அதிகரிக்கும் தற்கொலைகள், மனநல நோய்கள்: இந்தியர்களின் உளவியல் எப்படி இருக்கிறது?

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (16:44 IST)


உதட்டுச்சாயத்தால் அலங்கரிக்கப்பட்ட உதடு, நெற்றியில் வைக்கப்பட்ட அழகான பொட்டு, இரு கைகளிலும் நிரம்பி காணப்படும் வளையல்கள் மற்றும் எப்போதும் முகத்தில் அழகான சிரிப்புடன் காணப்படும் அஞ்சுவை, நான் லிப்ட்டில் பார்க்கும்போதோ அல்லது குடியிருப்பின் முகப்பில் பார்க்கும்போதோ கண்டிப்பாக நலம் விசாரிப்பேன்.

எப்போதாவது ஒருமுறை, எனது வீட்டு வேலைகளை செய்வதற்கு அஞ்சுவை அழைப்பதுண்டு. ஒருநாள் நான் எப்போதும் போல, அவரிடம் நலம் விசாரித்தபோது, தான் நன்றாக இல்லை என்று கூறினார். "நான் அழ விரும்புகிறேன். கடந்த செவ்வாயன்று நான் நாள் முழுவதும் அழுதுகொண்டே இருந்தேன்" என்று படபடவென்று, அதே சமயத்தில் தனக்கே உரித்தான சிரிப்புடன் கூறினார்.

தான் அழுவது குறித்து அஞ்சு அடிக்கடி கூறுவது, அவருக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதன் வெளிப்பாடா? நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அஞ்சுவுக்கு தற்போது மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்பதை அவரது குடும்பத்தினர் அறிந்திருக்கிறார்களா? அஞ்சு அனுபவிக்கும் சூழ்நிலை சாதாரண மனநலம் சார்ந்த பிரச்சனையாக கருதப்படுகிறதா? இதுபோன்ற பிரச்சனை எத்தனை பேரை பாதித்துள்ளது? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலான கருத்து கணிப்பை கடந்த 2016ஆம் ஆண்டு தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனம் நடத்தியது.

அதன் முடிவுகள் கவலையளிக்கும் வகையிலான விடயங்களை முன்னிறுத்துகின்றன. அந்த ஆய்வறிக்கையின்படி, 2.7 சதவீத இந்திய மக்கள் மன அழுத்தம் உள்ளிட்ட சாதாரண உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதே சூழ்நிலையில், 5.2 சதவீத மக்கள் இதுபோன்ற உளவியல் பிரச்சனையை வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அனுபவித்துள்ளனர்.

ஓவ்வொரு ஆண்டும், அக்டோபர் 10-ஆம் தேதியன்று உலக மனநல ஆரோக்ய நாள் கடைபிடிக்கப்படும் நிலையில், இந்தியாவிலுள்ள சுமார் 15 கோடி பேருக்கு உடனடியாக உளவியல் சார்ந்த மருத்துவ உதவி தேவைப்படுவதாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரபல அறிவியல் சஞ்சிகையான லான்செட்டின் 2016ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள பத்தில் ஒருவருக்கு மட்டுமே அதற்குரிய மருத்துவ உதவி கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்து வருவது இன்னும் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில், உலகில் உளவியல் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும்.

இந்தியா முழுவதும் மிகப் பெரிய அளவில் மாறிவரும் சூழ்நிலை கவலையளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் நகரங்களும், நவீன வசதிகளும் நாளுக்குநாள் விரிவடைந்து வருகின்றன. கிராமங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் புதிய நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இவையனைத்தும் மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதே சூழ்நிலையில், மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருகின்றன.

"குடும்பங்களின் பிளவு, தனிமை, தொழில்நுட்பங்களின் வரவு ஆகியவை மேற்கத்திய கலாசாரத்தை நோக்கி தள்ளுவது மக்களிடையே மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது" என்று கூறுகிறார் டெல்லியை சேர்ந்த மனநல மருத்துவரான நிமிஷ் தேசாய்.

இது உலகப் போருக்குப் பிந்தைய இருபதாம் நூற்றாண்டின் சமூக தொழில்நுட்ப மேம்பாட்டு மாதிரி. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நல்ல வளர்ச்சி அல்லது நல்ல மனநலம், இவற்றில் எது அவசியமானது என்ற கேள்வி எழுகிறது.
மனநலத்தின் முக்கியத்துவத்தை மக்கள் இப்போது புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்று மருத்துவர்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர். ஆனால், சமூகத்தின் ஒரு பகுதியினர் இந்த பிரச்சனையைப் பற்றி வெளிப்படையாகப் பேசவே விரும்பவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
 

பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, கடந்த 2015ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், தான் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார். சிறந்த நடிப்பு, சர்வதேச விருதுகள் மற்றும் பாராட்டுகள் ஆகியவற்றிற்காக அறியப்படும் தீபிகா, ஒருநாள் காலை தான் தூங்கி எழுந்தபோது, தனது வாழ்க்கை அர்த்தமற்று இருப்பதை போன்று உணர்ந்ததாகவும், அதை நினைத்து அடிக்கடி கதறி அழுததாகவும் கூறுகிறார்.

பொதுவான மனநல பிரச்சனைகள் அல்லது சிஎம்டியால் பாதிக்கப்பட்ட 30-40 சதவீதத்தினர், அது ஒரு நோய் என்பதை அறியாமலே உள்ளதாக கூறுகிறார் டெல்லியை சேர்ந்த மனநல மருத்துவரான ரூபாலி ஷிவால்கர்.

எந்த வேலையிலும் ஆர்வமின்மை, உடற்பிணி எதுவும் இல்லாத நிலையிலும் எப்போதும் சோர்வாக உணருவது, தொடர் அயர்ச்சி, அதீத எரிச்சல், ஆத்திரம், அழத் தூண்டும் உணர்வு ஆகியவை பொதுவான மனநல பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள், ஹைப்பர்தைராடிசம், சர்க்கரை அல்லது நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவின்படி, உலகம் முழுவதும் 10 சதவீத கர்ப்பிணி பெண்களும், குழந்தை பெற்ற 13 சதவீத பெண்களும், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகமாக காணப்படுகிறது. அதாவது, 15 சதவீத கர்ப்பிணி பெண்களும், குழந்தை பெற்ற 19.8 சதவீத பெண்களும், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனஅழுத்தம் குழந்தைகளை கூட விட்டுவைக்கவில்லை. இந்தியாவிலுள்ள 1.2 சதவீத குழந்தைகள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சரியான மருத்துவ உதவி கிடைக்காத பட்சத்தில், அது உடல் சார்ந்த மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனையாக உருமாறுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

"10 ஆண்டுகளுக்கு முன்பு, 100 நோயாளிகள் மனநல பிரிவுக்கு வருவார்கள். ஆனால், இப்போது தினசரி 300-400 பேர் வருகிறார்கள்" என்று கூறுகிறார் டெல்லிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) உளவியல் துறையின் மருத்துவர் நந்த்குமார். அதேபோன்று, டெல்லியை சேர்ந்த மற்றொரு மருத்துவ நிறுவனமான ஐஎச்பிஏஎஸ்ஸின் தலைவர், 10-15 ஆண்டுகளுக்கு முன்பு, 100-150 பேர் தங்களிடம் மனநல ஆலோசனைக்காக வந்ததாகவும், ஆனால் இப்போது, தினமும் 1200-1300 பேர் வருவதாகவும் கூறுகிறார்.

பெரும்பாலானோர் பொதுவான உளவியல் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்கள். மேலும், சோகம், நம்பிக்கை இழப்பு, கோபம், எரிச்சல் போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகளும், சோர்வு, பதட்டம் மற்றும் தனிமை சார்ந்த பிரச்சனைகளுடன் பெண்களும் உளவியல் மருத்துவர்களை சந்திக்கின்றனர்.

பதின் வயதினர் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மனஅழுத்தத்திற்கு சமூக ஊடகங்களே முக்கியமான காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தான் சமூக ஊடகத்தில் பதிவிடும் விடயங்களுக்கு அதிகளவில் லைக் கிடைக்கிறதா, இல்லையா என்பதிலிருந்து தொடங்கி, பல்வேறு இணையம் சார்ந்த காரணிகள் அவர்களிடையே மனஅழுத்தத்திற்கு வித்திடுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளை சிறுவயதிலேயே படிப்பு மட்டுமின்றி இசை, நடனம், விளையாட்டு, நடிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கு பெற்றோர் நினைப்பது குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தை அதிகரிக்கிறது. ஒத்த வயதினர் தன்னை விட சிறப்பாக விளங்குவது, உடனுக்குடன் நிகழ்வுகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவது, ஏகப்பட்ட தெரிவுகள் மற்றும் வயதுக்கு அதிகமான விடயங்களை தெரிந்துகொள்வது ஆகியவையும் இளம்வயதினரிடையே உளவியல் பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

இந்த அழுத்தம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு மட்டுமல்ல, அனைத்து வயது பிரிவை சேர்ந்தவர்களிடத்தும் சற்றே வேறுபட்ட அறிகுறிகளுடன் பரவலாக காணப்படுகிறது. அடிக்கடி மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய மருத்துவ உதவி அளிக்கப்படாத பட்சத்தில் அது தற்கொலை வரை செல்வதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

2019ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் மைய கருத்தாக 'தற்கொலை தடுப்பு' உள்ளது. ஒவ்வொரு 40 நொடியும் ஒருவர் என்ற கணக்கில் ஆண்டுக்கு சுமார் 8,00,000 பேர் உலகம் முழுவதும் தற்கொலை செய்துகொள்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது. 15-29 வயதுக்குட்பட்டவர்களிடையே உயிரிழப்பிற்கு இரண்டாவது மிகப் பெரிய காரணியாக தற்கொலை உள்ளது. தற்கொலை என்பது வளர்ந்த நாடுகளில் இருக்கும் பிரச்சனை என்ற சூழ்நிலை மாறி, தற்போது உலகமெங்கும் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே 80 சதவீத தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன.

மனஅழுத்ததால் ஒருவர் பாதிக்கப்பட்டதன் ஆரம்ப கட்டத்திலேயே உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் பட்சத்தில் தற்கொலைகளை தடுக்க முடியும் என்றும், ஒருமுறை தற்கொலைக்கு முயன்றவர் மீண்டும் மீண்டும் அம்முயற்சியை தொடருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நபரின் தற்கொலை அவரை சார்ந்த 135 பேரை பாதிப்பதாக மருத்துவர் நந்த் குமார் கூறுகிறார். தான் தற்கொலை செய்துகொள்வது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் ஒருவர் எண்ணி பார்க்க வேண்டும்.

தற்கொலை என்பது உணர்ச்சிவசப்பட்ட நிலை. எனவே, தக்க நேரத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்பவரின் கண்ணோட்டத்தை, மனநிலையை நீங்கள் மாற்றினால் அவரது உயிரை காக்க முடியும் என்று அவர் மேலும் கூறுகிறார். தற்கொலை குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை உலகளாவிய சுகாதார பிரச்சனையாக முன்னெடுத்து, அதன் மூலம் தற்கொலைக்கு முயற்சிப்பவர் அதுகுறித்த முடிவை தனிமையில் இருக்கும்போது எடுக்கக் கூடாது உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இந்த பிரச்சனை மிகவும் தீவிரமானது, ஆனால் உளவியல் சார்ந்த பிரச்சனை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இது நகர்ப்புற மக்களுக்கே பொருந்தும். "கிராமங்களில் உள்ளவர்கள் பொதுவான மனநல பிரச்சனைகளை பற்றி கவலைப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அதை அவர்கள் ஒரு நோயாகவே கருதுவதில்லை. ஆனால், ஒரு நபர் கடுமையான மனநல கோளாறால், அதாவது ஸ்கிசோஃப்ரினியா, அல்சைமர் அல்லது டிமென்ஷியாவால் அவதிப்பட்டால், அவர்கள் மருத்துவ சிகிச்சையைப் பெறுகிறார்கள். ஏனெனில், அதற்கான அறிகுறிகள் தெளிவாகக் காணப்படும்" என்று கூறுகிறார் ருபாலி.

இந்தியா போன்ற ஒரு வளரும் நாடுகளின், கிராமப்புறங்களில் உள்ளவர்களும், குறைந்த வருமானம் கொண்டவர்களும் இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு அல்லது வயிற்றுப்போக்கு போன்ற நோய்களிருந்தே மீண்டு வருவதற்கு சிரமப்படும் நிலையில், அவர்களின் மனநலத்தில் எவ்வாறு கவனம் செலுத்த முடியும் என்று மருத்துவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த சவால்களை எதிர்கொள்ள இந்திய அரசு மனநல சுகாதார சட்டத்தை கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. முன்னதாக, 1987 ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இப்புதிய சட்டத்தின் கீழ், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தெந்த உரிமைகள் வழங்கப்படுகிறது என்பதை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. தற்கொலை முன்பு ஒரு குற்றமாக கருதப்பட்டது. புதிய சட்டத்தின் கீழ், இது குற்றம் என்ற நிலையிலிருந்து மாற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை பெறும் உரிமையை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மனநல பிரச்சனை குறித்து கண்காணிப்பதற்காக தேசிய மற்றும் மாநில அளவில் அமைப்பை ஏற்படுத்தவும் இது வழிவகை செய்கிறது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிதிகளை தான் வரவேற்பதாகவும், ஆனால், அதே சமயத்தில் அவை இன்னமும் பயனுள்ளதாக இருந்திருக்கலாம் என்றும் மருத்துவர் நிமிஷ் தேசாய் கூறுகிறார். மனநலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு மேற்கத்திய நாடுகளை ஒத்த திட்டங்களை இந்தியா செயற்படுகிறது. ஆனால் இந்தியாவில் காணப்படும் மனநலம் சார்ந்த பிரச்சனைக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வேறுபாடு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் சமூக மற்றும் குடும்ப கட்டமைப்பை பயன்படுத்தி இதுபோன்ற பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

அதே சூழ்நிலையில், இந்தியாவில் உளவியல் மருத்துவர்களின் தேவை நாளுக்குநாள் அதிகமாகி வருவதை மறுக்க முடியாது. அமெரிக்காவில் 70,000க்கும் அதிகமான உளவியல் நிபுணர்கள் உள்ள நிலையில், அதைவிட கிட்டதட்ட நான்கு மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நான்காயிரத்துக்கும் குறைவான உளவியல் நிபுணர்களே உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவிற்கு குறைந்தது 15,000 - 20,000 வரையில் உளவியல் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்.

நாட்டில் தற்போது 43 மனநல மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் வெறும் இரண்டு அல்லது மூன்று மருத்துவமனைகளே சிறந்த வசதிகளைக் கொண்டதாகக் கருதப்படுகின்றன. மேலும், 10-12 மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்பு, அதாவது எம்பிபிஎஸ் படிப்பின்போதே மாணவர்களுக்கு உளவியல் குறித்த பாடங்கள் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுகின்றனர். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான விரிவான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், தொற்றுநோயை போன்று இது பல்கி பெருகி மிக பெரிய பிரச்சனையாக உருவெடுக்கக் கூடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்