வீகன் ஆவதனால் உண்மையிலேயே ஆரோக்கியம் மேம்படுமா?

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (16:38 IST)
கடந்த சில வருடங்களாக இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் வீகனிசம் எனப்படும் விலங்குகளிருந்து பெறப்படும் உணவுகள் மற்றும் மாமிசங்களை அறவே சாப்பிடாமல் இருக்கும் உணவுமுறையை கொண்டவர்களான வீகன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



உடல்நலன், விலங்கு நலன் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவை மீதான ஈடுபாட்டின் காரணமாக இறைச்சி, கோழி, மீன் அல்லது விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டைகள், பால் பொருட்களையும் தாங்கள் உண்பதில்லை என்று வீகன்கள் கூறுகின்றனர்.

சாதாரண உணவுமுறையை மேற்கொள்ளபவர்களுக்கு இந்த மாற்றம் எவ்வளவு கடினமாக இருக்கும்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

பிபிசியின் 'ட்ரஸ்ட் மீ ஐ ஆம் ஏ டாக்டர்' தொடரின் சமீபத்திய பதிப்பில், மருத்துவர் கில்ஸ் இயோ என்பவர், வீகனிசத்தை ஒரு மாதத்திற்கு கடைபிடித்து, அதனால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு முடிவு செய்தார்.


விலங்குகளோடு தொடர்பில்லாத பொருட்கள் என்று அறியப்படுபடும் உணவுகளுக்கும் விலங்குகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பிருப்பதை அவர் வெகு விரைவிலேயே கண்டறிந்தார்.



முட்டைகள், பாலாடைக்கட்டி போன்றவற்றிற்கு வீகன்கள் மறுப்புத் தெரிவிப்பதாக கூறினாலும், மயோனைசே (முட்டை கலந்தது), பாஸ்தா (இதுவும் முட்டை கலந்துதான்) மற்றும் மதுவகைகள் (சில வகை மதுபானங்களை தயாரிக்கும்போது அதில் மீன்களின் எலும்புகள் அல்லது மற்ற விலங்குகளின் புரதங்களை கலக்கின்றனர்) ஆகியவற்றை தங்களது உணவுகளில் கொண்டுள்ளனர்.

வீகன்கள் தவறுதலாக விலங்குகளோடு தொடர்புடைய உணவுகளை தவிர்ப்பது எவ்வளவு சவாலானதோ, தங்களது உடலுக்கு தேவையான புரதச்சத்துக்களை தவறாமல் எடுத்துக்கொள்வதும் சவால் நிறைந்ததாகவே உள்ளது.

நீங்கள் வீகனிசத்தை பின்பற்றினால், உடலின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான வைட்டமின் டி கிடைக்காத நிலைக்கு தள்ளப்படும் அபாயமும் உள்ளது.வீகனிசத்தின் வரைமுறையின்படி இதுபோன்ற சத்துக்களை பெறவேண்டுமென்றால், செறிவூட்டப்பட்ட உணவுகள், சோயா பால், அரிசி பால், ஆரஞ்சு பழச்சாறு மற்றும் தானிய வகைகளை சார்ந்திருக்க வேண்டும்.

மாற்றாக வைட்டமின் டி மாத்திரையை எடுத்துக்கொள்வதை கூட நீங்கள் பரிசீலனை செய்யலாம்.

நீங்கள் வீகனிசத்தை பின்பற்றினால், உடலின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான அயோடினை இழக்க நேரிடும். எனவே, பாலை தவிர்த்து அயோடின் அதிகமுள்ள பாதாம் பால் போன்றவற்றை நீங்கள் பருக வேண்டியிருக்கும். கடற்பாசிகளில் அயோடின் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தாலும், அதை பெறுவதற்கு நீங்கள் மாத்திரை வடிவில் அதை உட்கொள்ள வேண்டியிருக்கும்.

வைட்டமின் பி12-ஐ பெறுவதும் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஏனெனில், இது விதைகள், பருப்பு வகைகள் அல்லது காய்கறிகளில் கிடைப்பதில்லை. எனவே, வீகன்கள் செறிவூட்டப்பட்ட உணவுகள், தானியங்கள் அல்லது மாத்திரைகளை உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.



வீகனிசத்தை கடைபிடிப்பது ஆரோக்கியத்துக்கு உதவுகிறதா?

சைவத்தை கடைபிடிப்பவர்கள் மற்றும் வீகனிசத்தை கடைபிடிப்பவர்களை அடிப்படையாக கொண்டு இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட 10 ஆய்வுகளை பகுப்பாய்வு செய்து சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று வீகனிசத்துக்கு ஆதரவாக பதிலளிக்கிறது.

சைவத்தையோ அல்லது வீகனிசத்தையோ பின்பற்றுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்களும், புற்றுநோயும் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சைவத்தையோ அல்லது வீகனிசத்தையோ கடைபிடிப்பதென்பது ஆரோக்கியத்துடன் தொடர்புடையதே தவிர நீண்டகாலம் வாழ்வதற்கான வழியாக கருதப்படவில்லை.

சரி, மருத்துவர் இயோ ஒரு மாதத்திற்கு வீகனிசத்தை கடைபிடித்த பிறகு அவருக்கு என்ன ஆனது தெரியுமா? 30 நாட்களில் அவரது உடல் எடை நான்கு கிலோ குறைந்ததோடு மட்டுமல்லாமல், அவரது உடல் கொழுப்பின் அளவும் 12 சதவீதம் வரை குறைந்தது.

நீங்கள் வீகனிசத்தை தொடர்ந்து கடைபிடிப்பீர்களா என்று அவரிடம் கேட்டபோது, "நான் மிகவும் அசந்துவிட்டேன்! இருந்தபோதிலும் முழுவதும் வீகனாக ஆவதற்கு நான் விரும்பவில்லை. ஒரு மாதத்தில் ஒருசில நாட்களுக்கு இதை கடைபிடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்" என்று அவர் கூறுகிறார்.

"கடந்த ஒரு மாத வீகன் வாழ்க்கையில் முட்டைகளை மிகவும் தவறவிட்டேன். ஆனால், இதை துவங்குவதற்கு முன்பு இறைச்சிகள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று எண்ணினேன்" என்று இயோ மேலும் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்