தமிழக அரசு கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே, இந்த திட்டத்தில் விண்ணப்பிக்காத மாணவிகள் தற்போது மீண்டும் ஒரு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகள், நவம்பர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு முதலமைச்சரால் 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு/ தொழில்நுட்பப் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைபெண் திட்டம் துவங்கப்பட்டது. இதுவரை 2,3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித் தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள்.
தற்போது http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணைய தளத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இந்த வலைத்தளத்தில், மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள், மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக) எமிஸ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2,3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநராக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளிவரை, காலை 10 மணி முதல் 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் நவம்பர் 11ஆம் தேதிக்குள் தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.