அண்டார்டிகா பனியிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் - ஏன் இது கவலையானது?

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (14:34 IST)
அண்டார்டிகா பனியில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை முதன்முறையாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 
அண்டார்டிகாவின் 19 பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை நியூசிலாந்தின் கேன்டெர்பெரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் ஒவ்வொரு மாதிரியிலும் மிகச்சிறிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் அரிப்பின் மூலம் இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் உருவானவை எனவும், அவை அரிசியை விட மிகச் சிறியவை என்றும், வெறும் கண்களால் இதனை பார்க்க முடியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உருக்கப்பட்ட ஒவ்வொரு லிட்டர் பனித்துளியிலும் சராசரியாக 29 பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
13 வெவ்வேறு வகையான பிளாஸ்டிக் நுண்துகள்களை கண்டறிந்துள்ள நிலையில், பாலிஎத்திலீன் டெரேஃப்தலேட் துகள் அவற்றில் அதிகளில் காணப்படுகின்றன. இந்த வகை பிளாஸ்டிக் துகள்கள், குளிர்பான பாட்டில்கள் மற்றும் ஆடைகளில் காணப்படுபவையாகும். சேகரிக்கப்பட்ட 79 சதவீத மாதிரிகளில் இந்த வகை பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
 
எங்கிருந்து வந்தன?
 
"அப்பகுதியில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து காற்றின் வாயிலாக இந்த பிளாஸ்டிக் நுண்துகள்கள் வந்திருக்கலாம்" என கிரையோஸ்ஃபியர் என்ற ஆய்விதழில் ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் ஆவெஸ் எழுதியுள்ளார்.
 
"எனினும், இந்த துகள்கள் 6,000 கி.மீ. (3,700 மைல்கள்) தொலைவிலிருந்தும் உருவாகியிருக்கலாம்" என, அவர் தெரிவித்தார். முன்னதாக, அண்டார்டிக் கடல் பனி மற்றும் மேற்பரப்பு பனியில் பிளாஸ்டிக் மாசுபாடு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இப்போதுதான் புதிய பனியில் முதன்முறையாக பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டுள்ளது.
 
அண்டார்டிகாவில் பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ் ஆய்விதழில் கடந்தாண்டு வெளியான முக்கியமான ஆய்வுக்கட்டுரயில், உலகம் முழுவதிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் பெருகிவருவதாகவும், அவை தூசுகள், காற்று மற்றும் கடல் நீரோட்டம் வாயிலாக பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2020அம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் பிளாஸ்டிக் நுண்துகள்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆழ்கடல்களிலும் அவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
அண்டார்டிகா பனியில் பிளாஸ்டிக் நுண்துகள் ஏன் கவலைகொள்ளத்தக்கது?
 
அண்டார்டிகா பனியில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டுள்ளது அப்பகுதியிலும் அதனைத் தாண்டியும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. "பிளாஸ்டிக் நுண் துகள்களில் கன உலோகங்கள், பாசிகள் போன்ற ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் அதன் மேற்பரப்பில் இருக்கும்," என, கேன்டெர்பெரி பல்கலைக்கழக இணை பேராசிரியரும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவருமான லாரா ரெவெல் தெரிவித்துள்ளார்.
 
"இந்த ஆபத்தான பொருட்கள், தொலைதூர மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு செல்வதற்கு வழி ஏற்படுகிறது" என அவர் தெரிவித்தார். மனிதர்களும் காற்று, நீர், உணவு வாயிலாக பிளாஸ்டிக் நுண்துகள்களை சுவாசிக்கின்றனர், உட்கொள்கின்றனர் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
அவை மனிதர்களின் உடல் நலனில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், ஹல் யார்க் மெடிக்கல் ஸ்கூல் மற்றும் ஹல் பல்கலைக்கழகம் கடந்தாண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், மனித உடலில் அதிக அளவு பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது, செல்களின் இறப்பு மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட உடல்நலனுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தவல்லது என கண்டறிந்துள்ளனர்.
 
மேலும், பிளாஸ்டிக் நுண் துகள்கள் உலகம் வெப்பமயமாதலின் தாக்கத்தை அதிகப்படுத்துகிறது. உலகம் முழுவதிலும் பனிப்படலங்கள், பனிப்பாறைகள், பனி கவிகைகள் (ice cap) உள்ளிட்டவை வேகமாக உருகிவருகின்றன. இந்த பகுதிகளில் உள்ள அடர் வண்ணம் கொண்ட பிளாஸ்டிக் நுண்துகள்கள், சூரிய வெளிச்சத்தை உள்ளிழுத்து, வெப்பத்தை அதிகமாக்குவதன் மூலம், அவை உருகுவது மேலும் விரைவாகிறது.
 
சுத்தமான பனிக்கட்டிகள், பனிக் கவிகைகள், பனிப்பாறைகள் சூரிய வெளிச்சத்தை உள்ளிழுக்காமல் வெளியிடுகிறது. ஆனால், இமயமலையில் பனிக் குமிழ்கள், பனிப்பாறைகளில் உள்ள கரிமங்கள் அவை உருகுவதை வேகப்படுத்துகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மலைத்தொடர்களில், வேகமாக உருகிவரும் பனிப்பாறகள் அதனால் ஏற்படும் ஆபத்துகள் அதிகமாகியுள்லன. அவற்றால் நிலச்சரிவு, பனிச்சரிவுகள், பனிப்பாறை ஏரிகளில் அவற்றின் கரைகள் உடைப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கின்றன.
 
பனிப்பாறைகள் உருகுவது உலகம் முழுவதிலும் உள்ள மலைப் பிரதேசங்களில் தண்னீர் விநியோகம் மற்றும் விவசாயத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்