பேஸ்புக், ட்விட்டர் தளங்கள் மீது சோனியா காந்தி கோபமடைந்தது ஏன்?

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (15:29 IST)
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மீது காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கோபமாக இருப்பது போல அவரது அண்மைக்கால செயல்பாடுகள் உள்ளன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் சமூக ஊடகங்களின் தலையீடு குறித்த பிரச்னையை திங்களன்று அவர் நாடாளுமன்றத்தில் எழுப்பினார்.

மக்களவையில் கேள்வி நேரம் முடிந்ததும் முக்கிய பிரச்னைகளை எழுப்பும் நேரத்தில், "உலகளாவிய சமூக ஊடக நிறுவனங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதில்லை. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற உலகளாவிய நிறுவனங்களை அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் அரசியல் கருத்துருவாக்கம் செய்யப் பயன்படுத்துகின்றன" என்று அவர் கூறினார்.

அரசாங்கம் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களை குறிவைத்து அவர் மேலும் கூறுகையில், "அரசாங்கம் மற்றும் முகநூல் கூட்டு சேர்ந்து சமூக நல்லிணக்க சீர்குலைவுக்கு வழிவகுக்கின்றன. இது நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது" என்றார்.

சமூக ஊடக நிறுவனங்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சோனியா காந்தி மக்களவையில் பேசினார்.

"முகநூலில் ப்ராக்ஸி விளம்பர நிறுவனங்கள் தங்களை ஊடக நிறுவனங்கள் என்று சொல்லிக் கொண்டு வளர்ந்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் தேர்தல் நடத்தை விதிகளை வெளிப்படையாகவே மீறுகின்றன. முகநூல் தனது சொந்த விதிகளையே புறக்கணித்து, அரசுக்கு எதிராகப் பேசுபவர்களின் குரல்களை நசுக்குகிறது" என்றார்.

"பெரிய நிறுவனங்கள், அரசாங்கம் மற்றும் முகநூல் போன்ற பெரிய சமூக ஊடக நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வருகின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.

ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்கள் அரசியலில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று மக்களவையில் சோனியா காந்தி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டது, யார் ஆட்சியில் இருந்தாலும், ஜனநாயகத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

'அல் ஜஸீரா' மற்றும் 'தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்' வெளியிட்ட அறிக்கைகள்

சோனியா காந்தி தனது உரையில், அல் ஜஸீரா மற்றும் 'தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்' பத்திரிகைகள், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைகளையும் மேற்கோள் காட்டினார்.

அல் ஜஸீராவில் வெளியிடப்பட்ட அறிக்கையானது, 22 மாதங்களில் (பிப்ரவரி 2019 முதல் நவம்பர் 2020 வரை) முகநூலில் வெளியிடப்பட்ட ஐந்து லட்சத்துக்கும் அதிகமான அரசியல் விளம்பரங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில், ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் மற்றும் ad.watch ஆகியவற்றின் கூட்டு விசாரணை அறிக்கையாகும்.

இந்த அறிக்கை மூன்று பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக மற்றும் காங்கிரஸிடம் இருந்து அரசியல் விளம்பரங்களுக்கு முகநூல் எப்படி வெவ்வேறு கட்டணங்களை வசூலித்தது என்பதை இந்த அறிக்கையின் ஒரு பகுதி விவரிக்கிறது.

இந்த விளம்பரங்களுக்கு ஒரு மில்லியன் பார்வைகளை பெற, பாஜக மற்றும் அதன் வேட்பாளர்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளிடம் இருந்து சராசரியாக ரூ.41,844 வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், அதே பணிக்காக, காங்கிரஸ் கட்சி மற்றும் அவர்களது வேட்பாளர்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளிடமிருந்து ரூ.53,776 வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் பகுப்பாய்வு கூறுகிறது. அதாவது, 29 சதவீதம் அதிகம்.

பாஜக தொடர்பான விளம்பரங்களை, பினாமி மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் பரப்ப, முகநூல் எப்படி அனுமதித்தது என்பதை அறிக்கையின் இரண்டாம் பாகம் விவரித்துள்ளது.

இதன் காரணமாக, தேர்தல் நேரத்தில் பாஜக தொடர்பான விளம்பரங்கள் அதிகமான மக்களைச் சென்றடைந்தது. இன்னொரு பக்கம், எதிர்கட்சிகள் தொடர்பான விளம்பரங்களைப் பரப்பும் இது போன்ற அநாமதேய மற்றும் போலி நிறுவனங்களின் இடுகைகள் மீது முகநூல் நடவடிக்கை எடுத்தது. ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனம் எப்படி முகநூலில் பாஜக ஆதரவு பிரச்சாரத்தை விளம்பரப்படுத்தியது என்பது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் மூன்றாவது பகுதியில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசியல் விளம்பரதாரர்களின் தரவை அவர்கள் எவ்வாறு அணுகினார்கள் என்பது குறித்தும் எந்தெந்த ப்ராக்ஸி விளம்பரதாரர்கள் எந்தக் கட்சி அல்லது சித்தாந்தத்தின் ஆதரவாளர்கள் என்பதைக் கண்டறிந்தது எப்படி என்பது குறித்தும் விவரித்துள்ளது.

இந்த விசாரணை அறிக்கையின் நான்காம் பகுதி இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியிடப்படவுள்ள இந்தப் பகுதி, மக்களின் நியூஸ்ஃபீடில் எவ்வாறு பதிவுகள் காண்கின்றன என்பதை விளக்கும் முகநூல் அல்காரிதம் பற்றி விவரிக்கும் என்றும், இந்த அல்காரிதம் பாஜகவுக்குச் சாதகமாக எப்படி இருக்கிறது என்பது குறித்தும் விளக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், 2020 ஆம் ஆண்டில், உலகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போது, சமூக ஊடக தளமான முகநூல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டிஜிட்டல் தளமான ரிலையன்ஸ் ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரிலையன்ஸ் ஜியோவில் 9.99 சதவீத பங்குதாரராக முகநூல் ஆனது.

முகநூலின் விளக்கம்

ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் தனது அறிக்கையில் முகநூலின் பதிலையும் வெளியிட்டுள்ளது.
முகநூலின் உரிமை கொண்ட மெட்டா நிறுவனம், தனது பதிலில், "ஒரு நிறுவனத்தின் அரசியல் நிலை அல்லது தொடர்பைப் பொருட்படுத்தாமல், எங்கள் கொள்கைகளை அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்துகிறோம். இங்கு வெளியாகும் விஷயம் தொடர்பான எந்தத் தனிப்பட்ட முடிவையும் எந்தவொரு தனிநபராலும் எடுக்கப்படுவதில்லை. மாறாக, இந்த முடிவுகள் பரந்த அளவிலான சிந்தனை, செயல்முறை மற்றும் புரிதலை பிரதிபலிக்கின்றன. எங்கள் நிறுவனம், உள்ளூர் மற்றும் உலகளாவிய தேவைகளை கவனத்தில் கொள்கிறது" என்று தெரிவித்தது.
மெட்டா என்பது முகநூலின் கார்ப்பரேட் பெயர்.


இருப்பினும், பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் விளம்பரங்களை வெளியிடத் தனியாகப் பணம் ஏன் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து முகநூல் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ், தன் அறிக்கை குறித்த தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவின் விளக்கங்களையும் கோரியது. ஆனால், அவை, இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

முன்னரே குற்றம் சாட்டப்பட்ட முகநூல்

கடந்த ஆண்டு வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற சர்வதேச செய்தித்தாளில் வெளியான செய்தியையும் சோனியா காந்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல், கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் தனது வணிக நலன்களைக் கருத்தில் கொண்டு பாஜக தலைவர்களின் வெறுப்பு பேச்சுகள் மீது முகநூல் கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறியிருந்தது.

அந்த நேரத்தில் கூட, காங்கிரஸ் கட்சி, முகநூல் அதிகாரிகளையும் பாரதிய ஜனதாவையும் விமர்சித்து, இது குறித்து விசாரணை நடத்தக் கோரி, முகநூல் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு கடிதம் எழுதியது.

இந்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் அப்போதைய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மார்க் சக்கர்பெர்கிற்கு எழுதிய கடிதத்தில், அவரது சமூக ஊடக தளம் வலதுசாரி சித்தாந்தவாதிகளின் பதிவுகளைத் தணிக்கை செய்வதாக குற்றம் சாட்டியதையடுத்து, இந்த விவகாரம் புதிய திருப்பத்தை எடுத்தது.

அமெரிக்க செய்தித்தாள் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் எழுதப்பட்டவை உண்மைக்குப் புறம்பாகவும் முற்றிலும் நேரெதிரான பிம்பத்தை வழங்குவதாகவும் உள்ளதாக அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார். வதந்திகளைப் பரப்பி இந்திய அரசியலமைப்பில் தலையிடுவது கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து முகநூல் நிறுவனம் அளித்த விளக்கத்தில், 'வெறுப்பைப்பரப்பும் பேச்சு' என்பதற்கு எதிரான அதன் கொள்கை என்பது சுதந்திரமானது என்றும், எந்த கட்சி அல்லது சித்தாந்தத்திற்கும் ஆதரவாகவோ எதிராகவோ எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.

மத்திய அரசுடனான ட்விட்டரின் மோதல்

இந்த முறை சோனியா காந்தி முகநூல் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் வெறுப்பை பரப்புவதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல மோதல்கள் உள்ளன.

பிப்ரவரி 2021 இல், IT சட்டத்தின் பிரிவு-69A இன் கீழ் பல ட்விட்டர் கணக்குகளை இடைநிறுத்துமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டதாக ட்விட்டர் கூறியது. இதற்குப் பிறகு, ட்விட்டர் சில கணக்குகளை முடக்கியது மற்றும் சிலவற்றுக்குக் கட்டுப்பாடுகளை விதித்தது, ஆனால், பின்னர், "மத்திய அரசு ட்விட்டர் கணக்குகளை மூடச் சொன்னது இந்திய சட்டங்களின்படி இல்லை" என்று கூறியது.

இதைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறியதற்காக ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

24 மே 2021 அன்று, 'டூல்கிட் மேனிபுலேஷன் மீடியா' வழக்கின் விசாரணை தொடர்பாக டெல்லி காவல்துறையின் குழு ட்விட்டர் இந்தியாவின் பல அலுவலகங்களைத் தொடர்பு கொண்டது. அதே நாளில், இந்த விவகாரங்கள் தொடர்பாக ட்விட்டர் இந்தியாவுக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நடத்தை விதிகள்) விதிகள் 2021க்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இவை மே 25 முதல் நடைமுறைக்கு வந்தன. புதிய விதிகளின்படி, 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக ஊடகதளம், எந்த உரையாடல் அல்லது செய்தியின் தோற்றத்தையும் அடையாளம் காண முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இதையடுத்து, பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கு சிறிது நேரம் முடக்கப்பட்டது. அதற்கு முன், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கின் ப்ளூ டிக் சிறிது நேரம் நீக்கப்பட்டதும் சிறிது நேரம் கழித்து அது மீட்டெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கவை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்