குழந்தை பேறு பெண்ணின் மூளையில் எம்மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது?

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (12:31 IST)
ஒரு பெண் கர்ப்பமானபோதும் குழந்தை பெற்றெடுத்த பிறகும் அவரின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால் நமக்கு தெரியாத ஒன்றும் உள்ளது. அது குழந்தை பேறு பெண்ணின் மூளை அமைப்பையும் மாற்றும் என்பதுதான்.

குழந்தையை கருவில் சுமக்காத தாயோ அல்லது தந்தையோ குழந்தையை பார்த்து கொள்வதன் மூலம் அவர்களின் மூளையின் மாற்றம் ஏற்படுகிறது.

குழந்தை பெறுவது மூளையை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆராய்ந்த நிபுணர் குழுவை நேர்காணல் செய்து பிபிசி அறிவியல் பத்திரிகையாளர் மெலிசா ஹோஜென்பூம் செய்தி வெளியிட்டுள்ளார்.

"கர்ப்ப காலத்தின்போது பெண்ணை தாயாக மாற்றுவதற்காக ஹார்மோன்களில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றமானது பெண்ணின் மூளையில் பெரும் தாக்கம் செலுத்தும்." என அமெரிக்காவில் உள்ள டென்வர் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் பில்யூங் கிம் தெரிவிக்கிறார்.

"ஒரு தாய்க்கு குழந்தை பேறுக்கு பிறகு ஏற்படும் மன உளைச்சல் சமயத்தின் முதல் மாதத்தில் தாயின் மூளை விரிவடைகிறது." என பில் தெரிவித்தார்.

கர்ப்பமான பெண்களுக்கு மறதி அதிகமாக இருக்கும் என்றும், அவர்கள் கவனம் செலுத்துவதில் சிரமப்படுவார்கள் என்றும் நிலவும் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது என்கிறார் அவர்.

இருப்பினும் சுவிட்சர்லாந்தில் உள்ள லாசேன் பல்கலைக்கழக மருத்துவமனையை சேர்ந்த நரம்பியல் வல்லுநரான ஏன் மேரி டெ லாங்கே அது கட்டுக்கதை இல்லை என்கிறார். "பொதுவாக பெண்கள் கர்ப்ப காலத்தில் தங்கள் மனநிலை அத்தனை சிறப்பாக இல்லை என்று உணர்கிறார்கள்" என்கிறார்.

டெ லாங்கே, பெண்களின் மூளை விரிவடைந்தாலும் அவர்கள் ஏன் இவ்வாறு உணர்கிறார்கள் என்பதை ஒரு கோட்பாட்டை கொண்டு விளக்குகிறார்.

"இந்த காலத்தில் மூளை பிற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும். தன்னை தானே மாற்றிக் கொள்ளும்," என்கிறார் அவர்.

"இந்த மாற்றங்கள் குழந்தையிடம் ஏற்பட்ட பிணைப்புடன் தொடர்புடையது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன" என்கிறார் அவர்.

மூளையில் மாற்றங்கள்

தாய்மை தொடர்புடைய கட்டமைப்பு வளர்ச்சி மூளையின் எந்த பகுதியில் ஏற்படுகிறது என்பதை விஞ்ஞானிகளும் பிற வல்லுநர்களும் கண்டறிந்துள்ளனர்.

ஒன்று மூளையின் ரிவார்ட் சர்க்யூட் என்ற பகுதி. அதில்தான் பிரீஃப்ரன்டல் கார்டெக்ஸ் (முன்வெளிப் புறணி) பகுதியும், மூளையின் மத்தியில் உள்ள சிறுசிறு பகுதிகளும் அடக்கம்.

இந்த மாற்றங்கள் குழந்தையின் அழுகையை கண்டு ஒரு தாய் உணர்ச்சிவயப்படுவதற்கான உணர்வை தருகிறது. அதேபோல அவர்கள் குழந்தைகளின் சிரிப்பை கண்டால் மகிழ்ச்சியடைகிறார்கள்.

அதேபோன்று உணர்ச்சி கட்டுப்பாடுகளுடன் தொடர்பான மூளை பகுதியிலும் மாற்றங்கள் ஏற்படும். இது குழந்தை அழும்பொழுது தாய் தனது வருத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

அதேபோன்று கற்பது மற்றும் முடிவுகளை மேற்கொள்ள உதவும் மூளையின் பிரீஃப்ரன்டல் கார்டெக்ஸிலும் மாற்றம் நிகழும். அது தாய் ஒரு சிறந்த முடிவை எடுப்பதற்கு உதவி செய்யும்.

மறுபுறம் அனுதாபம் தொடர்பான ஆறு பகுதிகளிலும் மாற்றங்கள் நிகழும் அது குழந்தை என்ன நினைக்கிறது என்பதை தாய் புரிந்துகொள்ள உதவும்.

அதேபோன்று சுவை, வாசம், தொடுதல், கேட்டல் மற்றும் பார்வை தொடர்பான மூளையின் பகுதி முன்னேற்றமடையும் அது பிறந்த குழந்தையுடன் தாய்மார்கள் உரையாட உதவும்.

"நாம் பரிணாம வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், குழந்தையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை ஊக்குவிக்கும் எந்த மாற்றமும் குழந்தைக்கு மட்டும் பயன் தருவது இல்லை. தாயின் இனப்பெருக்க வெற்றிக்கானதாகவும் உள்ளது" என்கிறார் டெ லாங்.

சில கர்ப்ப கால மாற்றங்கள் குழந்தை பிறந்த பிறகு மறைந்து பழைய நிலைமை திரும்பலாம். ஆனால் சில மாற்றங்கள் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

மூளையின் மாறும் தன்மை

அதிக காலம் நீடிக்கும் மாற்றங்கள் குழந்தை பேறு மற்றும் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் நிகழ்கின்றனவா அல்லது மூளை அந்த சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்வதால் ஏற்படுகிறதா என்பதை நிபுணர்களால் கண்டறிய இயலவில்லை.

இதனை ஆங்கிலத்தில் 'பிரைன் பிளாஸ்டிசிட்டி அல்லது நியூரோபிளாஸ்டிசிட்டி' என்பார்கள் அதாவது நமது மூளை வெளிப்புற அல்லது உள்புற சூழலுக்கு ஏற்ப தனது நரம்பியல் அமைப்பை மாற்றிக் கொள்ளுவது இது.

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகளின் மூளை மட்டுமே சூழலுக்கு ஏற்ப மாறும் என்று நம்பப்பட்டது. ஆனால் வளர்ந்தவர்களின் மூளையும் இவ்வாறுதான் செயல்படுகிறது.

அதேபோன்று ஒரு குழந்தையை வளர்ப்பது மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.

"அதிக அனுபவமுள்ள தாயின் மூளையில் உள்ள நியூரான்கள் அதிக தொடர்புகளுடன் இருக்கும்; அதுதான் குழந்தை வளர்ப்பில் முக்கியம்" என்கிறார் கிம்.

அதேபோன்று இந்த மாற்றங்கள் குழந்தையின் மூளையிலும் ஏற்படலாம்.

இஸ்ரேலில் ஆண் குழந்தை பெற்றுக் கொண்ட தம்பதியினரிடையே நடத்தப்பட்ட ஆய்வை கிம் சுட்டிக் காட்டுகிறார்.

"அது மிக சுவாரஸ்யமானது," என்கிறார். இரு பெற்றோருமே குழந்தையை நோக்கிய அதிக மூளை செயல்பாட்டுடன் இருப்பது தெரியவந்தது அதிலும் குழந்தையைப் பார்த்து கொள்ளும் பிரதான பெற்றோருக்கு மூளை உணர்திறன் சற்று அதிகமாக இருந்தது"

எனவே குழந்தை பெறுவது என்பது, கர்ப்ப காலத்தையும் தாண்டி தாய் அல்லது தந்தையின் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்கிறார் ஹூகென்பூம்.

"அதேபோன்று பெண்கள் மட்டுமே உயிரியல் ரீதியாக குழந்தையைப் பார்த்து கொள்ள படைக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை இது நிரூபிக்கிறது," என்கிறார்.

"கர்பக் காலம் நிச்சயம் உடலை தயார் செய்கிறது. ஆனால் நேரம் மற்றும் உணர்வு பிணைப்பின் தீவிரம் ஆகியவற்றை பொறுத்தே மூளையின் மாற்றம் நிகழும்" என்கிறார் அவர்.

ஆச்சரியமான கண்டுபிடிப்பு

பெண்களின் மூளையின் தாய்மை ஏற்படுத்தும் நீண்டகால மாற்றம் குறித்த ஆய்வு ஒரு எதிர்பாராத கண்டுபிடிப்பிற்கு வித்திட்டது.

லாசான் பல்கலைக்கழக மருத்துவமையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டெ லாங்கே மற்றும் அவரது குழுவினரின் ஆய்வில் அதிக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள் அதிக இளமையுடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.

"பொதுவான பெண்களுக்கு வயதானால் ஏற்படும் மாற்றங்களை காட்டிலும் அதிக குழந்தைகளை பெற்றெடுத்த தாயின் மூளையில் குறைவான மாற்றங்களே ஏற்படும்." என்கிறார் டெ லாங்.

"இளம் வயதில் குழந்தை பெறுவது, வயதாகும்போது நமது மூளையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இது காட்டுகிறது." என்கிறார் அவர்.

இருப்பினும் இந்த நன்மை மிகச்சிறிய அளவிலேயே இருக்கும். முதிர்ச்சியடையும் காரணங்களை ஊக்குவிக்கும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று.

அந்தப் பொருளில் தாய்மை, தூக்கமின்மை மற்றும் பிறருடன் அதிகம் பேசாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படும் அதிக மன அழுத்தத்துடன் இது தொடர்புடையது என்பதை காட்டுகிறது. இது வளர்ச்சியின் கட்டத்தை மட்டுமல்ல தாயின் மனநலத்தையும் பாதிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்