coronavirus news: தென்கொரியாவில் கொரோனா வைரஸால் இரண்டாவது உயிரிழப்பு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (21:50 IST)
coronavirus news: தென்கொரியாவில் கொரோனா வைரஸால் இரண்டாவது உயிரிழப்பு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தென்கொரியாவில் வஇரண்டாவது நாளாக அதிகரித்துள்ளதால் இந்த வைரஸ் பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை அந்நாடு தீவிரமாக எடுத்து வருகிறது.
 
தற்போது தென் கொரியாவில் புதிதாக 100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சுகாதார ரீதியாக நாட்டில் அவசரநிலை இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் சூங் தெரிவித்துள்ளார்.
 
நேற்று (வியாழக்கிழமை) அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது தென் கொரியாவில் இரண்டாவது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தென் கொரியாவின் தெற்கு பகுதி நகரங்களான டேகு மற்றும் சேநோங்டோ ஆகியவை ''சிறப்பு பராமரிப்பு மண்டலங்களாக'' அறிவிக்கப்பட்டுள்ளன. டேகு நகரத்தின் சாலைகள் தற்போது பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
 
தென் கொரியாவின் 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அனைத்து ராணுவ நிலைகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
 
சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடாக தென்கொரியா உள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
 
இதையடுத்து, தென்கொரியா முழுவதும் கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 
கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அங்குள்ள வுஹான் நகரத்திலிருந்து சீனாவின் மற்ற நகரங்களுக்கும் பிறகு அங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவியது.
 
இன்றைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் சீனாவில் 118 பேர் கொரோனாவினால் உயிரிழந்த நிலையில், புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்ட 889 பேரையும் சேர்த்து இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,465ஆக அதிகரித்துள்ளது.
 
அதே சமயத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,109 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சீனாவின் சுகாதார ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
ஷின்ச்சியான்ஜி சர்ச் ஆஃப் ஜீசஸ் என தங்களை அழைத்துக்கொள்ளும் கிறிஸ்தவ மதக்குழுவை சேர்ந்த 61 வயதாகும் பெண் ஒருவருக்கு உண்டான கொரோனா தொற்று டேகு நகரில் கொரோனா பரவ காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
 
சிங்கப்பூரில் இருந்து திரும்பிய தமிழருக்கு கொரோனா சோதனை
 
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து திரும்பிய தமிழர் ஒருவருக்கு கொரோனா தாக்கம் உள்ளதா என சோதனை செய்வதற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
45 வயதான சந்திரன், சிங்கப்பூரில் சமையல் பணியாளராக வேலை செய்கிறார். கடந்த ஞாயிற்று கிழமை சிங்கப்பூரில் இருந்து திரும்பிய சந்திரனுக்கு திருச்சி விமான நிலையத்தில் மருத்துவ சோதனை நடதப்பட்டது.
 
சோதனையின்போது, அவருக்கு மூச்சு திணறல் இருந்ததாக தெரிவித்ததால், உடனடியாக அவர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
 
திருச்சியில் முதல் கட்ட சோதனைக்கு பிறகு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சந்திரனின் உடல்நிலை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, ''சந்திரனுக்கு காய்ச்சல், உடல்வலி மற்றும் சளி இல்லை. இருந்தாலும், அவர் தனக்கு மூச்சு திணறல் இருப்பதாக கூறியதால், அவரை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளோம். அவரது மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் பாதிப்புக்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை. இருந்தபோதும், அவருக்கு தனியறை ஒதுக்கி சிகிச்சை அளித்துவருகிறோம்,'' என்றார்.
 
தமிழகத்தில் கொரோனா தாக்கம் யாருக்கும் இல்லை என்றும் அறிகுறிகள் தெரிந்தால், உடனடி சிகிச்சை அளிக்க மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தனி மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்