யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் புதினுக்கு சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (22:07 IST)
யுக்ரேன் போர்க்குற்றம் தொடர்பான வழக்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 17-ம் தேதியன்று பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. சர்வதேச அரசியலில் இது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
 
யுக்ரேனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பிராந்தியத்தில் இருந்து குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரஷ்யாவுக்கு அனுப்பினார் என்பது புதின் மீதான குற்றச்சாட்டு.
 
ரஷ்யாவின் குழந்தைகள் நல ஆணைய தலைவர் மரியா லோவா-பெலோவாவுக்கும் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
 
யுக்ரேனில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள ரஷ்யா, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளை பொருட்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
 
யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் புதினை விசாரணைக்கு உட்படுத்துவது சாத்தியமா?
 
1862-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல மனித ஆர்வலர் ஹென்ரி டுனோ எழுதிய 'மெமரி ஆப் சொல்ஃபெரினோ' என்ற புத்தகம் வெளியானது. இத்தாலியில் போரின் மீது ராணுவ வீரர்கள் சித்ரவதை செய்யப்பட்டதை விவரித்த அந்த புத்தகம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
அந்த புத்தகம் வெளியான ஓராண்டு கழித்து, ஐரோப்பாவைச் சேர்ந்த 12 நாடுகள் கூடி, ராணுவ வீரர்கள் சித்ரவதையை தடுக்கும் பொருட்டு முதல் ஜெனிவா ஒப்பந்தம் என்று வர்ணிக்கப்படும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
 
ஜெர்மனியைச் சேர்ந்த நியூரம்பர்க் சிந்தாந்த கல்வி நிலையத்தின் இயக்குநர் கிளாஸ் கிரெய்சோவிச், இதற்கு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
 
"அந்த ஒப்பந்தப்படி, போரின் போது கொடூரச் செயல்களில் ஈடுபடுவதும் சித்ரவதை செய்வதும் தடை செய்யப்பட்டது. போர்க்களத்தில் காயம்பட்ட எதிரி நாட்டு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தவும் அந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இடங்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் அது தடை செய்கிறது" என்று அவர் கூறுகிறார்.
 
1973-ம் ஆண்டு டிசம்பரில் ஜெனிவா ஆலோசனைக் கூட்டம் நடந்த போது எடுக்கப்பட்ட படம்.
 
ஜெனிவா மாநாடு
போரின் போது எதிரி நாடுகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அட்டூழியங்கள் மற்றும் காழ்ப்புணர்ச்சிக்கு கடிவாளம் போடுவதற்கான முக்கிய முயற்சி இது. அடுத்து வந்த ஆண்டுகளில், கூடுதல் விதிகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் சேர்க்கப்பட்ட இந்த ஒப்பந்தம் ஜெனிவா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.
 
ஜெனிவா ஒப்பந்தங்களை பின்பற்றுவது கட்டாயம் என்ற நிர்பந்தம் இல்லாததால் இது களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
 
"ஜெனிவா ஒப்பந்தங்களும், ஹேக் ஒப்பந்தங்களும் பல்வேறு வகையான போர் முறைகளை தடை செய்தன. ஆனால், அவற்றைப் பின்பற்றாதவர்களை எவ்வாறு தண்டிப்பது என்பது குறித்த எந்தவொரு விதிகளும் அதில் இல்லை. இதுதான் ஜெனிவா ஒப்பந்தங்களின் மிகப்பெரிய குறையாகும்" என்கிறார் கிளாஸ் கிரெய்சோவிச்.
 
முதல் உலகப் போருக்குப் பின்னர் இந்த பிரச்னையும் கவனம் பெறத் தொடங்கியது.
 
1919-ம் ஆண்டிற்குப் பின்னர், இத்தகைய போர்க்குற்றங்களில் ஈடுபடுவோரைத் தண்டிக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கிளாஸ் கிரெய்சோவிச். இந்த ஒப்பந்தத்தில் சேராத நெதர்லாந்தில் புகலிடம் தேடிக் கொண்டதால் ஜெர்மன் மன்னர் கெய்சரை தண்டிக்க முடியவில்லை. அதனால்தான், போர்க் குற்றங்களுக்காக கெய்சர் ஒருபோதும் தண்டிக்கப்படவே இல்லை. இரண்டாம் உலககப்போருக்குப் பின்னர் 1945-ம் ஆண்டில் போர்க்குற்றவாளிகளை தண்டிக்க நேச நாடுகள் புதிய ஒப்பந்தம் கண்டன.
 
"1945-ம் ஆண்டு ஆகஸ்டில் லண்டனில் நேச நாடுகள் செய்து கொண்ட ஒப்பந்தம் பெரிய மாற்றத்திற்கு வழிவகுத்தது. போரின் போது தனியாகவோ, அரசு சார்பிலோ அட்டூழியங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க நியூரம்பர்க் நகரில் சர்வதேச ராணுவ நீதிமன்றம் உருவாக்கப்பட்டது" என்கிறார் கிளாஸ் கிரெய்சோவிச்.
 
ஹிட்லர் ஆட்சியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அட்டூழியங்களுக்கு பொறுப்பான ஜெர்மானிய தலைவர்கள் 24 பேர் மீதான வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் சுமார் ஓராண்டு காலம் விசாரிக்கப்பட்டன. ஜெர்மனியில் பல படுகொலைகளுக்குக் காரணமான கெஸ்டபோ ரகசிய போலீசை நிறுவிய ஹெர்மான் கோயரின் உள்ளிட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
போர்க் காலத்தில் அட்டூழியங்களில் ஈடுபடுபவர்கள் யாரும் தேசபக்தி போர்வைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது, அவர்கள் சட்டத்தை எதிர்கொண்டே தீர வேண்டும் என்ற செய்தியை நியூரம்பர்க் விசாரணைகள் உலகிற்கு உரக்கக் கூறின.
 
1949-ம் ஆண்டு உலகின் அனைத்து நாடுகளும் ஜெனிவா மாநாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதனால், உலகில் போர்க்குற்றங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம் கொள்ள முடியாது.
 
 
சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணையின் போது செர்பியாவின் முன்னாள் அதிபர் ஸ்லோபதான் மிலாசோவிச்
 
 
1991- ஆண்டு யூகோஸ்லாவியா கூட்டமைப்பில் இணைந்திருந்த நாடுகள் தங்களை சுதந்திர நாடுகளாக அறிவித்துக் கொண்டன. இதனால், அங்கே தொடங்கிய இனக்குழுக்கு இடையிலான மோதல் 2 ஆணடுகள் வரை நீடித்தது. அப்போது போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு அவை சார்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
 
முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசுகளான செர்பியா, போஸ்னியா, குரோஷியா ஆகிய நாடுகள் அந்த குற்றவாளிகளை ஒப்படைத்தால் மட்டுமே அவர்கள் தண்டிக்கப்படுவது சாத்தியமாகும்.
 
இதில் உள்ள சிக்கல் தொடர்பாக, போலந்தில் உள்ள வார்சா பல்கலைக் கழக அரசியல் துறை பேராசிரியர் பேட்ரிசியா க்ருஸ்பெக்கிடம் பிபிசி விளக்கம் கேட்டது.
 
"மேற்கூறிய நாடுகள் குற்றம்சாட்டப்பட்டவர்களை ஒப்படைக்கவும், அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டவும் தயங்கின. அந்த நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணை அதிகாரிகளால் களத்தில் செயல்பட முடியாது. குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்துவதோ, ஆதாரங்களை திரட்டுவதோ, பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறுவதோ முடியாமல் போயிருக்கும்." என்று பேட்ரிசியா க்ருஸ்பெக் கூறினார்.
 
போர் முடிவுக்கு வந்த பிறகே சர்வதேச நீதிமன்றத்தில் இதுதொடர்பான பணிகளைத் தொடங்க முடிந்தது. முன்னாள் யூகோஸ்லாவியா மற்றும் செர்பியாவின் அப்போதைய அதிபராக இருந்த ஸ்லோபதான் மிலாசோவிச், போஸ்னியன்-செர்பியன் தலைவர்களான தடாவன் காரட்ஜிக், ரத்கோ மிலாடிஜிச் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.
 
அது நீண்டதொரு நடைமுறையாக இருந்தது. சர்வதேச நீதிம்னறம் 20 ஆண்டுகளில் உலகளாவிய மனிதநேயச் சட்டங்களில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. யூகோஸ்லாவியாவில் சண்டை நடந்து கொண்டிருந்த போது, 1994-ம் ஆண்டு ஆப்ரிக்காவின் ருவாண்டாவில் ஹூட்டு - டுட்சி இனக்குழுக்களுக்கு இடையே யார் அதிகாரம் செலுத்துவது என்பதில் மோதல் வெடித்தது.
 
1994-ம் ஆண்டு, வெறும் நூறே நாட்களில் 8 லட்சம் டுட்சி இனத்தவரை ஹூட்டு தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். அதற்கு சில மாதங்கள் கழித்து ருவாண்டா போர்க் குற்றங்களுக்காக ஐ.நா. பாதுகாப்பு அவை சார்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
 
"ருவாண்டா பிரதமர், அமைச்சர்கள் உள்பட அந்நாட்டில் அப்போது அதிகார மிக்க பதவிகளில் இருநத பலருக்கு எதிராகவும் இந்த நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியது சிறப்பம்சம். ஏனெனில், வழக்கமாக இதுபோன்ற அதிகாரமிக்க நபர்கள் விசாரணையில் இருந்து தப்பிவிடுவார்கள். இதில் ருவாண்டா அரசின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானது " என்று பேட்ரிசியா க்ரிஸ்பெக் கூறினார்.
 
ருவாண்டாவின் முன்னாள் பிரதமர் ஜான் கும்பாடா உள்பட பலர் மீதான போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. ஒரு நாட்டின் தலைவர் பதவியில் இருந்தவர் மீது இனப் படுகொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபணமானதில் அவரே முதலாமவர். ருவாண்டாவும் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து, சர்வதேச நீதிமன்றத்துடன் இணைந்து செயலாற்றியது. இதனால், பலர் தண்டிக்கப்பட்டனர்.
 
1990-களில் ஐ.நா. பாதுகாப்பு அவையால் நிறுவப்பட்ட 2 சர்வதேச நீதிமன்றங்களும் யூகோஸ்லாவியா மற்றும் ருவாண்டாவில் நடந்த போர்க் குற்றங்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டவை. ஆனால், 1998-ம் ஆணடு ரோம் சட்டம் என்று அழைக்கப்படும் புதிய ஒப்பந்தத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன.
 
அதன்படி, போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க நிரந்தர சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது. சில முக்கிய நாடுகளைத் தவிர, பெரும்பாலான நாடுகள் இந்த நீதிமன்றத்தின் அதிகார எல்லையை ஏற்றுக் கொண்டன. இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார எல்லையை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டன.
 
 
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய ஓராண்டைக் கடந்துவிட்ட நிலையில், தொடக்கம் முதலே போர்க்குற்றங்கள் குறித்த புகார்கள் எழுந்து வருகின்றன.
 
அப்படியென்றால், ரஷ்ய அதிபர் புதின் மீது சர்வதேச நீதிமன்றம் இப்போது குற்றச்சாட்டுகளை பதிவு செய்து பிடிவாரண்ட் பிறப்பிப்பது ஏன்?
 
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் உதவி இயக்குநர் ரேச்சல் டென்பரிடம் இதுதொடர்பாக பிபிசி பேசியது.
 
"ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்யாவின் குழந்தைகள் நல ஆணைய தலைவர் மரியா லோவா-பெலோவா ஆகியோருக்கு எதிரான போர்க்குற்ற வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பிக்க போதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள பிராந்தியங்களில் இருந்து உக்ரைனின் பிற பகுதிகளுக்கும், ரஷ்யாவுக்கும் குழந்தைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்றதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. அதனால்தான், அவர்களுக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது." என்றார் அவர்.
 
அந்த ஆதாரங்கள் என்னென்ன என்ற விவரங்களை சர்வதேச நீதிமன்றம் வெளியிடவில்லை. ஆனால், போர்க்குற்றங்கள் தொடர்பாக ஏராளமான ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
 
அவற்றில் பெரும்பாலானவை, நேரில் கண்ட சாட்சிகள் மொபைல் போன் அல்லது கேமராவில் பதிவு செய்த ஆதாரங்களை அந்த அமைப்புக்குக் கொடுத்தவையே.
 
 
"17 யுக்ரேனிய குழந்தைகளை சிகிச்சைக்காக மரியுபோல் நகரில் இருந்து அந்நாட்டின் பிற பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல முயன்ற யுக்ரேனியன் சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த ஆதாரங்களைத் திரட்டியுள்ளோம். அவரது முயற்சிக்கு ரஷ்ய அரசின் ஆதரவு பெற்ற ஆட்சியாளர்கள் தடை போட்டு விட்டனர். அதன் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி வேறொரு இடத்திற்கு அனுப்பி விட்டனர்." என்று பிபிசியிடம் ரேச்சல் டென்பர் கூறினார்.
 
இதுபோன்ற நிகழ்வுகள் நடந்ததாகக் கூறப்படுவதை ரஷ்யா மறுக்கவில்லை. ஆனால், யுக்ரேனிய குழந்தைகள் வேறிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதை மனிதாபிமான நடவடிக்கை என்கிறது ரஷ்யா. மிகப்பெரிய அளவில் உக்ரேனிய குழந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
 
"ரஷ்யா என்ன சொன்னாலும், இந்த குழந்தைகளை எளிதில் தத்தெடுக்க வழிவகை செய்யும் வகையில் ரஷ்ய அரசு அண்மையில் சட்டங்களை திருத்தியுள்ளது. இதன் மூலம் அந்த குழந்தைகள் ரஷ்யக் குடிமக்கள் ஆகிவிடுவார்கள். ரஷ்யா என்ன காரணங்களை முன்வைத்தாலும், இது ஜெனிவா ஒப்பந்தங்களை மீறிய செயல்தான். போர்க்குற்றம் தான்" என்று ரேச்சல் திட்டவட்டமாக கூறுகிறார்.
 
சர்வதேச நீதிமன்றம் புதிய குற்றச்சாட்டுகளை விரைவில் பதிவு செய்யவும் வாய்ப்புள்ளது.
 
"ஆதாரங்களுக்குப் பஞ்சமில்லை. மக்கள் மீது குண்டு வீசப்படுவது, மக்கள் கொல்லப்படுவது போன்ற வீடியோக்கள் எங்களிடம் உள்ளன. அந்த இடங்களுக்குச் சென்று அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த காட்சிகள் உண்மையானவையா என்று சாட்சிகளிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டுள்ளோம்." என்று அவர் மேலும் கூறினார்.
 
ரஷ்யாவுக்கு எதிராக மிக வலுவான வழக்காக இது உருவெடுக்கும் என்றே தெரிகிறது. ஆனால், இது புதினை சட்டத்திற்கு முன் நிறுத்துமா?
 
 
புதினை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க முடியுமா?
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸில் பணிபுரியும் சர்வதேச சட்டத்துறை பேராசிரியர் கேரி சிம்ப்சனிடம் இதுதொடர்பாக பிபிசி பேசியது.
 
யுக்ரேன் போர்க்குற்றங்களை விரைந்து நிரூபிக்க வசதியாக, சர்வதேச நீதிமன்ற அதிகாரிகள் வேண்டுமென்றே சில குறிப்பிட்ட வழககுகளை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர். ஆனாலும் கூட, அந்த பாதை மிகவும் நீண்டது மற்றும் சிக்கலானது.
 
"கைது நடவடிக்கை குறித்து பேச வேண்டுமானால், துரதிர்ஷ்டவசமாக அந்த பாதையில் எதுவும் நடக்கவில்லை. புதினை கைது செய்ய வேண்டும் என்பது உலகம் முழுவதும் உள்ள பெருவாரியான மக்களின் நோக்கமாக இருக்கலாம். ஆனால், அவரை யார் கைது செய்வது? ரஷ்யர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். போரில் ரஷ்யா தோற்று, அந்நாட்டை மற்றொரு நாடு ஆக்கிரமித்தால் மட்டுமே அது சாத்தியமாகும. ஆனால், அது நடக்க வாய்ப்பில்லை" என்று அவர் கூறினார்.
 
யுக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கிய பிறகு அங்கே ரஷ்யா ஆக்ரமித்துள்ள பகுதிகளுக்கு மட்டுமே புதின் இதுவரை பயணம் செய்துள்ளார். 1998-ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டால், அவரை கைது செய்யும் பொறுப்பு அந்நாட்டிற்கு உண்டு. ஆனால், இந்த அணுகுமுறை தோல்வியடைந்துள்ளது. அதன் பொருள், சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் வெறும் அடையாள நடவடிக்கை மட்டுமே.
 
"அதிகரித்து வரும் உக்ரேன் போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் சர்வதேச நீதிமன்றத்தின் நடவடிக்கை எந்த பாதையில் இருக்கும் என்பதை கோடிட்டு காட்டுவதாகவே இது அமைந்துள்ளது. ஆனால், புதினின் அந்தஸ்து மீது இது லேசான தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும். அவர்களுக்கு சில பிரச்னைகள் அதிகரிக்கலாம்" என்று கேரி சிம்ப்சன் கூறினார்.
 
போர்க்குற்றங்களை சுமத்திய பிறகு, யுக்ரேன் மீதான தாக்குதலை முடித்துக் கொள்ளுமாறு புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் எழுமா?
 
"சர்வதேச நீதிமன்றம் தொடர்பான 1998-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்குச் செல்ல புதின் தயக்கம் காட்டுவார். அவரை சந்திக்க அழைப்பதிலும் பிரச்னை இருக்கிறது" என்கிறார் கேரி சிம்ப்சன்.
 
சர்வதேச நீதிமன்ற பிடிவாரண்டிற்குப் பிறகு, யுக்ரேன் போரைத் தொடர்வதில் புதின் இன்னும் உறுதி காட்டுவாரா என்ற கவலையும் இருக்கவே செய்கிறது.
 
"இதுபோன்ற போர்க்குற்றங்களில் தொடர்புடையதாக குற்றச்சாட்டப்படும் நபர் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தயக்கம் காட்டுவார். கவுரவத்தை இழந்து வாழ்வதைக் காட்டிலும் போர்க் குற்றவாளியாக மடிவதையே அவர்கள் விரும்புவார்கள். கைது செய்து அவமானப்படுத்தப்படுவதைக் காட்டிலும் போருக்குச் செல்வதையே விரும்பும் நபராக புதின் இருப்பார் என்றே நான் எண்ணுகிறேன்" என்று கேரி சிம்ப்சன் தெரிவித்தார்.
 
உக்ரேனின் மரியுபோல் நகரில் ரஷ்ய அதிபர் புதின்
 
வழக்கில் உள்ள சவால்கள்
 
சரி, நாம் நமது பிரதான கேள்விக்கு வருவோம். உக்ரேனிய போர்க்குற்றங்களுக்காக புதினை நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்க முடியுமா?
 
சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் முன்பு புதினை ஆஜர்படுத்துவது என்பது மிகவும் சவாலான காரியமாக இருக்கும். சர்வதேச நீதிமன்றத்தை ரஷ்யா அங்கீகரிக்கவே இல்லை. சர்வதேச நீதிமன்றத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாட்டிற்கு சென்றால் மட்டுமே அவரை கைது செய்ய முடியும். அது நடக்க நீண்ட காலம் ஆகலாம்.
 
அவர்களுக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் திரட்டப்பட்டிருந்தாலும் கூட, சட்ட நடைமுறைகளை முடிக்க நீண்ட காலம் பிடிக்கும்.
 
ஆனால், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவால் சட்ட நடவடிக்கைகள் மெதுவாக முன்னேற்றம் காண்கின்றன என்ற நம்பிக்கையைத் தரும் என்பது உண்மை. இந்த தருணத்தில் புதினை கைது செய்வது என்பது மிகவும் கஷ்டமான காரியம். ஆனால், கடந்த காலத்தில் நடக்க முடியாது என்று கருதப்பட்ட பல விஷயங்கள் பின்னர் நடந்திருப்பதாக கிளாஸ் க்ரெய்சோவிச் கூறுகிறார்.
 
"அது நடக்க வாய்ப்பில்லை. ஆனால், சர்வதேச அரசியலில் எதுவும் நடக்கலாம். ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் நடக்கலாம் அல்லது சில ராணுவ அதிகாரிகள் ஒன்று சேர்ந்து அரசைக் கவிழ்க்கலாம் அல்லது போரில் உக்ரேன் வெற்றிபெற்று ரஷ்ய ராணுவ தளபதிகள் சிலரை கைது செய்யலாம். அதுபோன்று நடக்கும் பட்சத்தில் அடுத்தக் கட்டத்திற்கு நகர முடியும்" என்கிறார் கிளாஸ் க்ரெய்சோவிச்.
 
"புதினை கைது செய்வதும், விசாரிப்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாததாக தோன்றலாம். ஆனால், ஜெர்மனி மற்றும் ஜப்பானிய போர்க் குற்றவாளிகளை விசாரிக்கும் நியூரம்பர்க் விசாரணை குறித்த யோசனை 1943-ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட போதும் இதுபோன்ற இருந்திருக்கக் கூடும். ஆனால் பிறகு நடந்தது என்ன? நாஜி அரசில் அதிகார மிக்க பதவிகளில் இருந்த பலரும் போர்க் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டனர்" என்பதை அவர் நினைவுகூர்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்