சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நாடகம் என்றும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை மேலும் 500 ரூபாய் உயர்த்தி விடுவார்கள் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலையில், திமுக வேட்பாளர் அண்ணா துரையை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு அவர் வாக்கு சேகரித்தார்.
தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். குறிப்பாக இலவச பேருந்து திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை பெற்றோர் மனமுவந்து பாராட்டி வருகிறார்கள் என்றும் அதே போல் 1.65 கோடி பெண்களுக்கும் நிச்சயம் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என்றும் உதயநிதி தெரிவித்தார்.
மத்திய அரசு ஒரு பைசா நிதி கூட தமிழகத்துக்கு தரவில்லை என குற்றம் சாட்டிய அவர், பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை நாங்கள் தூங்கப் போவதில்லை என கூறினார்.
தேர்தலில் வெற்றி பெற்றால் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்ற பாஜகவின் தேர்தல் நாடகத்தை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை மேலும் 500 ரூபாய் உயர்த்தி விடுவார்கள் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.