இணையத்தில் உணவு, பயணம், ஹோட்டல் என பல விஷயங்களுக்கும் அப்ளிகேசன்கள் வந்துவிட்டன. அதை இன்ஸ்டால் செய்து வைத்து கொண்டு அதில் சலுகை விலையில் உணவு கிடைத்தால் அதை வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து சாப்பிட்டு கொள்ளலாம்.
ஆனால் தெரியாத ஒரு இடத்தில் பயணிக்கும்போது அல்லது அவசரமாக எங்காவது போய் கொண்டிருக்கும்போது பத்து நிமிட அவகாசத்தில் சாப்பிட வேண்டும் என்றால் என்ன செய்வது? அதற்கு உதவ வந்திருப்பதுதான் கூகுள் மேப்பின் புதிய ஆப்சன்.
இந்தியாவில் தொடக்கமாக முக்கியமான சில நகரங்களில் மட்டும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் மேப் அப்ளிகேசனில் நீங்கள் பயணிக்கும் இடத்தை பார்த்து கொள்வது போல, போகும் வழியில் இருக்கும் உணவகங்கள் அங்குள்ள உணவுப்பொருட்களின் விலைப்பட்டியல், சலுகைவிலை ஆகியவற்றை காண்பிக்கும் புதிய ஆப்சனை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் நடந்து செல்லும் பாதையில் எதிரே இருக்கும் உணவகத்தில் பீட்சா 50 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது என்றாலும் அது கூகுள் மேப்பில் காட்டிவிடும்.
இதுபோலவே சலுகை விலையில் உள்ள விடுதிகள் போன்ற இன்னப்பிற வசதிகளையும் எதிர்காலத்தில் சேர்க்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது பரிசோதனை முயற்சியாக இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூர், கோவா, சென்னை, கல்கத்தா ஹைதராபாத் உள்ளிட்ட 11 நகரங்களில் உள்ள 4000க்கும் மேற்பட்ட உணவகங்கள் கூகுளோடு இணைந்து இந்த சேவையை வழங்கியுள்ளன. இன்னும் பல உணவகங்கள் இணைக்கப்பட உள்ளன.
இந்த வசதி வெற்றிகரமாக செயல்பட்டால் மேலும் பல ஊர்களிலும் விரிவுப்படுத்தப்படும் என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.