வேலூரில் தேர்தல் ரத்து ? – குடியரசு தலைவருக்குப் பரிந்துரை !

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (09:00 IST)
வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதை அடுத்து தேர்தலை ரத்து செய்யும் முயற்சிகள் நடைபெற்றுவருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி மற்றும் அவரது ஆதரவளரான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் கொடவுன் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல கோடி ரூபாய் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்துக்கு இது சம்மந்தமான தகவல்களை ஏப்ரல் 3 ஆம் தேதி அளித்தது.

சோதனைகள் நடைபெற்ற போதே வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என சந்தேகங்கள் எழுந்தன. இது சம்மந்தமாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய போது ‘அதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்’ எனக் கூறி மழுப்பினார். இந்நிலையில் இப்போது தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தேசிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளன.

வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை ரத்து செய்வதற்க்கான பரிந்துரையை குடியரசு தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசியலில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்