மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% முடிந்ததாக சொல்லும் ஜே.பி நட்டா - உண்மை என்ன?

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (15:37 IST)
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% முடிந்து விட்டதாக இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த பா.. தேசிய தலைவர் ஜே. பி நட்டா தெரிவித்தார். உண்மையில் இந்த மருத்துவமனை பணிகள் எந்த நிலையில் உள்ளன?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து அதற்கான இடம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் தேர்வு செய்யப்பட்டு 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதற்காக விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை.

இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமையன்று மதுரை வந்த அவர் பாஜகவின் பல்துறை வல்லுநர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், "முதற்கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 1264 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது என்பதில் சிக்கல் இருந்தது. இதைத்தொடர்ந்து அதை மதுரையில் கட்ட நினைத்தோம். உங்கள் உதவியால் நாங்கள் அதில் வெற்றி பெற்றோம். இன்று எய்ம்ஸின் 95% பணிகள் மிக விரைவில் முடிவடைந்துள்ளன. அது இந்திய பிரதமரால் விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்," என்றார்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிதியில் கூடுதலாக 164 கோடிகள் சேர்க்கப்பட்டு, 450 படுக்கைகள், தொற்று நோய் தடுப்புக்காக சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்றார். இதிலிருந்து இந்திய அரசும், சுகாதார மற்றும் குடும்ப அமைச்சகமும் எய்ம்ஸ் கவுன்சில் நலனில் எந்த அளவிற்கு கவனித்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது என கூறினார்.

மேலும் அவரச சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகளுடன் மொத்தம் கூடுதலாக 250 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், மருத்துவ படிப்புக்கான இடங்கள் 100லிருந்து 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளன என ஜே.பி நட்டா கூறினார்.

உண்மை நிலவரம் என்ன?
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து அமைக்கப்பட்டால் 15க்கும் மேற்பட்ட தென் மாவட்ட மக்கள் பயனடைவதுடன் கேரள மாநில மக்களும் பயனடைவார்கள். எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

தற்போது தோப்பூர் பகுதியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து நேரடியாக சென்று பிபிசி தமிழ் பார்க்கும் போது விசாலமான சாலை வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ 90 சதவீதத்திற்கு மேல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரே ஒரு கட்டடம் மட்டுமே கட்டப்பட்டு அதுவும் தற்போது பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. தோராயமாக 222 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த மருத்துவமனைக்கு உண்டான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது பாதியில் முடங்கிப் போயிருக்கிறது.

நிதி ஒதுக்கீடு குறித்து நிலவும் குழப்பம்
இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்காக தனது பங்கு நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அமைச்சரவையில் இன்னும் ஒப்புதல் பெறவில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய வெங்கடேசன், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையிலிருந்து சுமார் 400 கோடி ரூபாய் வரை கூடுதலாக நிதி ஒதுக்கி திட்டத்தினை விரிவுப்படுத்தினார்கள். இதன்படி திட்ட மதிப்பீட்டின் தொகை அதிகப்படியான காரணத்தினால் ஒன்றிய அரசும் தனது பங்கிற்கு நிதியை அதிகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது உயர்த்தப்பட்ட தொகைக்கு மத்திய அமைச்சரவையில் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை. இதனால் இன்னும் ஒப்பந்த பணி கூட விடப்படவில்லை. இதுதான் தற்போதைய நிலை என்கிறார்.
மருத்துவமனைபணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக ஜே.பி.நட்டா கூறுவது பற்றியும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த கருத்தையே, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பாவும் தெரிவிக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக ஜப்பான் ஜைக்கா நிறுவனம் தனது நிதியை முழுவதும் ஒதுக்கீடு செய்து இருக்கிறது. ஆனால் மத்திய அரசு அதன் நிதியை இன்னும் ஒதுக்கீடு செய்யாமல் இருக்கிறது என்றார் ராஜன் செல்லப்பா.

இந்த விவகாரம் குறித்து, சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கட்டுமானத்திற்கு தேவையான இடவசதி, சாலை வசதி, குடிநீர் மற்றும் மின்சார வசதி அனைத்தும் அதிமுக ஆட்சியில் வழங்கி உள்ளோம். கொரோனா காரணமாக ஒப்பந்தம் போடுவதில் காலதாமதமானது. தற்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் விரைவில் நடைபெற வேண்டும்," என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்