மத்திய மாநில அரசுகளின் புதிய சதி: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட துரைமுருகன்

ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (18:15 IST)
மத்திய மாநில அரசுகள் வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றியை தடுக்க புதிய சதி செய்துள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் திடுக்கிடும் தகவலுடன் கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
'தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். எதிரும் புதிருமாக நிற்பவர்கள் கருத்துப் போர் புரிவதுண்டு. அதுதான் அரசியல். எதிர்த்து நிற்பவரை தனிப்பட்ட முறையில் பழிவாங்க நினைப்பதும், வீண்பழி சுமத்தி அவமானத்திற்கு உள்ளாக்க முயற்சிப்பதும் இன்றைய அரசியலில் ஆளுங்கட்சி தரப்பில் மேலோங்கி நிற்கிறது.
 
இதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் வேட்பாளர் கதிர் ஆனந்த் வீடு, கல்லூரியை வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய செயல். இத்தோடு நிற்கவில்லை மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள்.
 
எங்களைச் சுற்றி ஒரு கண்காணிப்பு வளையத்தை உருவாக்கி அவர்கள் கண்காணித்து வருகிறார்கள். இதுவும் போதாது என்று மேலும் சில செயல்களில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடப்போவதாக எங்களுக்குச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
 
எங்கள் வீடு, கல்லூரி சோதனைகளில் எதுவும் சட்டத்திற்குப் புறம்பான பொருட்களைக் கைப்பற்ற முடியவில்லை என்பதால் எங்களை எப்படியும் பழிவாங்கியே தீருவது என்ற முடிவோடு, தேர்தல் நெருக்கத்தில் எங்களுக்கு சொந்தமான இடங்களில் அவர்களாகவே ஏதாவது பொருட்களை வைத்து விட்டு, இவர்கள் புதிதாக கண்டுபிடித்துவிட்டதாக அவற்றைக் காட்டி எங்கள் மீது வீண் பழி சுமத்த முயற்சி நடப்பதாக அறிகிறோம்.
 
இதன் மூலம் கதிர் ஆனந்தின் வெற்றியை சீர்குலைத்துவிடலாம் என்று இந்த அரசுகள் பெரும் முயற்சி எடுப்பதாகத் தகவல். இத்தகைய போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல கடைந்தெடுத்த பாசிச முறையாகும்''
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்