ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 5 பில்லியன் டாலர் அபராதம் விதிப்பு - தனியுரிமை மீறல் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (21:34 IST)
பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாக கையாண்ட புகாரின் அடிப்படையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் ஐந்து பில்லியன் டாலர் அபராதம் செலுத்துவதற்கு அமெரிக்க வர்த்தக ஆணையம் (எஃப்.டி.சி) உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை செயலதிகாரியான மார்க் சக்கர்பெர்க்கின் தலையீடும், கட்டுப்படும் இல்லாத தனியுரிமை குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
சுமார் 87 மில்லியன் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அரசியல் பிரசார ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா தவறான முறையில் திரட்டி, பயன்படுத்தியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்க வர்த்தக ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.
 
அதன் பிறகு, அவ்விசாரணையானது ஃபேஸ்புக் நிறுவனத்தின் முகமறிதல் தொழில்நுட்பம் உள்ளிட்ட மற்ற விடயங்களையும் இணைத்து கொண்டது.
 
ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த ஐந்து பில்லியன் அபராதம் நுகர்வோரின் தனியுரிமையை மீறியதற்காக எந்தவொரு நிறுவனத்திற்கும் விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதமாக கருதப்படுகிறது.
 
"உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான பயனர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு பகிரப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்த முடியும் என்று பலமுறை வாக்குறுதிகள் அளித்த போதிலும், ஃபேஸ்புக் தனது பயன்பாட்டாளர்களின் தெரிவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது" என்று அமெரிக்க வர்த்தக ஆணையத்தின் தலைவர் ஜோ சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.
 
"ஃபேஸ்புக் நிறுவனத்தின் தனிப்பட்ட தகவல் பயன்பாட்டு முறையை ஒட்டுமொத்தமாக மாற்றி, இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்வதை தடுப்பதற்காகவே" இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவில், அதன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை எட்டு சதவீதமும், விளம்பரம் மூலமான வருவாய் 28 சதவீதமும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஃபேஸ்புக் செய்த தவறு என்ன?
 
ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் அதன் பயன்பாட்டாளர்களின் ஆளுமையை தெரிந்துக்கொள்ளும் வினாடி வினா என்ற பெயரில் ஒரு செயலியை நிறுவச் செய்து, அதன் மூலம் திரட்டப்பட்ட 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திடம் ஃபேஸ்புக் விற்றதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையை கடந்தாண்டு மார்ச் மாதம் அமெரிக்க வர்த்தக ஆணையம் தொடங்கியது.
 
அதாவது, இவ்வாறு பெறப்பட்ட ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவலை கொண்டு 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் பிரெக்ஸிட் ஓட்டெடுப்பு முடிவில் செல்வாக்கு செலுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
 
ஃபேஸ்புக் வினாடி வினாவில் வெறும் 2,70,000 பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில், மற்ற 50 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலே பெறப்பட்டதாகவும், அவர்கள் பெரும்பாலும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான கிறிஸ்டோபர் வைலி கடந்தாண்டு அம்பலப்படுத்தினார்.
 
ஆனால், அச்சமயத்தில் பயனர்களின் தனிப்பட்ட தரவை அணுகியது கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா மட்டுமல்ல. அந்நேரத்தில் ஃபேஸ்புக்கின் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி சேகரிக்கப்பட்ட தரவை மேலும் பல நிறுவனங்கள் உரிய அங்கீகாரமின்றி பயன்படுத்திக் கொண்டன.
 
இதே குற்றச்சாட்டு தொடர்பாக கடந்தாண்டு அக்டோபர் மாதம், பிரிட்டனின் கண்காணிப்பு அமைப்பு ஃபேஸ்புக்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்