ஆஃப்கானிஸ்தானின் பாக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அமெரிக்க வீரர்கள் முகாமிட்டிருந்த இடங்களை பரிசோதிக்கும் ஆஃப்கானிஸ்தான் வீரர்Image caption: ஆஃப்கானிஸ்தானின் பாக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அமெரிக்க வீரர்கள் முகாமிட்டிருந்த இடங்களை பரிசோதிக்கும் ஆஃப்கானிஸ்தான் வீரர்.
ஆஃப்கானிஸ்தானின் பாக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து இரவோடு இரவாக சொல்லிக்கொள்ளாமல் அமெரிக்க வீரர்கள் வெளியேறியதாக ஆஃப்கானிஸ்தான் ராணுவ ஜெனரல் அசதுல்லா கோஹிஸ்தானி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நடந்த இச்சம்பவம், அமெரிக்க படையினர் புறப்பட்டுச் சென்ற பிறகே தங்களுடைய கவனத்துக்கு தெரிய வந்ததாக அந்த ராணுவ உயரதிகாரி கூறினார்.
பாக்ராம் என்ற அந்த விமானப்படை தளத்தின் அங்கமாக ஒரு சிறைச்சாலை இருக்கிறது. அதில் சுமார் ஐந்தாயிரம் தாலிபன் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆஃப்கானிஸ்தானின் பல இடங்களில் தாலிபன்கள் முன்னேறி வரும் நிலையில், ஏற்கெனவே தாலிபன்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்க படையினர் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அந்த பாக்ராம் படை தளத்தை ஆஃப்கன் ஆயுததாரிகள் குழு தாக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக ஜெனரல் கோஹிஸ்தான் பிபிசியிடம் மேலும் தெரிவித்தார்.
"உங்களுக்குத் தெரியுமா, அமெரிக்க படையுடன் நாங்கள் ஒப்பிடப்பட்டால், அது மிகப்பெரிய விஷயம். ஆனால், எங்களுக்கும் பலம் உள்ளது. இயன்றவரை போராடி பாதுகாப்போம். மக்களை காப்போம்," என்று ஜெனரல் கோஹிஸ்தானி தெரிவித்தார்.