தனது வழக்கறிஞர் அலுவலகத்தில் சோதனை: எஃப்பிஐயை விளாசிய டிரம்ப்

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (13:39 IST)
தனது வழக்கறிஞர் அலுவலகத்தில் எஃப்பிஐ சோதனை மேற்கொண்டது, "அவமதிப்பான செயல்" என்றும் அது "நாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்" என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
இந்த "சூனிய வேட்டை" தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் வெள்ளை மாளிகை நிருபர்களுக்கு டிரம்ப் தெரிவித்தார். இந்த சோதனையில், வழக்கறிஞர் மைகல் கொஹென் மற்றும் அவரின் வாடிக்கையாளர்கள் பேசிய "ரகசிய தகவல்கள்" கைப்பற்றப்பட்டன. ஆபாச பட நடிகைக்கு பணம் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அமெரிக்க ஊடகம் தெரிவிக்கிறது. 
 
2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து விசாரித்து வரும் சிறப்பு வழக்கறிஞர் ராபர்ட் முல்லரின் "பரிந்துரையில்" இந்த சோதனை நடத்தப்பட்டது.
 
முல்லர் மற்றும் அவரது குழு "ஒரு தலைபட்சமானவர்கள்" என டிரம்ப் விமர்சித்துள்ளார். வழக்கறிஞர் கொஹென், ஆபாசப்பட நடிகைக்கு ஒரு லட்சத்து 30,000 அமெரிக்க டாலர்கள் வழங்கியதாக அவர் ஒப்புக் கொண்டதிலிருந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
 
அதிபர் டிரம்புடன் பாலியல் உறவு வைத்து கொண்டதாக ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஸ்டார்மி டேனியல்ஸின் குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்