காஷ்மீர் மக்களுக்காக ஐஏஎஸ் பதவியை உதறியது ஏன்? கண்ணன் கோபிநாதன் கூறும் காரணம் என்ன?
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (19:48 IST)
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தபோது, அரசின் முடிவுகளை செயல்படுத்துவதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்பட ஏராளமான அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி மட்டும் அரசின் முடிவால் அதிர்ந்து போய், தனது பதவியைத் தூக்கியெறியத் துணிந்துவிட்டார். அவர்தான், கண்ணன் கோபிநாதன்.
தற்போது, தாதரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மின்சாரத்துறையில் செயலராகப் பணிபுரியும் கண்ணனைத் தொடர்பு கொண்டது பிபிசி தமிழ்.
ஏன் இந்த ஆவேசமான முடிவு?
"நான் வெளிப்படையாகப் பேசுவதை தடுக்கும் இடத்தில் இருந்து வெளியேற விரும்புகிறேன்" என்பதே அவர் சொல்லும் காரணம்.
''காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசவேண்டும் என எனக்குள் ஏதோ ஓர் அழுத்தம் இருக்கிறது. ஆனால் என் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாமல் என் அரசுவேலை என்னைத் தடுக்கிறது. எளிமையான மக்களின் உரிமைகளுக்காக வேலை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தேன். ஆனால், நாட்டில் ஒரு பகுதியில் வாழும் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல், என் வேலையை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அது சரியானது அல்ல என என் மனம் சொல்கிறது,'' என வேலையை ராஜிநாமா செய்ததற்கான காரணத்தை விவரித்தார் கண்ணன்.
மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற இலக்குடன் பணியில் சேர்ந்துவிட்டு, அந்த மக்களுக்காக குரல் கொடுக்காமல் முடங்கிக் கிடக்க தனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்பது கண்ணனின் வாதம்.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அங்கு மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 21-ஆம் தேதி தனது ராஜிநாமா கடிதத்தை உயரதிகாரிகளுக்கு அனுப்பினார் கண்ணன். ஆனால், அந்த ராஜிநாமா ஏற்கப்பட்டது தொடர்பாக உயரதிகாரிகளிடமிருந்து எந்தவிதத் தகவலும் வரவில்லை என்கிறார் அவர்.
உயர் அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து அவருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அழுத்தங்கள் ஏதாவது இருந்ததா, இருக்கிறதா என்று கேட்டபோது, அவ்வாறு எந்த அழுத்தமும் இல்லை என்றார்.
''என்னை யாரும் அச்சுறுத்தவில்லை. நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். என் கருத்தை வெளிப்படையாகப் பேசவேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன். அதனை தடுக்கும் இடத்தில் இருந்து வெளியேற விரும்புகிறேன்,'' என்றார்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் பிறந்த 33 வயதான கண்ணன் கோபிநாதன், தனது சொந்த மாநிலம் கடந்த ஆண்டு வெள்ளத்தில் மூழ்கிய நேரத்தில், தாதரா நகர் ஹவேலியில் இருந்து நிவாரணப் பணிக்கான காசோலையை அளிக்க வந்தார். மக்களின் துயரங்களை கண்டு, திரும்ப மனமில்லாமல், எட்டு நாட்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டார்.
யாரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளாமல், களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். நிவாரணப் பொருட்கள் அடங்கிய மூட்டைகளைத் தூக்குவது உள்ளிட்ட வேலையை அவர் செய்ததால், சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பை பெற்றார்.
கேரளத்தில் எந்தவிதமான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன் என்றும், அந்தப் பணிக்காக, பிரதமரின் சிறந்த பணிக்கான பாராட்டுப் பெற ஏன் விண்ணப்பிக்கவில்லை என்றும் கேட்டு தனக்கு இரண்டு குறிப்பாணைகள் (மெமோ) அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார். "அதற்கான பதில்களை அனுப்பிவிட்டேன். என் வேலையை செய்வதில் நான் பொறுப்புடன் செயல்பட்டேன் என்பதால், எந்த அச்சமும் எனக்கு இல்லை'' என்றார்.
அரசு வேலையிலிருந்து வெளியேறிய பின்னர் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என கேட்டதும், ''இதுவரை எந்த யோசனையும் இல்லை. நான் பணியிலிருந்து வெளியேறியதும் பிற கேள்விகளுக்கு விளக்கமாக பதில் தரமுடியும். இன்றளவும் நான் அரசாங்க வேலையில் இருப்பதால், அதற்கு உட்பட்டு நான் பேசவேண்டியுள்ளதால், பின்னர் நான் விரிவாக பேசுகிறேன்,'' என்றார்.
ஐஏஎஸ் பணியில் சேர்ந்த பிறகுதான் மக்கள் சேவையில் ஈடுபாடு கொண்டதாக சொல்ல முடியாது. அதற்கு முன்பாகவே, தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் கண்ணன். அந்த நேரத்தில், தன்னைப் போலவே அந்த மையத்தில் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்த பெண்ணின் ஊக்கத்தால்தான் ஐஏஎஸ் படித்தார். பிறகு, அந்தப் பெண்ணே அவரது வாழ்க்கைத் துணையாகவும் மாறினார்.
கண்ணன் கோபிநாதன் எடுத்துள்ள முடிவை வரவேற்கிறார் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம்.
''கண்ணனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன். அவருக்கு ஏற்பட்ட அதே நிலை எனக்கு 1985ல் ஏற்பட்டதால், அரசு வேலையை உதறிவிட்டுவந்தேன். ஹரியாணாவில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல் அதிகரித்துக்கொண்டு வந்தது. இதனை வெறுத்த நான், மன உளச்சலில் தவிப்பதற்குப் பதிலாக அந்த வேலையை உதறிவிட்டேன். அரசு வேலையில் 15 ஆண்டுகள் செலவிடுவதா அல்லது என் சொந்த மாநிலமான தமிழகத்திற்கு திரும்பி, என் மனம் விரும்பிய சமூகப்பணியை செய்வதா என இரண்டு சிந்தனை எனக்கு ஏற்படவில்லை. வேலையை விட்டுவந்தேன். மக்களுக்காக குரல் கொடுப்பதை எனக்கான வேலையாக மாற்றிக்கொண்டேன்,''என்கிறார்.
மேலும் அவர் , ''என்னுடன் ஐஏஎஸ் பணியில் சேர்ந்த அருணா ராய்(தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு வழிவகுத்தவர்) ஆறு ஆண்டுகளில் அரசுப்பணியில் இருந்து விலகினார். 2002ல் குஜராத்தில் நடந்த கோத்ரா படுகொலைக்கு பின்னர், அதனை கண்டித்து ஹர்ஷ் மந்தர் ஐஏஎஸ் பணியில் இருந்து வெளியேறினார். இவர்கள் இருவரும் இந்தியாவில் பெரிதும் மதிக்கப்படும் சமூக ஆர்வலர்களாக உள்ளனர். இந்திரா காந்தி காலத்தில் 1975ல் அவசர நிலை கொண்டுவந்த பிறகு, அரசுப் பணியை விட தனிமனித சுதந்திரம், சமூகத்திற்கு பணியாற்றவேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து, வேலையிலிருந்து வெளியேறிய அதிகாரிகள் பலர் உள்ளனர். அதேபோல சூழலில் உள்ள நபர்கள் தற்போது ஊடக வெளிச்சத்திற்கு வருகிறார்கள்,'' என்கிறார் தேவசகாயம்.