வெளிநாட்டு கட்டட மாதிரிகளுக்கு தடை விதிக்கும் சீனா: காரணம் என்ன?

Webdunia
சனி, 9 மே 2020 (14:49 IST)
ஈஃபிள் டவர், இத்தாலிய கிராமங்கள், தேம்ஸ் நகரம் போன்ற பல வெளிநாட்டு கட்டட மாதிரிகளை சீனாவில் நம்மால் காண இயலும்.
 
ஆனால் உள்ளூர் கட்டட அமைப்பை பிரபலபடுத்த சீன அரசு தற்போது இதை நிறுத்தியுள்ளது. வெளிநாட்டு கட்டங்களை அச்சு அசலாக கட்டமைப்பதை சீன அரசு தடை செய்துள்ளது.
 
கட்டங்கள் ஒவ்வொரு நகரின் கலாசாரத்தை பிரதிபலிக்கக்கூடிய ஒன்று எனவே வெளிநாட்டு மாதிரிகளை குறைக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வானளாவிய கட்டடங்களும் 500 மீட்டருக்குள் இருக்க வேண்டும் என புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சீனாவின் மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட நகரங்களில் வெளிநாட்டு கட்டட அமைப்பைக்கொண்ட பல கட்டடங்களைப் பார்க்கலாம் என க்ளோபல் டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது.
 
ஏற்கனவே அந்த வடிவமைப்பில் இருக்கும் கட்டடங்களை என்ன செய்ய வேண்டும் என சீன அரசு கூறவில்லை. ஆனால் இந்த பிரச்சனைக்காக சில நகரங்களில் கண்காணிப்பு நடத்த வேண்டும் என்று மட்டும் கூறியுள்ளது.
 
இந்த அறிக்கை ஏப்ரல் 27 ஆம் தேதியே வெளியிடப்பட்ட போதிலும் இப்போதுதான் இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அரங்கங்கள், கண்காட்சி மையங்கள், அருங்காட்சியகம், திரையரங்கங்கள் போன்ற பொது இடங்கள் வெளிநாட்டு கட்டட அமைப்பின் சாயலில் இருக்கக் கூடாது.
 
"நகரத்தின் கட்டுமானம் என்பது நகரின் வெளிப்புறத் தோற்றத்தையும் கலாச்சார உணர்வையும் பிரதிபலிக்கக்கூடியது," என அரசு அறிக்கை கூறுகிறது.
 
"இந்த முடிவு, கட்டடங்களில் சீன கலாசாரத்தை பிரதிபலிக்கவும், நகரின் சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்தவும் எடுக்கப்பட்டது" என அரசு கூறுகிறது. இது சமூக வலைதளங்களில் பெரிதும் வரவேற்கப்படுகிறது.
 
2013 ஆண்டில் "தேம்ஸ் நகர்" மாதிரியை சீனாவின் ஷாங்காயில் பிபிசி சென்று பார்த்தது. அந்த நகரின் முக்கிய அம்சமான கபல் கற்கள் பதிக்கப்பட்ட தெருக்கள், இடைக்கால அரங்கம், மற்றும் திருமண புகைப்படங்களுக்கு பெயர்போன வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலைக்கூட இருந்தது.
 
"பொதுவாக நாம் வெளிநாட்டு கட்டடங்களை பார்க்க வேண்டும் என்றால் வெளிநாடு செல்ல வேண்டும். ஆனால் அவைகளை சீனாவில் கட்டினால் நம் பணத்தை காப்பதுடன் வெளிநாட்டு கட்டட அமைப்புகளை நாம் ரசிக்கவும் செய்யலாம்," என்கிறார் சமூகவலைதள பயனர் ஒருவர்.
 
இம்மாதிரியான வெளிநாட்டு கட்டட அமைப்புகள் சீனாவில் மட்டுமில்லை அமெரிக்காவின் லாஸ் வேகஸில் ஈஃபிள் டவர் மற்றும் வெனிஸின் நீரோடை ஆகியவற்றை போன்ற மாதிரிகளை அமைத்துள்ளனர். இத்தாலியில் அழகிய கிராமங்களை போன்ற இடங்கள் தாய்லாந்தில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்