மு.க.ஸ்டாலின் நடத்திய 'மக்கள் கிராம சபை': சர்ச்சைக்கிடையில் மரக்காணத்தில் நடந்தது

Webdunia
வெள்ளி, 25 டிசம்பர் 2020 (14:42 IST)
தமிழகத்தில் கிராம சபை என்ற பெயரில் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மக்கள் கிராம சபை என்ற பெயரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் நேரில் பங்கேற்றுப் பேசினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
 
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் பரப்புரையைத் தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தேர்தல் பரப்புரை கடந்த 23ஆம் தேதி தொடங்கியது.
 
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கிராம மக்களின் குறைகளைக் கேட்கும் வகையில் 'கிராம சபை' என்ற பெயரில் கூட்டம் நடத்தத் திட்டமிட்டது திமுக. இதையடுத்து பல பகுதிகளில் "அதிமுகவை நிராகரிப்போம்" என்ற முழக்கத்தோடு 'கிராம சபை' என்று பெயரிடப்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டன.இந்த நிலையில், அரசியல் கட்சிகள் 'கிராம சபை' என்ற பெயரில் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு நேற்று (வியாழக்கிழமை) அனுமதி மறுத்து அறிவிப்பு வெளியிட்டது.
 
இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராம சபைக் கூட்டத்துக்கு மரக்காணம் பொறுப்பு காவல் ஆய்வாளர் சரவணன் அனுமதி மறுத்து உத்தரவிட்டார்.கிராம சபை என்ற பெயரில் கூட்டம் நடத்த தடை இருந்த காரணத்தினால் மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தலைமை வகித்து இந்தக் கூட்டத்தில் பேசினார்.
 
கிராம சபை கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசு தடை வித்துள்ளது‌ தடையை மீறி கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு கெடும். அது கூடாது என்பதற்காக பெயரை மாற்றி கூட்டம் நடத்துவதாக மரக்காணம் கூட்டத்தில் தெரிவித்தார் ஸ்டாலின்.
 
தொடர்ந்து பேசிய அவர் , "எதிர்கட்சியாக இருந்தாலும், திமுகவை மக்கள் ஆளுங்கட்சியாகத்தான் பார்க்கிறார்கள். ஏனெனில் கொரோனா காலத்தில் அரசு செய்யாததை, இந்தியாவில் எந்த கட்சியும் செய்யாத உதவியை திமுக செய்துள்ளது.கொரோனா நிவாரண நிதி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால் தொற்று பரவும் என்று எச்சரித்தோம். அதை ஒத்தி வைத்தார்கள். அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய வலியுறுத்தினோம். அதையும் செய்தார்கள். இதே போன்று குப்பை வரியை எதிர்த்து அறிக்கை விடுத்தேன். உடனடியாக வாபஸ் பெறப்பட்டது. திமுக கேட்டால் கிடைக்கும் என மக்கள் மத்தியில் திமுக மீது நம்பிக்கை வந்துள்ளது" என்று பேசினார் ஸ்டாலின்.
 
வேளாண் சட்டத்தை நாட்டில் உள்ள பல மாநிலங்களும் எதிர்க்கும் நிலையில் தமிழக அரசு மட்டுமே ஆதரித்து வருகிறது என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீன் பிடித் தொழிலுக்கு உரிமம் வழங்கப்படும்," என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்