சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது 100வது போட்டியில் சதம் எடுத்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. அதே போட்டியில் அவர் இரட்டை சதமும் அடித்து சாதனை செய்தார். தற்போது 35 வயதாகும் அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமாக விளையாடி, தலையில் அடிபட்டி கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் மீண்டும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்ப வாய்ப்புள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுபற்றி ஐசிசி போட்காஸ்ட்டில் பேசியுள்ள ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “வார்னர் 100 ஆவது டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்த போது ஓய்வு பெற்றிருக்க வேண்டும். தனது சொந்த ஊரில் சிட்னி ரசிகர்களுக்கு முன்பாக விளையாடிய போட்டியோடு விலகியிருந்தால், அது சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவரின் போராடும் தன்மையே அவரின் கேரியர் எங்கே முடியும் என்பதை நிரூபிக்கும்” எனக் கூறியுள்ளார்.