ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை சென்னை வருகை தர உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை பிரதமர் மோடி 6 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தற்போது 7வது முறையாக நாளை தமிழ்நாடு வருகிறார்.
சென்னையில் நாளை நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரோட்-ஷோ நடைபெற உள்ள பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 144 தடை சட்டத்தின் கீழ் சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு பணிகளுக்காக சென்னையில் 22 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் வருகையை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை ஜி.எஸ்.டி – அண்ணா சாலை, ஒய்.எம்.சி.ஏ, நந்தனம் – தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.
இதன் காரணமாக மக்களுக்கு போக்குவரத்து காவல் துறை தரப்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. நாளை ஏப்ரல் 9 ஆம் தேதி, ஜி.எஸ்.டி சாலை, மவுண்ட் - பூந்தமல்லி சாலை, CIPET சாலை, 100 அடி சாலை, அண்ணா சாலை, படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, தியாகராய பகுதி சாலைகளை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தியாகராய நகர், வெங்கட் நாராயண சாலை, ஜி.என். செட்டி சாலை, வடக்கு போக் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை பிற்பகல் வணிக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.