பல்வேறு நாடுகளில் இருந்து மோசடியாக செயல்பட்டு வந்த வாட்ஸ் அப் கணக்குகளை இந்தியாவின் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். டிஜிட்டல் மோசடிகளை தடுக்கும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, 17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கம்போடியா, மியான்மர், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்த வாட்ஸ் அப் கணக்குகள் செயல்படுத்தப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் தளங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நடந்த விசாரணையின் போது, குற்றன் செய்ய உதவியாக இருந்த வாட்ஸ் அப் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான கணக்குகளை அடையாளம் கண்டதுடன், அவற்றை தடுக்க மத்திய அரசு வாட்ஸ் அப்புக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அமலாக்க பிரிவு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து டிஜிட்டல் மோசடிகளை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.