ChatGPT என்பது என்ன? கூகுளின் கதை முடிந்ததா?

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (10:02 IST)
மனிதனைப் போலவே சிந்தித்து பதில் கூறும் ஒரு மென்பொருளைப் பற்றிய பேச்சைத் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக தொழில்நுட்ப உலகில் அதிகமாகக் கேட்க முடிகிறது. அதன் பெயர் ChatGPT
 
இதற்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்று பலரும் வியந்து கூறுகிறார்கள். உலகின் வருங்காலம் இதுதான் என்கிறார்கள். சற்று அதிகப்படியானதாக இருந்தாலும், இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.
 
கல்வி, வேலை வாய்ப்பு, பொழுதுபோக்கு, சினிமா, இலக்கியம் என அனைத்திலும் இதைப் பயன்படுத்த முடியும்.
 
இந்தப் புதிய தொழில்நுட்பம் மனிதனைப் போன்றே பதில்களைத் தருகிறது. புரியாதவற்றை விளக்குகிறது. சில பிழைகளும் குறைகளும் இருந்தாலும், இதன் திறனும் எதிர்காலத்தில் மேம்படுத்தப்படக்கூடிய வாய்ப்புகளும் உண்மையிலேயே வியக்க வைக்கிறது. இன்னொரு பக்கம் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
சாட்ஜிபிடி என்றால் என்ன, இதை எப்படி பயன்படுத்துவது, இதற்கு என்னவெல்லாம் தெரியும், இதைக் கண்டு சிலர் அஞ்சுவது ஏன் என்பது பற்றியெல்லாம்தான் இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
 
ChatGPT என்பது என்ன?
ChatGPT என்பது அடிப்படையில் ஒரு மெய்நிகர் ரோபோ. செயற்கை நுண்ணறிவுடன் இது செயல்படுகிறது. "ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெய்னிங் டிரான்ஸ்ஃபார்மர்" என்ற தொழில்நுட்பம்தான் GPT.
 
ஏற்கெனவே இதுபோன்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் பல்வேறு வகையான சாட்பாட்கள் இருக்கின்றன. படம் வரைவது, புகைப்படங்களை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வகையான செயலிகளில் உள்ளன. அவற்றில் இது புதிய வரவு.
 
இது அரட்டையடிக்கும் மென்பொருளைப் போன்றதுதான். உங்கள் இணைய உலவியில் இதைப் பயன்படுத்தலாம். செல்போன்களிலும், கணினியிலும் இது வேலை செய்யும்.
 
உங்களது கேள்விகளையோ, பணிகளையோ கொடுத்தால் அது சில நொடிகளில் உங்களுக்கு ஒரு நிபுணரைப் போல பதிலைக் கொடுக்கும்.
அமெரிக்காவில் 2015-ல் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஈலான் மஸ்க் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஓபன் ஏஐ என்னும் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. இது உருவான சில நாட்களிலேயே 10 லட்சம் பேர் இதைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்பதால் இது பரபரப்பாகப் பேசப்பட்டது.
 
ChatGPT-ஐ பயன்படுத்த கட்டணம் எவ்வளவு?
 
இப்போதைக்கு இது இலவசம்தான். 'சோதனை மற்றும் ஆய்வு' காலத்தில் இது அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் என்று ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இதற்கு கட்டணம் செலுத்த நேரிடலாம்.
 
ChatGPT என்னவெல்லாம் செய்யும்?
இது மனிதர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் மனிதர்களைப் போன்றே பதிலளிக்க முற்படுகிறது. எழுதிக் கொடுக்கப்பட்ட பணிகளை முடிக்கிறது. சரளமாக உரையாடுகிறது. தனிப்பட்ட பிரச்னைகள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்குகிறது
 
எடுத்துக்காட்டாக, சிக்கன் கறி தயாரிப்பது எப்படி நீங்கள் கேட்டால், அது உங்களுக்குச் சொல்லித்தரும். கவிதை எழுதுவது, கட்டுரைகள் வரைவது, நீண்ட நாட்களாக நீங்கள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பருக்குச் சமரசக் கடிதம் எழுதுவது போன்றவற்றைப் பற்றிய ஆலோசனைகளையும் இது வழங்க முடியும்.
 
கணினி நிரல்களை எழுதுவது, தவறுகளைக் கண்டறிவது போன்றவையும்கூட இந்த மென்பொருள் கருவியால் சாத்தியம்.
 
வாலி போலக் கவிதை எழுதச் சொன்னால் எழுதித் தரும். காய்ச்சலடிக்கிறது விடுப்புக் கடிதம் வேண்டும் செய்து தரும். உங்கள் காதலுக்கான வழிமுறைகளைக் கூடச் சொல்லித் தரும். இவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் நொடிகளில் பதில் தருவதுதான் இதன் சிறப்பு. சில குறைகள் இருக்கலாம். ஆனால் இது நிச்சயமாக உங்களுக்கு வியப்பைத் தரும்.
 
ChatGPT எப்படிச் செயல்படுகிறது?
முன்னரே கூறியதுபோல இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஒரு மெய்நிகர் ரோபோ. முழுவதும் டெக்ஸ்ட், அதாவது உரை அடிப்படையிலானது. அதனால் பெருமளவிலான தகவல்களைச் சேமித்து வைக்க முடியும். ஏற்கெனவே இருக்கும் வாக்கியங்களைப் புரிந்து கொள்வதற்கான அல்காரிதம்களைப் பயன்படுத்தி கேள்விகளுக்கு விடை அளிக்கின்றன.
 
இதற்கு பயிற்சியளிக்கும்போது, சில கேள்விகள் கேட்கப்பட்டு, வல்லுநர்கள் தரும் பதில்கள் உள்ளிடப்படுகின்றன. வழக்கமான பயனர்கள் கேட்கும் கேள்விகளில் இருந்தும் இது கற்றுக் கொள்கிறது. அது பதில் தவறாக இருந்தால், சரியான பதில் உள்ளிடப்படுகின்றன.
ஒரு மொழி எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் இதற்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. அதன்மூலம் கேள்விகளைப் புரிந்துகொண்டு விடையளிக்கிறது.
 
ChatGPT - இல் உள்ள குறைபாடுகள் என்னென்ன?
தகவல்களைக் கொண்டு வந்த தருவதில் கூகுளுக்கு இருக்கும் தனி ஆதிக்கத்திற்கு இது ஓர் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஆனாலும் இது தரும் தகவல்கள் பலவும் தற்சமயம் மிகவும் தவறாக இருக்கின்றன.
 
உதாரணமாக, ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது நோபல் பரிசு பெற்றிருக்கிறார்களா என்று கேட்டால், வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு பதில்களைத் தருகிறது. அவற்றில் பெரும்பாலானவை தவறாக இருக்கின்றன.
 
ஆங்கிலத்தைத் தவிர தமிழ் போன்ற பிற மொழிகளில் இதன் வாக்கிய அமைப்புகள் தவறாக இருக்கின்றன.
 
ChatGPT கல்விக்கும் படைப்பாற்றலுக்கும் அச்சுறுத்தலா?
ChatGPT - இன் புரோகிராம் எழுதும் திறன், மென்பொருள் துறையிலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
இத்தகைய தொழில்நுட்பத்தால் கல்வித்துறை தான் அதிகமாகப் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் பணிகளுக்கு இதைப் பயன்படுத்தத் தொடங்கியதையடுத்து, நியூயார்க்கில் கல்வி நிறுவனங்களில் இது தடை செய்யப்பட்டது.
 
மாணவர்கள் தங்களுடைய அசைன்மென்டுகளை இதன் மூலம் தயாரிப்பதால், இந்தியாவிலும் சில பல்கலைக்கழகங்கள் இதைத் தடை செய்திருக்கின்றன.
 
அப்படியே நகலெடுப்பது தவிர, மனிதக் கற்றலில் இது தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் நிலவுகிறது. உதாரணமாக, முன்னுரை, பொருளுரை, முடிவுரை என்று ஒழுங்கு படுத்தி நேர்த்தியாக ஒரு கட்டுரை எழுதும் மனிதர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
 
இன்னும் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் கருத்துத் திருட்டுப் பிரச்சினை. ChatGPT போன்ற மாடல்களின் பயிற்சியானது இணையத்தில் கிடைக்கும் செய்திகள், புத்தகங்கள் மற்றும் வலைப்பதிவுகள் போன்றவற்றின் அடிப்படையிலானது. அதனால் அது தரும் தீர்வுகள் மற்றவர்களால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட காப்புரிமை கொண்ட தகவல்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம்.
 
தகவல்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்ற ஆதாரங்களை அறியாததால், போலிச் செய்திகளைப் போல, பக்கச் சார்புடைய அல்லது தவறான தகவல்களை அடையாளம் காண்பதும் இதில் கடினமாகிறது. போலிச் செய்திகளும் பரவக்கூடும் என நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்