செர்னோபில் அணு உலை அருகில் விளைந்த ஆப்பிளிலிருந்து தயாரித்த மதுபானம் பறிமுதல்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (10:58 IST)
1986ஆம் ஆண்டு அணு விபத்து ஏற்பட்ட செர்னோபில் அணு மின் நிலையத்துக்கு அருகில் விளைவிக்கப்பட்ட ஆப்பிள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மதுபான பாட்டிலை உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
 
அடாமிக் என பெயரிடப்பட்ட 1,500 பாட்டில் மதுபானங்களை கடந்த மார்ச் 19ஆம் தேதி பறிமுதல் செய்து தலைநகர் கீவ்-இல் உள்ள விசாரணை அதிகாரியின் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றதாக தி செர்னோபில் ஸ்பிரிட் நிறுவனம் கூறியது.
 
கர்பதியன்ஸ் பகுதியில் உள்ள மதுபான சுத்திகரிப்பு ஆலையில் இருந்து பாட்டில்களை அதிகாரிகள் எடுத்துச் சென்று இருக்கிறார்கள்.
 
செர்னோபில் பகுதியில் 1986ஆம் ஆண்டு ஏற்பட்ட அணு விபத்துக்குப் பிறகு உற்பத்தி செய்யப்பட்ட முதல் நுகர்வுப் பொருள் இதுதான் என, அடாமிக் மதுபானத்தைத் தயாரித்த நிறுவனத்தினர் கூறுகிறார்கள்.
 
அந்நிறுவனத்தினர், உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் பிரிட்டனுக்குச் செல்லவிருந்த அடாமிக் மதுபான பாட்டில்களை உக்ரைன் அதிகாரிகள் ஏன் கைப்பற்றினார்கள் எனத் தெரியவில்லை என்று கூறுகிறார்கள் தி செர்னோபில் ஸ்பிரிட் நிறுவனத்தினர்.
 
"நாங்கள் போலியான உக்ரைன் கலால் வரி முத்திரைகளைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது" என அறிவியலாளர் மற்றும் பேராசிரியர் ஜிம் ஸ்மித் கூருகிறார்.
 
இவர் கடந்த பல ஆண்டு காலமாக செர்னோபில் பகுதியில் விலக்கப்பட்ட பகுதிகளை (Exclusion Zone) ஆராய்ந்து வருகிறார். பல கட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு தான் உக்ரைனைச் சேர்ந்த ஒருவரோடு இணைந்து தி செர்னோபில் ஸ்பிரிட் என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார்.
 
"மதுபான பாட்டில்கள் பிரிட்டனுக்கு அனுப்புவதால் தெளிவாக பிரிட்டனின் கலால் வரி முத்திரைகள் ஒட்டப்பட்டிருந்தது. எனவே உக்ரைன் அதிகாரிகள் மதுபான பாட்டில்களைப் பிடித்து வைத்திருப்பது ஏன் எனத் தெரியவில்லை" என்கிறார் ஜிம் ஸ்மித்.
 
அடாமிக் மதுபானத்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் அறிவியலாளர்களால் நடத்தப்படுகிறது. 1986ஆம் ஆண்டு விபத்துக்குப் பிறகு, விலக்கப்பட்ட பகுதிகளாக (Exclusion Zone) செர்னோபில் பிராந்தியத்தில் கைவிடபட்ட 4,000 சதுர கிலோமீட்டர் நிலபரப்பில் இந்த அறிவியலாளர்ககள் ஆராய்ந்தனர்.
 
சோதனை அடிப்படையில் பயிர்களை வளர்ப்பது, உணவு தானியங்களை வளர்ப்பது, அப்படி வளர்த்த பயிர்களைக் கொண்டு மனிதர்கள் உட்கொள்ளும் பொருட்களைத் தாயாரிக்க முடியுமா என்பதும் அவர்கள் ஆராய்ச்சியில் அடக்கம்.
 
இந்த விலக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள நிலபரப்புகளைப் பயன்படுத்தி எப்படி உற்பத்தி சார்ந்து மீண்டும் பயன்படுத்துவது என்பதை விளக்க இந்த பகுதியில் மதுபானம் தயாரிக்கப்பட்டது.
 
அதிகாரபூர்வமாக பாதிக்கப்பட்ட நிலப்பகுதியாக (Officially Contaminated Area) அறிவிக்கப்பட்டிருக்கும் நிலபரப்பில் விளைவிப்பதும், உற்பத்தி செய்வதும் சட்டப்பட தவறு என இருக்கும் பயிர்களை, விலக்களிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றி இருக்கும் நிலபரப்பில் விளைவிக்கலாம், அறுவடை செய்து விற்க இது அனுமதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல்முறையாக வோட்கா மார்டினியை சுவைத்த போது, அதில் எந்த வித கதிரியக்கமும் இல்லை என கூறினார் போர்ட்ஸ்மோத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜிம் ஸ்மித்.
 
பேராசிரியர் ஸ்மித்தும் அவரது நண்பரும் ஆப்பிளை வைத்து மதுபானம் தயாரிக்க திட்டமிட்டனர். அவர்களின் மதுபானத்துக்குத் தேவையான ஆப்பிள்கள், விலக்கப்பட்ட பகுதிக்கு அருகில் இருக்கும் நரோடிச்சி மாவட்டத்தில் விளைவிக்கப்பட்டன. ஆனால் அந்த மாவட்டத்தில் கூட இப்போதும் விவசாயம் செய்ய அதிக கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
 
அணு விபத்தால் பொருளாதார ரீதியாக கடுமையான தாக்கங்களைச் சந்தித்து இருக்கும் நரோடிச்சி உட்பட பல மாவட்டங்களில் வாழும் பல சமூகத்தினருக்கு உதவ, இவர்களின் நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
 
பறிமுதல் செய்த மதுபாட்டில்கள் தொடர்பாக கீவ் விசாரணை அதிகாரியின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, இது குறித்து செய்தி பிரசுரிக்கும் வரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
 
விபத்து நடந்த பிறகு முதல் சில வாரங்களில் அங்கு பணியாற்றியவரும், தி செர்னொபில் ஸ்பிரிட் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கென்னடி லாப்டிவ் "இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காணப்படும், நாங்கள் செர்னோபில் விபத்தால் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தொடர்ந்து உதவ முடியும் என நம்புகிறோம்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்