வட இந்திய மாநிலமான ஹரியானாவில் உள்ள குருகிராம் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் இருக்கும் தங்கள் தொழிற்சாலைகளை இரண்டு நாட்கள் மூட இருப்பதாக இந்தியாவின் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆறு மாதங்களாக விற்பனையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுள்ளதால், தனது இரண்டு தொழிற்சாலைகளை செப்டம்பர் 7 மற்றும் 9ம் தேதிகளில் மூடிவிட மாருதி சுசுக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அந்த இரு நாட்களும் உற்பத்தி இல்லாத நாட்களாக அந்த நிறுவனத்தால் அனுசரிக்கப்படும்.
ஆகஸ்ட் மாதம் 1,06,413 வாகனங்களை விற்ற மாருதி சுசுக்கி நிறுவனம், ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு வாகன விற்பனை வீழ்ச்சி கண்டிருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாருதி சுசுக்கி 1,58,189 வாகனங்களை விற்றிருந்தது.
தேவையில் வீழ்ச்சி மற்றும் குறைந்த பொருளாதார வளர்ச்சியால் கனரக மற்றும் பயணியர் வாகன தயாரிப்பு குறைந்து இந்திய வாகன தொழில்துறை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
மாருதி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னரே, பிற பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களான டொயோட்டா, ஹூண்டே, டாட்டா மோட்டார்ஸ், மகேந்திரா & மகேந்திரா ஆகியவை கடந்த ஆறு மாதங்களாக வாகன தயாரிப்பை குறைத்துள்ளன.
இந்தியாவில் கார் தொழில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தியை நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. பலரும் வேலை இழந்துள்ளனர்.
கடந்த ஜூலையில், பயணிகள் வாகனங்களின் விற்பனை 30 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. இதுவே கடந்த இரு தசாப்தங்களில் நிகழ்ந்த மோசமான சரிவு.
வங்கித்துறையில் நிலவும் நெருக்கடி காரணமாக, ஆட்டோ டீலர்கள் மற்றும் கார் வாங்கும் திறன் கொண்டவர்கள், கடன் வாங்க சிரமப்படுகிறார்கள்.