இந்திய ரூபாய் வங்கதேச நாணயத்தைவிட மதிப்பு குறைந்து விட்டதா? #BBCFactCheck

வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (19:38 IST)
இந்திய நாணயமான ‘ரூபாய்‘ வங்கதேசத்தின் நாணயமான ‘டாக்கா‘வை விட மிகவும் மதிப்பு குறைந்து விட்டது என்று சமூக ஊடகங்களில் சிலர் கடந்த சில நாட்களாக பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த 72 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வங்கதேசத்தின் நாணயமான டாக்காவை விட, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக நூற்றுக்கணக்கான பதிவுகளும், படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதற்கு சமூக ஊடகங்களில் பலர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சிலர் இந்த இரு நாட்டு நாணயங்களுக்கான வரைகலை படங்களை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த கருத்துகள் அனைத்தும் தவறு என்றும், சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ள வரைகலை படங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் முரணாக இருப்பதையும் பிபிசியின் உண்மை சரிபார்க்கும் குழு கண்டறிந்துள்ளது.

ரூபாய் நாணயமும், டாக்கா நாணயமும்

இந்தியா மற்றும் வங்கதேசத்தில் இருந்து பங்கு சந்தைகளிடம் இருந்து கிடைக்கின்ற நிதி தகவல்களை தருகின்ற சில நம்பகரமான நிதி இணையதளங்களின்படி, இந்த இரு நாட்டு நாணயங்களின் மதிப்பு விவரம் கீழ்கண்டவாறு உள்ளது.

ஒரு இந்திய ரூபாய் 1.18 டாக்கா நாணயத்திற்கு சமம். இது ஒரு இந்திய ரூபாய்க்கு 1.18 டாக்கா நாணயத்தை பெறலாம் என பொருள்படும்.

ஆனால், ஒரு வங்கதேச நாணயத்திற்கு இந்திய நாணயத்தில் 0.82 பைசாதான் கிடைக்கும். 10 இந்திய ரூபாய்க்கு 11.80 வங்கதேச டாக்கா நாணயம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இரண்டு நாணயங்களின் பரிமாற்ற விகிதம் பற்றிய சரியான வரைகலை படங்களை மக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டாலும், ஒரு டாக்கா நாணயத்துக்கு 0.84 ரூபாய் என்ற குறைந்த எண் மதிப்பை பார்த்து, இந்திய பணத்தின் மதிப்பு குறைந்து விட்டது என்ற கருத்தை சமூக ஊடகங்களில் வலம் வர செய்து விட்டார்கள்.

டாலருக்கு நிகராக...

திங்கள்கிழமை வங்கதேச தலைநகர் டாக்காவின் மற்றும் சிட்டகாங் பங்குச்சந்தை நிலவரப்படி, ஒரு டாலருக்கு நிகராக 84.60 வங்கதேச டாக்கா நாணயம் என்று இருந்தது. ஆனால், பாம்பே மற்றும் தேசிய பங்குசந்தையில், ஒரு டாலர் 71.70 இந்திய ரூபாய்க்கு நிகராக இருந்தது.

இதன் மூலம் அமெரிக்க டாலருக்கு நிகரான வங்கதேச நாணயத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவின் ரூபாய் மதிப்பு அதிகமாக காணப்படுகிறது. குறைந்த ரூபாயில் ஒரு டாலரை பெற்றுவிட முடியும்.

கடந்த 90 நாட்களில், ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.08 ரூபாய் வரை சென்றுள்ளது. ஆனால், வங்கதேச நாணயத்தின் மதிப்பு ஒரு டாலருக்கு 84.77 டாக்கா வரை சென்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் டாலரோடு இந்த இரு நாட்டு நாணயங்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தால், இந்திய ரூபாயின் குறைந்தபட்ச மதிப்பு 43.92 ரூபாயாகும். ஆனால், வங்கதேச டாக்கா நாணய மதிப்பு 68.24 டாக்கா ஆகும்.

இதன் மூலம், கடந்த 10 ஆண்டு கால பொருளாதார நடவடிக்கைகளின்போது, டாலரோடு ஒப்பிடுகையில், இந்திய ரூபாயை விட வங்கதேச நாணயம் அதிக ஸ்திரதன்மையை அடைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்