’தர்பார்’ திரைவிமர்சனம்

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (09:17 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் வெளிவரும் நாளே ஒரு பொங்கல் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொங்கல் திருநாளன்று தர்பார் திரைப்படம் வெளி வந்துள்ளதால் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு டபுள் ட்ரீட் படமாக இந்த படம் உள்ளது. 
 
டெல்லியில் யாருக்கும் அஞ்சாமல் பல ரெளடிகளை என்கவுண்டர்கள் செய்து ரவுடிகளை ஒழித்த ஆதித்யா அருணாச்சலத்தை மும்பைக்கு போலீஸ் தலைமை அனுப்புகிறது. மும்பையில் போதை கும்பல் தலைதூக்கி இருக்க அவர்களை அடக்க களமிறங்குகிறார் ஆதித்யா அருணாச்சலம். போதைப்பொருள் கடத்தல், பெண் குழந்தைகளை கடத்தி விபச்சாரத்தில் தள்ளும் கும்பலை ஒரே நாளில் கட்டுக்குள் கொண்டு வரும் ஆதித்யா, ஒரு பெரிய தொழிலதிபரின் மகனை கைது செய்கிறார்.  கைது செய்யப்பட மகனை விடுவிக்க அந்த தொழிலதிபர் எடுக்கும் முயற்சிகளும் ரஜினி அதை முறியடிப்பதும்தான் முதல் பாதி கதை 
 
அதன் பிறகு அந்த தொழிலதிபரின் மகன் உண்மையில் யார்? என்ற ரகசியம் வெளியாகும்போது இரண்டாம் பாதியில் ரஜினிக்கும் வில்லன் கும்பலுக்கும் இடையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தர்பார் படத்தின் இரண்டாம் பாதி கதை 
 
இந்த படத்தை முழுக்க முழுக்க ரஜினிதான் தாங்கி நிற்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது. 70 வயதிலும் அப்படி ஒரு அட்டகாசமான நடனம், ஆக்ஷன் காட்சிகளில் சுறுசுறுப்பு என வேறொரு நடிகர் இப்படி நடிக்க முடியுமா என்பது சந்தேகமே.  நயன்தாராவிடம் ரொமான்ஸ், யோகிபாபுவுடன் காமெடி, மகள் நிவேதாவுடன் செண்டிமெண்ட் என நடிப்பில் ரஜினி உச்சம் பெறுகிறார். முதல் பாதியின் அட்டகாசமான அதிரடி ஆக்ஷன் காட்சிகள், இரண்டாம் பாதியில் எமோஷனல் மற்றும் ஆக்சன் காட்சிகள் என ரஜினி ஒரு திரை விருந்து அளித்திருக்கிறார் என்று சொல்லலாம்.
 
நயன்தாரா கேரக்டர் இந்த படத்தின் நாயகி கேரக்டர் என்பதை தவிர சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை. நிவேதா தாமஸ் கேரக்டர் அழுத்தமான கேரக்டராகவும், நடிக்க பல வாய்ப்புகள் இருப்பதாலும் அவரது நடிப்பை ரசிக்க முடிகிறது. கிடைத்த நல்ல வாய்ப்பை அவர் மிஸ் செய்யாமல் பயன்படுத்தியுள்ளது அவரது புத்திசாலித்தனம்.  யோகிபாபு பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறார் ரஜினியை அவர் கலாய்க்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது 
 
படத்தின் மிகப் பெரிய பலம் சந்தோஷ் சிவனின் கேமரா. மும்பையின் பல இடங்களை நம் கண்முன்னே நிறுத்துகிறார். அனிருத்தின் பாடல்கள் மற்றும் இசை ஆகியவை அட்டகாசமாக உள்ளது.
 
ஏ.ஆர்.முருகதாஸின் முதல் பாதி திரைக்கதை அட்டகாசமாக இருந்தாலும் இந்த படத்தை ரஜினியின் ஒருவரை கடைசி வரை தாங்கி செல்கிறார். முதல் பாதியில் வில்லனும் ஹீரோவும் பரிமாறி புத்திசாலித்தனமான செயல்படும் காட்சிகள் அட்டகாசமாக இருப்பதால் ரசிக்க முடிகிறது ஆனால் அதே சமயத்தில் இரண்டாம்பாதி இருவருமே சேர்ந்து விடுகின்றனர் மொக்கையான வில்லன் கேரக்டர் இந்த படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு. அதேபோல் வழக்கமான ஏஆர் முருகதாஸ் படத்தில் இருக்கும் சுமாரான கிளைமாக்ஸ் காட்சியும் இந்த படத்திற்கு ஒரு வீக்னஸ்
 
 க்ளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருந்தால் ஒரு மனநிறைவுடன் வெளியே வந்திருக்கலாம். மொத்தத்தில் ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு திருவிழா, நார்மல் ரசிகர்களுக்கு ஒரு சுமாரான படம் என்பதுதான் தர்பார் படத்தின் விமர்சனமாக உள்ளது
 
ரேட்டிங்: 3.5/5
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்