வாக்குச் சாவடிக்குள் வாக்காளர்கள் செல்போன் எடுத்து செல்லக்கூடாது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள நாற்பது தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன் முடிவடைகிறது.
சென்னையில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, சத்ய பிரதா சாகு, “நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்த இருக்கிறோம் என்றும் வாக்குச் சாவடிக்குள் வாக்காளர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருவதாக குறிப்பிட்ட அவர், வாக்குப் பதிவு நாளன்று தனியார் நிறுவனங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்றார்.