சர்கஸில் இருந்து தப்பி; ரோட்டில் ஆட்டம்: வரிக்குதிரை சுட்டுக்கொலை!

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (17:19 IST)
சர்க்கஸ் குழுவிலிருந்து தப்பித்து நகர சாலைகளில் சுதந்திரமாக சுற்றிய வரிக்குதிரையால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டதால் அதை காவல்துறையினரே சுட்டுக்கொன்ற சம்பவம் ஜெர்மனியில் நடந்தேறியுள்ளது.
 
ஜெர்மனியின் வடக்குப்பகுதியிலுள்ள ரோஸ்டோக் நகரத்தின் முக்கிய சாலைகளில் சுற்றித் திரிந்த வரிக்குதிரையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், கார்கள் சேதமாகி விபத்துகளும் ஏற்பட்டதால் அதை சுட்டுக்கொன்றதாக அந்நகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
அதே போன்று, அதே சர்க்கஸிலிருந்து தப்பியோடிய மற்றொரு வரிக்குதிரை உயிருடன் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிக்குதிரை மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இந்த இரண்டு வரிக்குதிரைகளும் சர்கஸிலிருந்து எப்படி தப்பித்தன என்பதில் தெளிவில்லை. 
 
"சாலையின் நேரெதிர் திசையில் வரிக்குதிரை சென்றதால் உடனடியாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன்பின்னொன்று மோதி விபத்துக்குள்ளாயின. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையை தற்காலிகமாக மூடும் நிலை ஏற்பட்டது" என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
வரிக்குதிரையை உயிருடன் பிடிக்காமல் சுட்டுக்கொன்ற காவல்துறைக்கு எதிராக சமூக ஊடகங்களில் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்