கொழும்பு குதிரை பந்தய திடலில் பெண்ணின் சடலம் மீட்பு – நடந்தது என்ன?

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (14:00 IST)
கொழும்பிலுள்ள குதிரை பந்தய திடலில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு 07 பகுதியிலுள்ள குதிரை பந்தயத் திடலில் நேற்றுபிற்பகல் சடலமொன்று காணப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, குதிரை பந்தயத் திடலுக்கு போலீஸ் குழுவொன்று சென்று விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

குதிரை பந்தயத் திடலிலுள்ள படிகளின் மீது, யுவதியொருவர், கழுத்து வெட்டப்பட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிசிடிவி காணொளிகளின் ஊடாக போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட யுவதி, கொழும்பு புறநகர் பகுதியான ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 24 வயதானவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி என்பதும் விசாரணை அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குதிரை பந்தயத் திடலுக்கு அண்மித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளியை அடிப்படையாகக் கொண்டு, இந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 24 வயதான கொழும்பு - வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி ஒன்றும், பையொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் மிக நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், தமது காதலை நிறுத்திக் கொள்வோம் என கொலை செய்யப்பட்ட யுவதி, குறித்த இளைஞரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே, இருவரும் கொழும்பு குதிரை பந்தயத் திடலுக்கு நேற்றையதினம் சென்றுள்ளனர்.

பல்கலைக்கழக விரிவுரைகள் முடிவடைந்ததை அடுத்தே, இருவரும் இவ்வாறு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர், கொலையை செய்ததை அடுத்து, அவரும் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறுகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்