சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நம்ப முடியாத வகையில், சுகப்பிரசவக் குழந்தைகளைவிட குடல்களில் பாக்டீரியாக்களின் நிலையில் மாறுபாடு காணப்படுகிறது என்று இந்தத் துறையில் நடந்துள்ள மிகப் பெரிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நுண்ணுயிரிகள் பற்றிக் கண்டறியப் பட்டுள்ள இந்த முதல்நிலைத் தகவல்கள் நோய்த் தடுப்பு மண்டலத்தில் ``சமன்படுத்தும்'' காரணிகளாக அமையக் கூடும் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகள் வாழ்வின் பிற்காலத்தில் ஏன் சில ஆரோக்கியக் குறைபாடுகளுக்கு ஆளாகிறார்கள் என்பதற்கான காரணத்தை விளக்குவதற்கு இந்தத் தகவல்கள் உதவக்கூடும் என்கிறார்கள்.
பெண் குறி திரவங்களை பஞ்சினால் எடுத்து குழந்தையின் மீது பூசும் செயலில் ஈடுபடக் கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குடல் பாக்டீரியாக்கள் எந்த அளவுக்கு முக்கியமானவை?
மனித உடல் என்ற அமைப்பு முழுமையாக மனித செல்களை மட்டுமே கொண்டு இயங்குவதல்ல. மாறாக மனித உடலின் செல்களில் பாதியளவு பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் போன்ற நுண்ணுயிரிகளால் ஆனது.
அவற்றில் பெரும்பாலானவை நமது குடலில் வாழ்கின்றன. தொகுப்பாக அவை மைக்ரோபயோம் என்ற நுண்ணுயிரிகளின் தொகுப்பு என்று குறிப்பிடப்படுகின்றன.
ஒவ்வாமை, உடல் பருமன், பெருங்குடல் அழற்சி நோய், பார்க்கின்சன் எனப்படும் நரம்பியல் கோளாறுகளுடன் தொடர்புடையதாகவும், புற்றுநோய் மருந்துகள் செயல்படுமா என்பதுடன் தொடர்புள்ளதாகவும், மன அழுத்தம் மற்றும் மனச்சிதைவுக்கான நோய்களுக்கான மருந்துகள் பலன் தருமா என்பதுடன் தொடர்புள்ளதாகவும் இந்த மைக்ரோபயோம் உள்ளது.
பர்மிங்ஹாம் பல்கலைக்கழகமும், வெல்கம் சாங்கர் இன்ஸ்டிடியூட், யு.சி.எல். அமைப்பும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. கிருமிகள் இல்லாத தாயின் கருவறையில் இருந்து கிருமிகள் நிறைந்த உலகிற்கு வந்தவுடன், இந்த மைக்ரோபயோம் எப்படி உருவாகிறது என்பதை இந்த ஆய்வு கவனித்தது.
சுமார் 600 குழந்தைகளின் முதல் ஒரு மாத காலத்துக்கான இடுப்புத் துணிகள் பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப் பட்டன. சில குழந்தைகளின் ஓராண்டு காலம் வரையிலான மலம் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.
சுகப்பிரசவத்தில் பிறந்த பெரும்பாலான குழந்தைகளுக்கு, தங்களுடைய தாயிடம் இருந்து ஆரம்பநிலை பாக்டீரியாக்கள் கிடைக்கின்றன என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது. Nature என்ற இதழில் இதன் முடிவுகள் வெளியாயின.
ஆனால் சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் காணப்படும் கிளெப்ஸியெல்லா மற்றும் சூடோமோனாஸ் போன்ற கிருமிகள் அதிக அளவில் இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது.
``ஆரோக்கியத்தை பாதிக்கும் கிருமிகள் எந்த அளவுக்கு இதில் இருக்கின்றன என்பது எனக்கு ஆச்சரியம் தருவதாகவும், அச்சம் தருவதாகவும் இருந்தது'' என்று வெல்கம் சாங்கர் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த டாக்டர் ட்ரெவர் லாவ்லே பிபிசியிடம் தெரிவித்தார்.
``மொத்த மைக்ரோபயோமில் அது 30 சதவீதம் வரை இருக்கலாம்.''
``ஆனால், மனித உடலுக்கு ஏற்ற உயிரிச்சூழலை பிறப்பின் போதே எப்படி ஏற்படுத்துவது என்ற, அற்புதமான தகவல் தொகுப்பு நமக்கு கிடைத்திருக்கிறது என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் தகவலாக உள்ளது'' என்று அவர் கூறுகிறார்.
மைக்ரோபயோம்
நீங்கள் மனித உடலுக்கு சொந்தமான உயிரணுக்களைவிட, பிற நுண்ணுயிரிகள் அதிகம் கொண்டவராக இருக்கிறீர்கள் - உங்கள் உடலில் உள்ள அனைத்து செல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், 43 சதவீதம் மட்டுமே மனித செல்களாக இருக்கும்.
மீதி நமது மைக்ரோபயோமாக இருக்கும். அது பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் ஒற்றை செல்களைக் கொண்ட ஆர்ச்சியா கிருமிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
மனிதனின் மரபணுத் தொகுப்பு - மானிடருக்கான மரபணு தகவல்கள் கொண்ட முழு தொகுப்பு - என்பது மரபணுக்கள் என கூறப்படும் 20,000 தகவல்களைக் கொண்டதாக இருக்கிறது.
ஆனால் நமது மைக்ரோபயோமில் உள்ள இந்த அனைத்து மரபணுக்கள் எண்ணிக்கையை ஒன்றாகக் கணக்கிட்டால் இரண்டு மில்லியன் முதல் 20 மில்லியன் நுண்ணுயிரி மரபணுக்கள் வரும்.
நமது மைக்ரோபயோம் என்பது, நம்முடைய `இரண்டாவது மரபணுத் தொகுப்பு' என்றும் கருதப்படுகிறது.
இது குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்குமா?
சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு டைப் -1 சர்க்கரை நோய், ஒவ்வாமைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சில குறைபாடுகள் வருவதற்கு அதிக ஆபத்துகள் உள்ளன என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம்.
கோளாறான நோய்த் தடுப்பு மண்டலம் - நோய்த் தாக்குதலுக்கு எதிராக உடலின் தற்காப்பு மண்டலம் பாதித்தால்- அவை அனைத்திலுமே ஒரு பங்கு வகிக்கும்.
சுகப்பிரசவம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும், சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் இடையிலான வித்தியாசம் காலப்போக்கில் மாறிவந்து, அவர்களின் முதலாவது பிறந்த நாளுக்கு அவை சமநிலையை எட்டுகின்றன.
எனவே, நமது உடலில் முதலில் நுழைந்து ஆதிக்கம் பெறும் கிருமிகள்தான், நமக்கு நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதை நம் நோய்த் தடுப்பு மண்டலத்துக்குப் பயிற்சி தருவதற்கு உதவி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பது இந்தத் துறையில் செல்வாக்கு பெற்ற கருத்தாக இருக்கிறது.
``குழந்தை பிறக்கும் தருணம் ஒரு வகையில் ``சமன்பாட்டு'' நிலையை நிர்ணயிக்கும் தருணமாக இருக்கும் என்பது கருதுகோளாக உள்ளது. அதுதான் எதிர்கால வாழ்வில் நோய்த் தடுப்பு மண்டலத்தின் செயல்பாட்டை நிர்ணயிப்பதாக உள்ளது என கருதப்படுகிறது'' என்று யு.சி.எல். ஆராய்ச்சியாளர் டாக்டர் நிகெல் பீல்டு கூறுகிறார்.
குழந்தை பயோம் ஆய்வுத் திட்டத்தில் - என்ற இந்த ஆய்வு குழந்தைப் பருவத்தில் இருந்து குழந்தைகளைக் கண்காணிக்கும்போது இன்னும் தெளிவான தகவல்கள் கிடைக்கலாம்.
குழந்தையின் மைக்ரோபயோமியை வேறு எப்படி நீங்கள் மாற்றலாம்?
குழந்தையின் மைக்ரோபயோமில், அதன் பிறப்பு நேரத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது. ஆனால் நுண்ணுயிர்க் கொல்லிகள் எனப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பிடுவது, குழந்தைக்கு தாய்ப்பால் தரப்படுகிறதா இல்லையா என்பது போன்ற விஷயங்களும் நமது நுண்ணுயிரி மற்றும் மனித செல்களுக்கு இடையிலான உணர்ச்சிபூர்வமான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
இந்தத் துறையில் முன்பு நடந்த ஆய்வுகளின் மூலம் கிடைத்த முடிவுகளைத் தொடர்ந்து, சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாயின் பிறப்புறுப்பில் இருந்து திரவத்தை எடுத்து அதன் முகத்திலும், வாயிலும் தடவும் `வெஜைனல் சீடிங்' என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இருந்தபோதிலும், சுகப்பிரசவத்தில் பிறக்கிற குழந்தைகள், சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளைவிட ஒன்றும் அதிகமான பெண் பிறப்புறுப்பு பாக்டீரியாக்களைப் பெறுவதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாறாக, பிரசவ வலி நேரத்தில் தாயின் மலக்கழிவின் மீது படுவதன் மூலம் அம்மாவிடம் இருந்து குழந்தைக்கு இந்த பாக்டீரியாக்கள் பரவுகின்றன.
தாயின் பிறப்புறுப்பு திரவத்தை எடுத்து குழந்தையின் முகம், வாயில் தடவும் போது, தாயின் பிறப்புறுப்பில் இருந்து ஜி.பி.எஸ். எனப்படும் கிருமியின் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்தும் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். (இது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு பலவித கேடுகளை உருவாக்கலாம்.)
எதிர்காலத்தில் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு, நல்ல பாக்டீரியாக்களின் கலவை ஏதாவது பிறந்தவுடனே தரப்படலாம், அதன் மூலம் நுண்ணுயிரிகள் நிறைந்த உலகில் அதன் பயணத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல வழி ஏற்படுவதாக இருக்கலாம்.
``இந்தக் கிருமிகள் நமக்காக உருவாக்கப்பட்டவை, நாம் அவற்றுக்காக உருவாக்கப் பட்டிருக்கிறோம்'' என்கிறார் டாக்டர் லாவ்லே.
``என்னுடைய முக்கியமான ஆர்வம் என்னவெனில் - தாயிடம் இருந்து குழந்தைக்கு கடத்தப்படும் கிருமிகள் எவை என்பது பற்றியது தான். இது தற்செயலாக நடப்பது அல்ல. இந்தக் கிருமிகள் மனிதர்களின் வாழ்வில் ஆழமான தொடர்பு கொண்டுள்ளன.''
``இதைத்தான் நாம் புரிந்து கொண்டு பாதுகாத்திட வேண்டும் - தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் இந்த வகை ரத்த பந்தத்தைப் பாதுகாக்க வேண்டும்.''
கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்?
இப்போது கண்டறியப்பட்ட விஷயங்கள் தடம் பதிப்பவையாக உள்ளன என்றாலும், பெண்கள் சிசேரியன் மூலம் பிரசவம் பார்த்துக் கொள்வதைத் தடுப்பதாக இது இருந்துவிடக் கூடாது என்று மகப்பேறு மருத்துவர்களுக்கான ராயல் கல்லூரி துணைத் தலைவர் டாக்டர் ஆலிசன் ரைட் கூறியுள்ளார்.
``பல சமயங்களில் சிசேரியன் என்பது உயிரைக் காக்கும் சிகிச்சையாக உள்ளது. பெண்ணுக்கும் அவருடைய குழந்தைக்கும் சரியான சிகிச்சையாக உள்ளது'' என்று அவர் கூறுகிறார்.
``பிறந்த நிலையில் உள்ள குழந்தைகளின் உடலில் மைக்ரோபயோம் என்ன பங்காற்றுகிறது என்பதும், என்ன அம்சங்களில் அது மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. எனவே, பெண்கள் சிசேரியன் செய்து கொள்ள மறுக்கும் நிலையை இந்த ஆய்வு முடிவு ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை'' என்கிறார் அவர்.