இலங்கையில் பொருளாதாரம் எப்போது இயல்புக்கு திரும்பும்? மத்திய வங்கி ஆளுநர் என்ன சொல்கிறார்?

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (23:42 IST)
இலங்கையின் பொருளாதாரம் 2023ஆம் ஆண்டு வழமைக்கு திரும்பும் என நம்புவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
அதிகரித்து சென்ற பணவீக்கமானது, தற்போது 70 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
கொழும்பு விலைச் சுட்டெண் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பணவீக்கம் குறைவடைந்து செல்வதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
 
இதன்படி, இந்த பணவீக்கமானது எதிர்வரும் காலங்களில் மேலும் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
 
கடந்த காலங்களில் நாடு எதிர்நோக்கியிருந்த நிலையை பார்க்கும்போது, அந்த நிலைமை தற்போது முழுமையாக மாற்றமடைந்து வருவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு அமைய, ஓரளவு ஸ்திர தன்மையை அடைந்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
 
அந்நிய செலாவணி சந்தையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், தேசிய மட்டத்திலும் ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
 
 
2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 73.7 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 70.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், உணவுப் பணவீக்கம் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 85.8 சதவீதமாக காணப்பட்ட நிலையில், அது அக்டோபர் மாதத்தில் 80.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
 
உணவல்லா பணவீக்கம், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 62.8 வீதமாக காணப்பட்டதுடன், அது அக்டோபர் மாதத்தில் 61.3 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
 
போதைப்பொருள் என்ற சந்தேகத்தில் பிடிபட்ட 394 கிலோ வெள்ளை பவுடர்: என்ன தெரியுமா?
 
மாதாந்த அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம், அதன் அண்மைய மிதமடைதல் போக்கினைத் தொடர்ந்து, 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 0.28 சதவீதத்தைப் பதிவு செய்துள்ளது.
 
0.41 சதவீதமாக காணப்பட்ட உணவு வகையிலுள்ள பொருட்களின் மாதாந்த விலைகளில் வீழ்ச்சி, இதற்கு பிரதானமாகப் பங்களித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க
 
அதற்கமைய, உணவு வகையினுள் மீன், அரிசி மற்றும் கருவாடு, தேங்காய் எண்ணெய் என்பவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் அவதானிக்கப்பட்டன.
 
எவ்வாறிருப்பினும், மாத காலப்பகுதியில் சுகாதாரம் (மருத்துவ/மருந்தக உற்பத்திகள் கொள்வனவு அத்துடன் தனியார் வைத்தியசாலைகளுக்கான/ சிகிச்சை நிலையங்களுக்கான கொடுப்பனவுகள்), ஓய்வு மற்றும் கலாசாரம் (அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் காகிதாதிகள்), தளபாடம், வீட்டுச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டுப் பராமரிப்பு, மதுபான வகைகள் மற்றும் புகையிலை, நானாவித பொருட்கள் மற்றும் சேவைகள் துணைத் துறைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக உணவல்லா வகை 2022 அக்டோபரில் 0.69 சதவீதம் கொண்ட மாதாந்த அதிகரிப்பினைப் பதிவு செய்தது.
 
எனினும், போக்குவரத்து (பெட்ரோல் மற்றும் டீசல்), துணை வகை 2022 அக்டோபரில் குறைவடைந்து உணவல்லா வகையில் ஒட்டுமொத்த மாதாந்த அதிகரிப்பு பாரியளவில் மிதமடைவதற்குப் பங்களித்தது.
 
அதேவேளை, ஆண்டுச் சராசரிப் பணவீக்கம் 2022 செப்டம்பரில் 36.9 சதவீதத்திலிருந்து அக்டோபரில் 42.2 சதவீதமாக அதிகரித்தது.
 
பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 செப்டம்பரில்; 64.1 சதவீதத்திலிருந்து அக்டோபரில் 62.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம், 2022 செப்டம்பரில் 31.0 சதவீதத்திலிருந்து அக்டோபரில் 35.7 சதவீதமாக அதிகரித்தது.
 
நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்காக இலகுவான வழிமுறையில் செய்ய வேண்டிய பணிகளை, மிகவும் சிரமமான வழிகளில் செய்ய முயற்சித்து வருவதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.
 
நாட்டை கட்டியெழுப்புகின்றமை தொடர்பில், பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
''நான் நினைக்கின்ற விதத்தில், நாட்டை நிச்சயமாக வழமைக்கு கொண்டு வர முடியும். இவர்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
 
நோயாளர் ஒருவரின் வயிற்றை சுத்திகரித்து, நோயாளர்களை கொலை செய்யும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இறுதியில் நோயாளர் உயிரிழப்பாராயின், அந்த சத்திர சிகிச்சை பலனற்றது அல்லவா?
 
அந்த நோயாளியை வாழ வைப்பதற்கு வேறு வழிமுறைகளை எடுக்க முடியும். அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்காமையே, எனக்குள்ள பிரச்சினையாக காணப்படுகின்றது.
 
அந்த நோயாளியை வாழ வைப்பதற்கு வேறு வழிமுறைகளை எடுக்க முடியும். அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்காமையே, எனக்குள்ள பிரச்சினையாக காணப்படுகின்றது.
 
இது சிலர் மனதில் நினைக்கின்ற விதத்தில், வேறு வழியில் கொண்டு செல்கின்றனர். இது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். நீண்ட காலம் எடுக்கும்.
 
ஆனால், நாட்டை அதற்கு முன்னர் வழமைக்கு கொண்டு வர முடியும். நாடொன்றில் பொருளாதார நடைமுறையொன்றை கொண்டு செல்ல வேண்டியதை முழுமையாக மாற்றி, வீழ்ச்சி அடைய செய்துள்ளனர்.
 
வீழ்ச்சி அடைந்ததை வேறொரு வழியில் சரி செய்ய பார்க்கின்றார்கள். இந்த மருத்துவரினால் வழங்கப்படுகின்ற மருந்தை விடவும், இலகுவான முறையில் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் இருக்கின்றன.
 
அந்த மருந்து வகைகளை பயன்படுத்தாமல், மிகவும் சிரமமான மருந்தொன்றை பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள். நான் நினைக்கின்ற விதத்தில், எதிர்வரும் ஜுலை, ஆகஸ்ட் மாதம் வரை மிகவும் சிரமமான பயணமொன்றை செல்ல வேண்டியுள்ளது.
 
அந்த காலப் பகுதிக்குள் நாட்டை அபிவிருத்தி செய்யும் வழிக்குள் செல்ல முயற்சிக்க முடியும் என நான் நினைக்கின்றேன்" என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்