"கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்க முடியாது; அதனால் உறவும் பாதிக்காது" - இலங்கை எம்.பி சார்ள்ஸ் நிர்மலநாதன்

Webdunia
திங்கள், 30 மே 2022 (15:08 IST)
(இன்றைய (மே 30) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

கச்சத்தீவை வழங்க முடியாது, அதில் உடன்பாடில்லை என, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளதாக, 'தினகரன் வாரமஞ்சரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியொன்றில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியிடம் கச்சத்தீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "வடக்கு தமிழர்கள் குறிப்பாக மீனவர்களின் நிலைப்பாடு கச்சத்தீவை வழங்க முடியாது என்பதே. அது எங்களுடைய மீனவர்களுக்கு பாதிப்பாக அமையும்.

எனவே, கச்சத்தீவை வழங்க முடியாது, அதற்கான வாய்ப்பில்லை. தமிழ்நாடு மீனவர்களின் கோரிக்கையை ஏற்று அவ்வாறு ஒரு கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் விடுத்திருக்கலாம். ஆனால், அதற்கான வாய்ப்புக்களில்லை. தமிழ்நாடு முதலமைச்சரின் இந்தக் கோரிக்கை தொடர்பில் தமிழ்நாடு மற்றும் ஈழத்தமிழ் உறவில் பாதிப்புகள் ஏற்படாது.

ஒரு விடயத்தில் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால், அது உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது" என தெரிவித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ராஜபக்ஷகளை திருப்திப்படுத்த சதி"

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தத்தை வெற்றிகொள்ள அக்கட்சி செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, ராஜபக்ஷகளை திருப்திப்படுத்தும் வண்ணம் அரசியலமைப்பை திருத்த அரசாங்கம் சதி செய்வதாகவும் தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சார்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கான முதல் அடியை எடுக்க வேண்டிய தருணத்தில் சில சந்தர்ப்பவாதிகள் ராஜபக்ஷகளை பாதுகாப்பதற்காக செயற்படுகின்றனர். பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முழுமையான 21 ஆவது திருத்தப் பிரேரணைக்கு எதிரான சதிகள் மற்றும் அதை நீர்த்துப்போகச் செய்யும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

ராஜபக்ஷகளை வீட்டுக்கு அனுப்புவதே நாட்டு மக்களின் நோக்கமும் கோரிக்கையுமாக உள்ளது. அவர்களை பாதுகாப்பதே குறிப்பிட்ட குறுகிய கும்பல் ஒன்றின் நோக்கம்" என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு

அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வந்தா ஆர்ப்பாட்டங்கள் மீது கடந்த 9ஆம் தேதி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து முக்கிய அரசியல் பிரமுகர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, "முன்னாள் பிரதமருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்த்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கும் நாளை மறுதினம் ஜூன் 1 அன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 2ஆம் தேதி பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன மற்றும் மேல் மகாணத்திற்கு பொறுப்பான மூத்த பிரதி போலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்" என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்