என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதித்து ஊடுருவ முடியும். மென்பொருளை இயக்குபவரால் அச்சாதனங்களில் இருந்து குறுஞ்செய்திகள், படங்கள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றை எடுக்க முடியும். அதேபோல அவர்களால் அழைப்புகளை பதிவு செய்யவும் சாதனங்களில் உள்ள கேமரா மற்றும் மைக்கை இயக்கவும் முடியும்.
குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் தீவிரவாதிகளை இலக்குவைக்கவே இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டதாக என்.எஸ்.ஓ குழு கூறி வருகிறது.
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரும் உளவு பார்க்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வரலாற்று ரீதியாக நல்ல மனித உரிமை பின்புலம் கொண்ட நாட்டின் ராணுவம், சட்ட அமலாக்க துறை முகமைகள், உளவுத்துறை முகமைகளுக்கு மட்டுமே பெகாசஸ் மென்பொருள் வழங்கப்படுவதாக என்.எஸ்.ஓ குழு கூறுகிறது.
என்.எஸ்.ஓ குழு நிறுவனத்தை அமெரிக்க அதிகாரிகள் இம்மாத தொடக்கத்தில் வர்த்தக ரீதியிலான கருப்பு பட்டியலில் வைத்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது.
மைக்ரோசாப்ட், மெட்டா (ஃபேஸ்புக்), கூகுள் ஆகிய நிறுவனங்கள் பெகாசஸ் விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்தை விமர்சித்தன. அதைத்தொடர்ந்து தற்போது ஆப்பிள் நிறுவனம் என்.எஸ்.ஓ குழு மீது வழக்கு தொடுத்துள்ளது.
ஆப்பிள் பயனர்களை இலக்குவைத்ததற்காகவும், அவர்களை உளவு பார்த்ததற்காகவும் என்.எஸ்.ஓ மற்றும் அதன் தாய் நிறுவனமான ஓ.எஸ்.ஒய் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை பொறுப்பேற்க வைக்க விரும்புவதாக ஆப்பிள் நிறுவனம் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மேற்கொண்டு இதுபோல ஆப்பிள் பயனர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, எந்த ஒரு ஆப்பிள் மென்பொருள் அல்லது ஆப்பிள் சேவை அல்லது ஆப்பிள் சாதனங்களையும் என்.எஸ்.ஓ குழு பயன்படுத்த நிரந்தர தடை விதிக்குமாறு வழக்கில் குறிப்பிட்டுள்ளதாகவும் ஆப்பிள் கூறியுள்ளது.
இந்த வழக்கு அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவின் வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கில் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் சாதனங்கள் ஆப்பிள் பயனர்களை இலக்கு வைக்கவும் தாக்கவும் கவலையளிக்கும் விதத்தில் 2021ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டன என்றும், அமெரிக்க குடிமக்கள் என்.எஸ்.ஓ உளவு மென்பொருளால் மொபைல்போன் சாதனங்கள் வழி வேவு பார்க்கப்பட்டது என்றும், இது எல்லை தாண்டி நடந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது ஆப்பிள்.
என்.எஸ்.ஓ குழு ஆப்பிள் பயனர்கள் மீது தாக்குதல் நடத்த 100-க்கும் மேற்பட்ட போலி ஆப்பிள் ஐடிக்களை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளது ஆப்பிள்.
என்.எஸ்.ஓ தாக்குதலில் ஆப்பிள் நிறுவன சர்வர்கள் ஹேக் செய்யப்படவில்லை, ஆனால் பயனர்கள் மீது தாக்குதல் நடத்த என்.எஸ்.ஓ குழு ஆப்பிள் சர்வர்களை தவறாக பயன்படுத்தியதாகவும், திசைதிருப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதெல்லாம் போக, பெகாசஸ் தாக்குதலை முதலில் கண்டுபிடித்த டொரான்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் லேப் உட்பட சைபர் கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழுக்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர், உட்பட இந்த வழக்கு மூலம் கிடைக்கும் பணத்தையும் நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் கூறியுள்ளது ஆப்பிள்.