சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப்: மாநகராட்சி திட்டம் - என்ன நன்மை?

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (14:11 IST)
சென்னையில், செல்லப் பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அதற்கான உரிமம் பெற்று இருக்க வேண்டும் என்று சமீபத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த செல்லப் பிராணிகளுக்கு உரிமம் எப்படி பெறுவது? இதனால் என்ன பயன் என்பதை பார்க்கலாம்.

உங்கள் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற எங்கு செல்ல வேண்டும்?

சென்னையில் நான்கு இடங்களில் இதற்கான மையங்கள் செயல்பட்டு வருகின்றன. திரு.வி.க நகர், நுங்கம்பாக்கம் , கண்ணம்மாபேட்டை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய நான்கு இடங்களில் உள்ள சிகிச்சை மையங்களுக்கு சென்று உரிமம் பெறலாம். நாய், பூனை, பறவை இனங்களுக்கு உரிமம் பெறலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி பதிவு செய்வது?

செல்லப் பிராணிகளை பதிவு செய்துகொள்ள, நீங்கள் மேற்கண்ட ஏதேனும் ஒரு மையத்திற்கு சென்றால், அங்குள்ள கால்நடை மருந்துவர்கள் உங்கள் செல்லப் பிராணிகளைப் பரிசோதித்து, அதற்கான ஒரு மைக்ரோசிப் (microchip) போன்ற அடையாள அட்டை கொடுப்பார்கள். இந்த மைக்ரோசிப்பில், அதன் விவரங்கள், உரிமையாளர்களின் பெயர், முகவரி ஆகியவை அடங்கியிருக்கும். இது கிட்டத்தட்ட செல்லப் பிராணிகளுக்கான ஆதார் அட்டை போன்றது என்கிறார் 'பீப்பிள் ஃபார் கேட்டல் இன் இந்தியா (People for cattle in India) அமைப்பின் நிறுவனர் அருண் பிரசன்னா.

கட்டணம் எவ்வளவு?

செல்லப் பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள் ஆண்டுக்கு ஒருமுறை 50 ரூபாய் கட்டணத்தில், உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம்.

இந்த உரிமம் பெறுவதன் மூலம் என்ன பயன்?

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், பட்டாசு வெடி சத்தத்திற்கு பயந்து சில நேரங்களில், நாய்கள் வீட்டை விட்டு ஓடிவிடும். அத்தகைய சமயங்களில், இந்த மைக்ரோ சிப்பை பயன்படுத்தி, அதன் உரிமையாளர் யார்? அவர்களின் முகவரி எது என்பதை கண்டுபிடித்து ஒப்படைக்கலாம் என்கிறார் அருண் பிரசன்னா.

மேலும், சில உரிமையாளர்கள் தங்களுக்கு இனி செல்லப் பிராணிகள் வேண்டாம் என்று முடிவு செய்து, வீதிகளில் விட்டு சென்றுவிடுவார்கள். இப்படி செய்வது சட்டப்படி குற்றம் என்று கூறும் அருண் பிரசன்னா, இந்த அடையாள அட்டை இருப்பதன் மூலம் இனி இத்தகைய போக்கு குறையும் என்று நம்புகிறார்.

இந்த மையங்களின் பணிநேரம் என்ன?

இந்த மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களைக் தவிர்த்து, தினசரி 8 மணி முதல் பிற்பகல் 3 மணி நேரம் வரை இயங்கும்.

இந்த உரிமம் பெறுவதன் மூலம் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசிகள் இலவசமா?

சென்னையில் பிராணிகள் வெறிநாய்க்கடி நோய் எனப்படும் ரேபிசால் பாதிக்கப்படுவதை தவிர்க்க, ஆன்டி ராபீஸ் தடுப்பூசி மட்டும் இலவசமாக வழங்கப்படுவதாக பெருநகர சென்னை மாநகராட்சியின் கால்நடை அதிகாரி கமால் ஹுசைன் தெரிவிக்கிறார்.

இந்த உரிமத்தை டிஜிட்டல் மூலம் பதிவு செய்ய முடியுமா?

தற்போது, அந்த வசதி இல்லை. இதுகுறித்து அருண் பிரசன்னா கூறுகையில், "சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சி நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்று. ஆனால், இதனை இணைய வழியாக பதிவு செய்யும் வசதி இன்னும் வரவில்லை. எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளில், 20 நாய்கள்கூட உள்ளன. ஒவ்வொரு முறையும் அவர்கள் பயணம் செய்ய வேண்டியதில்லை. அவர்களுக்கு இணைய மூலம் பதிவு செய்யும் வசதி தொடங்கினால், உதவியாக இருக்கும்," என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்