விமான நிறுவனத்தின் கவனக் குறைவால் நாடு மாறிச் சென்ற சடலங்கள்

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (14:56 IST)
சௌதி அரேபியாவில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலத்திற்கு பதிலாக, இந்தியாவைச் சேர்ந்த ஆண் ஒருவரின் சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

 
கண்டி - மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த ஏ.ஆர். பண்டார என்ற 53 வயதான பெண், சௌதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்று, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோது உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
 
ஆனால், இந்த பெண்ணின் சடலத்திற்கு பதிலாக, இந்திய ஆண் ஒருவரின் சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்தியப் பிரஜையின் சடலத்தை, சௌதி அரேபிய அதிகாரிகள் கல்ஃப் விமான சேவை நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
 
விமான சேவை நிறுவன அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக, இந்த இரண்டு சடலங்களும் மாறுப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சட்ட வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார்.
 
இவ்வாறு மாற்றி அனுப்பப்பட்ட இந்தியரின் சடலம் கல்ஃப் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
 
சடலத்தை பெற்றுக்கொள்வதற்காக வருகைத் தந்த பெண்ணின் உறவிகள், சடலம் மாறுப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதை அறிய வந்துள்ளனர்.
 
இந்த விடயம் குறித்து விமான நிலைய சட்ட வைத்திய அதிகாரியை, உறவினர்கள் தெளிவூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ள இந்தியரின் சடலத்தை, இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
இந்த இந்திய பிரஜையின் சடலத்தை மீண்டும் பொதி செய்தவற்கு கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலை ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவிற்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்