்டிய காரியங்கள் குறித்து தினகரன் தரப்பு விவாவித்து வருகிறது. 
 
ஆர்.கே.நகர் தொகுதியில் பணத்தை இறக்கி வெற்றி பெற தினகரன் முயற்சி செய்தால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் மூலம் அதை பாஜக முறியடிக்கும் என செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
ஏராளமான சாவால்களும், பிரச்சனைகளும் அதிமுகவை சூழ்ந்துள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையை தினகரன் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...
அடுத்த கட்டுரையில்