எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வாய்ப்பு..! கேப்டனின் மறு உருவம் விஜய பிரபாகரன்.! பிரேமலதா....

Senthil Velan
திங்கள், 15 ஏப்ரல் 2024 (12:34 IST)
எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமாலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் கொட்டும் முரசு சின்னத்தில் போட்டியிடுகின்றார்.  இந்நிலையில் சிவகாசி பகுதியில் தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது மகன் விஜயபிரபாகரனுக்கு ஆதரவு கேட்டு பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், விஜய பிரபாகரனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். 32 வயதில் படித்து முடித்துவிட்டு எத்தனையோ கனவுகள் இருந்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு தந்தையின் வழியில் மக்கள் சேவை செய்ய இந்த தொகுதியில் அவர் போட்டியிடுகின்றார் என்றும் உங்கள் எல்லாருக்கும் தெரியும் தம்பிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை என்றும் இந்த விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் இந்த தொகுதி மக்களின் தலைமையில் தான் அவருக்கு திருமணம் நடக்கும் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.
 
கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றேன் என தெரிவித்த அவர், இந்த தொகுதியில் விஜய பிரபாகரன் வெற்றி பெற்றவுடன் அவர் பல நல்ல திட்டங்களை இந்த தொகுதியில் அறிவித்து செயல்படுத்த உள்ளதாக கூறினார்.  
 
குறிப்பாக, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் கேப்டன் பிறந்தநாள் அன்று 60 பெண்களை தேர்வு செய்து பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தின் மூலம் எங்களது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம்  வழங்க உள்ளார் என்றும் ஆண்டுதோறும் 6 லட்சம் வீதம் 5 வருடத்தில் 30 லட்சம் ரூபாய் வரை பெண்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளார் என்றும் வாக்குறுதி அளித்தார்.
 
தொகுதி முழுவதிலும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் தொடங்கப்படும், இலவச தையல் பள்ளிகள் உருவாக்கப்படும், இலவச நீட் கோச்சிங் சென்டர் உருவாக்கப்படும்,  படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும், தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு இலவச தையல் மிஷின்கள் வாங்கி கொடுத்து அவர்கள் வாழ்வாதாரம் உயர நடவடிக்கை எடுப்போம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்தவும், கூலித்தொகையை ரூ.500 ஆக அதிகரிக்கவும் விஜய பிரபாகரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைப்பார் என்றும் தொகுதி முழுவதிலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பார் என்றும் பிரேமலதா உறுதி அளித்தார்.

ALSO READ: தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கிய திமுக.. போதைப்பொருள் விற்பனை.! விலைவாசி உயர்வு.! இபிஎஸ் காட்டம்...
 
இந்த மாவட்டத்தின் முக்கிய தொழிலான  பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் நசிந்து வருகின்றது. அதில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க விஜய பிரபாகரன் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவார் என்று பிரேமலதா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்