ஆர்ஆர்ஆர் படம், ராஜமெளலி கொடுத்த விளக்கம்: கொண்டாடும் ரசிகர்கள்!

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (10:10 IST)
பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் படைப்பில் வெளிவந்துள்ள ஆர்ஆர்ஆர் படம், எதிர்பார்த்தபடி திரைக்கு வெளிவந்த மார்ச் 25ஆம் தேதியே வசூலைக் குவித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளிவந்துள்ளது.
 
கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகள் மூடல் பிறகு 50 சதவீத பார்வையாளர் அனுமதி என நீடித்த திரையரங்க செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டே வெளிவந்திருக்க வேண்டிய படம், நீண்ட இழுபறிக்கு பிறகு மார்ச் 25ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது.
 
இதனால், இந்த படம் மீதான எதிர்பார்ப்பும் பாகுபலி படத்தை வழங்கிய ராஜமெளலியின் பிரமாண்டம் இந்த படத்தில் எப்படியிருக்கும் என்ற ஊகமும் ரசிகர்களிடம் மட்டுமின்றி திரையுலகினர் பலரிமும் மிகுதியாக காணப்பட்டது.
 
பாலிவுட் ஹங்காமா என்ற பொழுதுபோக்கு இணையதள கூற்றுப்படி, உலக அளவில் சுமார் எட்டாயிரம் திரையுரங்குகளில் இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த படம் இந்தியில் 3,200 திரையரங்குகளிலும், மற்ற நான்கு மொழிகளில் 3,000 முதல் 3,500 திரையரங்குகள் வரையும் படம் வெளி வந்துள்ளது. இது தவிர, உலக அளவில் 1,750 திரையரங்குகளில் ஆர்ஆர்ஆர் படம் திரையிடப்பட்டுள்ளது.
 
திரையில் புதுமை
டால்பி சினிமாவில் வெளியான முதல் இந்தியப் படமாக ஆர்ஆர்ஆர் விளங்கியிருக்கிறது. இந்த திரைப்படம் உலகளவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் IMAX திரைகளில் மிகப்பெரிய அளவில் வெளியாகியிருக்கிறது. இது 3டி மற்றும் 2டி பரிமாண படமாகவும் கிடைக்கிறது.பாலிவுட் ஹங்காமாவின் கூற்றுப்படி, தயாரிப்பாளர்கள் சுமார் 5 நிமிட வரிசையை அகற்றியுள்ளனர். அதன் பிறகு ஆர்ஆர்ஆர் படத்தின் முழுமையான திரை நேரம் 3 மணி நேரம் 1 நிமிடம் ஆகும். படத்தின் முதல் பாதி மட்டும் சுமார் 1 மணி நேரம் 38 நிமிடங்களுக்கு ஓடுகிறது.
 
ஆர்ஆர்ஆர் படம், 2018இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போதே இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 400 கோடி முதல் ரூ. 450 கோடி வரை இருக்கும் என அதன் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தெரிவித்திருந்தார். ஆனால், பலமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் படத்தின் பட்ஜெட் அதிகரித்தது.இந்த படத்தின் மிகப்பெரிய பட்ஜெட் காரணமாக, அனைத்து வகுப்பு டிக்கெட் கட்டணத்தை படம் திரைக்கு வரும் நாளில் இருந்து பத்து நாட்களுக்கு மட்டும் 75 ரூபாய் கூடுதலாக விற்க ஆந்திர பிரதேச மாநில அரசு திரையரங்குகளின் நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படம், தெலுங்கு திரையுலகின் இரண்டு பெரிய நட்சத்திரங்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர்-ஐ நாயகர்களாகக் கொண்டுள்ளது. ஹாலிவுட் நடிகர்களான ஒலிவியா மோரிஸ், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி ஆகியோருடன் பாலிவுட் நடிகர்களான ஆலியா பட், அஜய் தேவ்கனும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதால், படம் ஆந்திரத்தைக் கடந்து மற்ற மாநிலங்களிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.
 
ஆர்ஆர்ஆர் என்றால் என்ன?
தெலுங்கு நட்சத்திரம், தெலுங்கு கதையமைப்பை ஆர்ஆர்ஆர் படம் கொண்டுள்ளதால், அதன் பெயருக்கான காரணமும் தெலுங்கு மொழியிலேயே விளக்கப்பட்டிருக்கிறது. அதாவது ரெளத்திரம், ரணம், ருத்திரம் என்பதன் சுருக்கம்தான் ஆர்ஆர்ஆர். கோபம் அல்லது ஆக்ரோஷம், யுத்தம், ரத்தம் என இதை தமிழிலும் பொருள் கொள்ளலாம்.
 
ஆனால், இந்த மூன்று வார்த்தைகளை பயன்படுத்தாமல் சுருக்கமாக மூன்று எழுத்துகளை மட்டும் படத்தின் தலைப்பாக வைத்தது ஏன் என ராஜமெளலி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு அளித்த பேட்டியின்போது விரிவாக விளக்கம் கொடுத்தார்.
"ஆரம்பத்தில், படத்தின் தலைப்பாக எதை வைக்கலாம் என்ற குழப்பம் இருந்தது. எனவே ராம் சரண், ராமராவ் (ஜூனியர் என்டிஆர்) மற்றும் ராஜமௌலி ஆகியோரின் பெயர்களைக் குறிக்கும் வகையில் ஆர்ஆர்ஆர் என்று குறிப்பிடலாம் என நினைத்தோம். அதற்கேற்ப RRR என ஹேஷ்டேக்குகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்தோம். பார்வையாளர்களின் வரவேற்பு அமோகமாக இருந்ததால் RRR ஐ தலைப்பாக வைத்தோம் என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார் ராஜமெளலி.
 
RRR படம், 1920 காலகட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு, கொமாரம் பீம் என்ற இருவரின் வாழ்க்கையை மைப்படுத்திய அல்லது அந்த கால சூழலை தழுவிய கற்பனைக் கதை. இவர்களின் சுதந்திர போர் கால சூழலை உலகுக்கு காண்பிக்க, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பிற மொழி பிரபல நட்சத்திரங்களை வைத்து தனக்கே உரிய பிரமாண்ட கலை, கதையம்சங்களுடன் படத்தை இயக்கியிருக்கிறார் ராஜமெளலி.
 
ஃபயர் vs வாட்டர் கான்செப்ட் போன்ற புதுமையான விஷயங்கள், வழக்கம்போல தனது பிரமாண்டம், நடிகர்களிடம் நடிப்பை வாங்கிய விதம், கதை சொல்லாடல் ஆகியவை 'இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி' என்பதை அழுத்தம் திருத்தமாக்கியுள்ளது என்று படத்தை விமர்சித்துள்ள இந்து தமிழ் திசை கூறியிருக்கிறது.
 
இந்த படம் விமர்சகர்களிடமிருந்து பாராட்டுதலைப் பெற்றிருக்கிறது. திரைப்பட விமர்சகரான தரண் ஆதர்ஷ் இந்த படத்திற்கு நான்கு ஸ்டார்களை கொடுத்துள்ளார். அவர் தனது பார்வையாக, "எஸ்.எஸ்.ராஜமௌலி மீண்டும் சரியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். ஆர்ஆர்ஆர் என்பது இதயத்துடிப்பு உணர்ச்சிகள் மற்றும் தேசபக்தி உணர்வை கலக்கும் ஒரு பெரிய திரைக் காட்சியாகும். அதை வெளிப்படுத்தும் ஆற்றல் RRR படத்துக்கு உண்டு என்று கூறியுள்ளார். முதல் பகுதியை பாராட்டிக் குவித்த தரன் ஆதர்ஷ், இரண்டாம் பகுதி மெதுவாக செல்வது குறித்தும் கடைசி காட்சி பற்றியும் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
திரைப்பட விமர்சகர் ரமேஷ் பாலா, RRR படத்தின் முதல் பாதி ஒரு காவியம் என்றும், ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் "தங்கள் சிறந்த ஆற்றல் மட்டுமின்றி அதற்கு அப்பால் ஒருவருக்கொருவர் போட்டி போடும் அளவுக்கு திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
 
"பெரிய திரையில் தனது காட்சிப்படைப்பு, உணர்ச்சித்திறன் மற்றும் அதிரடி தாக்கத்தை பெரிய அளவில் பின்னியிருக்கிறார் ராஜமெளலி" என்றும் பாலா பாராட்டியுள்ளார்.
 
எஸ்.எஸ்.ராஜமௌலியின் கடைசிப் படமான பாகுபலி: தி கன்க்ளூஷனின் பட்ஜெட்டை விட ஆர்ஆர்ஆர் படத்தின் பட்ஜெட் குறைந்தது 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக திரைப்பட தகவல்களை வழங்கும் சில இணையதளங்கள் கூறியுள்ளன.
 
ஆந்திர பிரதேச அமைச்சர் பெர்னி நானி செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஆர்ஆர்ஆர் பட தயாரிப்பாளர்களிடமிருந்து எங்களுக்கு ஒரு விண்ணப்பம் வந்துள்ளது. படத்தின், ஜிஎஸ்டி, நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் சம்பளம் இல்லாமல் படத்திற்கு 336 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். திரைப்பட டிக்கெட் விலையை மேலும் உயர்த்துவது குறித்து முதலமைச்சரிடம் பேசி முடிவு செய்வோம் என்று தெரிவித்தார்.இந்த தகவல்கள், ஆர்ஆர்ஆர் படக் குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருப்பதாகவே தோன்றுகிறது. ஜூனியர் என்டிஆர், இதற்கு முன்பு எஸ்எஸ் ராஜமௌலியுடன் ஸ்டூடன்ட் நம்பர் 1 (2001), சிம்ஹாத்ரி (2003) மற்றும் யமடோங்கா (2007) ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
 
"இந்தத் திரைப்படம் ஒரு உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டராக இருக்கும். நீங்கள் உங்கள் இருக்கைகளைப் பிடித்துக் கொண்டு, அதை வெளியே இழுத்து, கிழித்தெறிய விரும்பும் நிமிடங்கள் அதிகமாக இருக்கும். படத்தை பார்க்கும்போது நீங்கள் சிரிப்பீர்கள், அழுவீர்கள், பல உணர்ச்சிகளை காட்டுவீர்கள்" என்று படத்தின் முதல் நாள் வரவேற்பு குறித்து செய்தியாளர்களிடம் ஜூனியர் என்டிஆர் கூறியுள்ளார். படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்குமாறும் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்