மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?

Webdunia
புதன், 31 மே 2023 (09:14 IST)
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட தாது வருஷப் பஞ்சத்தின்போது மதுரையைச் சேர்ந்த குஞ்சரத்தம்மாள் என்ற நடனக் கலைஞர் தனது சொத்துகளை விற்று மதுரை நகர மக்களுக்கு உணவளித்ததாக ஒரு கதை உலவுகிறது. அந்தக் கதை உண்மையா, கற்பனைப் படைப்பா?
 
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தின்போது மதுரை நகர மக்களுக்காக சொத்தை விற்று உணவளித்ததாகச் சொல்லப்படும் ஒரு பாத்திரம் குஞ்சரத்தம்மாள். அந்தப் பெயரை கூகுளில் தேடினால், நூற்றுக்கும் மேற்பட்ட முடிவுகள் தென்படுகின்றன. பல பத்திரிகைகளில் குஞ்சரத்தம்மாள் குறித்த கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. 25க்கும் மேற்பட்ட You Tube வீடியோக்கள் கிடைக்கின்றன. குஞ்சரத்தம்மாளின் ஓவியங்கள்கூட தென்படுகின்றன. குஞ்சரத்தம்மாள் குறித்து ஒரு புத்தகம்கூட இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
 
ஆனால், மதுரை நகர வரலாற்றில் உண்மையில் அப்படி ஒரு பாத்திரம் இருந்ததா?
 
தாது வருடப் பஞ்சமும் குஞ்சரத்தம்மாளும்
19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தென்னிந்தியாவை மிகப் பெரிய பஞ்சம் தாக்கியது. 1876 முதல் 1878வரை இந்தப் பஞ்சம் நீடித்தது. இது 1876-78 வருடப் பஞ்சம், தென்னிந்தியப் பெரும் பஞ்சம், சென்னை மாகாணப் பஞ்சம், தாது வருடப் பஞ்சம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டது.
 
இந்தப் பஞ்சங்களால் உணவு கிடைக்காமல் இந்தியா முழுவதும் சுமார் ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த பஞ்ச காலத்தை ஒட்டி பல கதைகள் தமிழ்நாட்டில் வலம்வந்தன. அவற்றில் மிகப் பிரபலமான கதை, நல்லதங்காள் கதை.
 
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து குஞ்சரத்தம்மாள் என்ற ஒரு பெண்மணி குறித்தும் பலர் எழுத ஆரம்பித்தனர். பெரும்பாலான பதிவுகளின் கதைச் சுருக்கம் இதுதான்:
 
"குஞ்சரத்தம்மாள் ஒரு தேவதாசி. மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் அப்போது அவருக்கு சொந்தமாக இரண்டு மாளிகைகள் இருந்திருக்கிறன. தங்கம், வைரம் என எக்கச்சக்க ஆபரணங்கள் அவரிடம் இருந்தன. தாது பஞ்சம் வந்தபோது மக்கள் பசியில் மடிவதைக் கண்ட குஞ்சரத்தம்மாள் தனது மாளிகை வாசலில் ஒரு கஞ்சித் தொட்டியைத் திறந்திருக்கிறார். வரலாற்றில் அரசு சாராத ஒரு நபர் பொது மக்களுக்கு கஞ்சித் தொட்டி திறந்தது அதுவே முதல் முறையாக இருக்கலாம்.
 
தன்னிடம் இருந்த தங்கம், வைரம் அனைத்தையும் விற்று எங்கெங்கோ இருந்து அரிசி மற்றும் தானியங்களை வரவழைத்து தன் மாளிகை வாசலில் கஞ்சி காய்ச்சி ஊற்ற ஆரம்பித்தார் குஞ்சரத்தம்மாள். அவரது மாளிகை அடுப்பு அணையாமல் எரிந்தது. குஞ்சரத்தம்மாள் கஞ்சி ஊற்றும் விஷயம் மதுரை முழுக்க பரவவே பலரும் அங்கு வந்து பசியாறினர். இந்த செய்தி அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் ஜார்ஜ் பிராக்டருக்கு எட்டவே அவர் நெகிழ்ந்து போனார். அரசு வேண்டிய காரியத்தை இந்தப் பெண் செய்கிறாரே என எண்ணி, அரசு சார்பிலும் மூன்று இடங்களில் உடனடியாக கஞ்சித் தொட்டி திறந்திருக்கிறார் ஜார்ஜ் பிராக்டர்.".
இதே கதை சற்று கூடக்குறைய பல இதழ்களிலும் You Tube சேனல்களிலும் வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த மதுரை வரலாறு தொடர்பான நூல்களிலும்கூட இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சில இயக்குநர்கள் இந்தக் கதையை படமாக்கவும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால், உண்மையில் இப்படி ஒரு பாத்திரம் வரலாற்றில் கிடையாது. இந்த காலகட்டம் பற்றி அரசாங்க ஆவணங்கள் தவிர்த்து மதுரை நகர வரலாற்றைச் சொல்லும் குறிப்பு என்பது மதுரையில் இருந்த அமெரிக்க கிறிஸ்தவ மிஷனின் வருடாந்திர அறிக்கைகள்தான். ஆண்டு தோறும் வெளிவந்த இந்த அறிக்கைகளில் சம்பந்தப்பட்ட ஆண்டுகளின் அறிக்கைகளை எடுத்துப் பார்த்தால், இப்படி ஒரு நிகழ்வு ஏதும் இடம்பெறவில்லை.
 
தாது வருடப் பஞ்சம் குறித்து, 1877ல் எழுதப்பட்ட கரிப்புக் கும்மியிலும் இப்படியொரு சம்பவம் ஏதும் கிடையாது.
 
அப்படியானால், இந்தப் பாத்திரம் எப்படி உருவெடுத்தது?
 
காவல் கோட்டத்தில் உருவெடுத்த குஞ்சரத்தம்மாள்
 
சு. வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' நாவலில்தான் முதன் முதலில் குஞ்சரத்தம்மாளின் பாத்திரம் தென்படுகிறது. அந்த நாவலில் இந்தப் பாத்திரம் குறித்து மூன்று பக்கங்களில் கூறப்படுகிறது. காவல் கோட்டம் நாவலில் குஞ்சரத்தம்மாளின் பாத்திரத்தின் பின்னணியைச் சொல்லும்போது தாசி என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
 
காவல் கோட்டம் நாவலில் குஞ்சரத்தம்மாளின் கதை பின்வருமாறு விவரிக்கப்படுகிறது:
 
"குஞ்சரத்தம்மாள் பெரும் செல்வச் செழிப்போடு மதுரையில் வாழ்ந்துவந்தார். வேறு நகரத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் குஞ்சரத்தின் அழகில் மயங்கிக் கிடந்தனர். சரவிளக்கும் கொத்து விளக்கும் அவரது வீட்டை வண்ணமயமாக்கி வைத்திருந்தன. அவள் காமத்தையும் கலையையும் ஆண்டு முடித்தவள். அவள் அளவுக்கு பொருள் சேர்த்தவர்கள் யாரும் இல்லை. வடக்காவணி மூல வீதியில் இருந்த சந்தில் இருந்த இரண்டு வீடுகளும் அவளுடையவைதான். தாது வருடம் துவங்கிய இரண்டாவது வாரத்தில் அவள் கஞ்சி காய்ச்சி ஊற்ற முடிவெடுக்கிறாள்.
 
தனது வீட்டுத் திண்ணையில் வைத்து அவள் கஞ்சி ஊற்றும் செய்தி மதுரையெங்கும் பரவியது. வடக்காவணி மூலவீதியை நோக்கி மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்.
 
ஒரு வட்டை கஞ்சி ஊற்ற ஆரம்பித்து, பிறகு ஒவ்வொருவருக்கும் மூன்று வட்டை ஊற்றப்பட்டது. தினமும் ஒரு வேளைக்கு ஊற்றப்பட்டது. பஞ்சத்தைக் கடந்துவிடும் வைராக்கியத்துடன் இருந்தவர்கள் குஞ்சரத்தைப் பற்றிக்கொண்டனர்.
 
குஞ்சரத்தின் செயல் மதுரையில் இருந்த செல்வந்தர்களுக்கும் மடாதிபதிகளுக்கும் நெருக்கடியைக் கொடுத்தது. அவர்களும் அவ்வப்போது கோவிலில் வைத்து சிறு தானங்களைச் செய்தனர். தாது வருடத்தின் ஆறாவது வாரத்தில்தான் கலெக்டர் கஞ்சித் தொட்டியைத் திறக்க முன்வந்தார். நகரத்தில் மூன்று இடங்களில் கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன. மதுரை நகரின் மொத்தப் பசிக்கு குஞ்சரத்தின் அடுப்பே கதி என்ற நிலை மாற்றப்பட்டது.
தாது வருடம் முழுக்க குஞ்சரத்தின் அடுப்பு எரிந்தது. 13 மாத காலம் எரிந்த அடுப்பு அவளுடைய சொத்து எல்லாவற்றையும் எரித்தது. சேமித்த சொத்துகளை உலையில் போட்டாள். முதல் பெரிய வீட்டை விற்ற குஞ்சரத்தம்மாள், பிறகு இரண்டாவது வீட்டையும் விற்றாள். சிறு ஓட்டு வீட்டிற்குப் போனாள். தாது கழிந்து இரண்டாவது மாதத்தில் அடுப்பு அணைந்தது. குஞ்சரத்தம்மாள் படுத்த படுக்கையானாள். குஞ்சரத்தைப் பற்றி ஊரெல்லாம் பேசினார்கள்.
 
அவள் இறந்த பிறகு சின்ன ஓட்டு வீட்டிலிருந்து சடலத்தைத் தூக்கியபோது, வடக்காவணி மூல வீதி கொள்ள முடியாத அளவுக்கு கூட்டம் நின்றது. "கோவில் திருவிழாக்களைத் தவிர மதுரையில் மனிதர்களுக்குக் கூடிய மிகப்பெரிய கூட்டம் இதுதான்" என்று கலெக்டர் தனது குறிப்பிலே எழுதிவைத்தார்".
 
காவல் கோட்டம் நாவலை எழுதிய சு. வெங்கடேசன், அது தான் உருவாக்கிய கற்பனைப் பாத்திரம் என்கிறார். "காவல் கோட்டம் நாவலில் தாது வருடப் பஞ்சம் குறித்து விரிவாக எழுதியிருக்கிறேன். ஆனால், அந்த வருடத்தில் என்ன நடந்தது என எழுதவில்லை. மாறாக, "தாது வருடம் பிறந்தது" என ஒரு அத்தியாயம் முடியும். தாது கழிந்து மூன்று ஆண்டுகள் ஆயின என மற்றொரு அத்தியாயம் ஆரம்பிக்கும். அந்தப் பஞ்சம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அதற்குப் பிறகுதான் நாவலில் விரிவாகச் சொல்லப்படம்.
 
தாது வருடப் பஞ்சத்தில் நாம் திரும்பத் திரும்ப கேட்ட ஒரு கதை நல்லதங்காள் கதைதான். நல்லதங்காள் கதை என்பது தாது வருடப் பஞ்சத்தின் குறியீடு. பசியின் காரணமாக தனது குழந்தைகளைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட நல்லதங்காள் ஒரு அவலத்தின் குறியீடு. ஆகவே, நல்லதங்காளைப் பற்றி எழுத வேண்டாம் என முடிவுசெய்தேன். அதற்கு, எதிர்மறையாக தாய்மையின் அடையாளமாக ஒரு பெண் பாத்திரத்தைப் படைக்க முடிவுசெய்தேன்.
 
தாது வருடத்தில் இரண்டு பெண்களை மதுரை மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்: ஒரு பெண் நல்லதங்காள், மற்றொரு பெண் குஞ்சரத்தம்மாள் என்று கூறி அந்தப் பாத்திரத்தை உருவாக்கினேன்" என்கிறார் சு. வெங்கடேசன்.
 
தாது வருடப் பஞ்சத்தின்போது மதுரையில் இரண்டு, மூன்று இடங்களில் அரசு கஞ்சித் தொட்டிகளைத் திறந்தது. குஞ்சரத்தம்மாள் தானத்தால் ஏற்பட்ட தாக்கத்தினால் அரசு அதனைச் செய்ததாக மாற்றினேன் என்கிறார் வெங்கடேசன்.
 
மாவட்ட கலெக்டரும் கற்பனைப் பாத்திரமா?
குஞ்சரத்தம்மாளின் கதையில் வரும் இன்னொரு கற்பனைப் பாத்திரம், அந்த சமயத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்ததாகக் கூறப்படும் ஜார்ஜ் பிரக்டர். குஞ்சரத்தம்மாளைப் பார்த்து இவர் அரசின் சார்பில் கஞ்சித் தொட்டிகளைத் திறந்ததாகவும், குஞ்சரத்தம்மாள் இறந்தபோது வடக்காவணி மூல வீதியில் கூடிய கூட்டத்தைப் பார்த்து, "இதுபோல யாருடைய இறப்பிற்கும் கூட்டம் கூடவில்லை" என குறிப்பெழுதியதாகவும் குஞ்சரத்தம்மாள் கதையைச் சொல்லும் பலர் கூறிவருகின்றனர்.
 
டபிள்யு. பிரான்சிஸ் எழுதி தமிழ்நாடு அரசு 1906ல் பதிப்பித்துள்ள மதுரை மாவட்ட கெஸட்டியரின்படி பார்த்தால், அந்தத் தருணத்தில் மதுரையின் ஆட்சியராக இருந்த யாருடைய பெயரும் ஜார்ஜ் ப்ரோக்டர் என்று இல்லை.
 
பின்வரும் அதிகாரிகளே இந்த காலகட்டத்தில் மதுரை மாவட்ட கலெக்டர்களாக இருந்தனர்: ஹென்ரி வில்லியம் ப்ளிஸ் (16 செப்டம்பர் 1875 - 2 செப்டம்பர் 1876), ஜெரீமியா கார்நெட் ஹார்ஸ்ஃபால் (3 செப்டம்பர் 1876 - 10 டிசம்பர் 1876), வில்லியம் மாக்ஹுஹே (11 டிசம்பர் 1876 - 23 நவம்பர் 1877), ஹென்றி ஜான் ஸ்டோக்ஸ் (24 நவம்பர் 1877 - 29 செப்டம்பர் 1878), சார்லஸ் வில்லியம் வால் மார்ட்டின் (30 செப்டம்பர் 1878 - 16 ஏப்ரல் 1879).
 
அப்படியானால் ஜார்ஜ் ப்ரோக்டர் என்ற பெயர் எப்படி வந்தது?
மதுரை யூசுப் கான் வசம் இருந்தபோது 1764ல் மதுரைக் கோட்டையை முற்றுகையிட்டார் மேஜர் காம்பல். கோட்டையை உடைத்து முன்னேற பிரிட்டிஷார் பலமுறை முயன்றும் முடிவில்லை. அந்த சமயத்தில் யூசுப் கானிடம் கமாண்டராக இருந்த மர்ச்சந்த் என்பவர் கலகம் செய்ய, கோட்டையைத் தகர்த்து பிரிட்டிஷ் படைகள் உள்ளே வந்தன. 1764 அக்டோபர் 14ஆம் தேதி யூசுப் கான் கைதுசெய்யப்பட்டார். அடுத்த நாள் தூக்கிலிடப்பட்டார்.
 
யூசுப் கான் கொல்லப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு மதுரை நகரின் வருவாய் நிர்வாகம் அபிரல் கான் சாஹிப் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. 1781ல் ஆற்காடு நவாப் முழு வருவாய் நிர்வாகத்தையும் பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து "Receiver of Revenue" என்ற பதவியோடு ஜார்ஜ் ப்ரோக்டர் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியே 1801ல் கலெக்டர் பதவியாக மாறியது. ஆக, ஜார்ஜ் ப்ரோக்டரை மதுரை நகரின் முதல் கலெக்டராகச் சொல்ல முடியும். இந்த ஜார்ஜ் ப்ரோக்டரையே, தாது வருச பஞ்ச கதையில் புகுத்தியிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்