புற்றுநோய் வராமல் ப்ரோக்கோலி தடுக்குமா? ஆய்வில் புதிய தகவல்

Prasanth Karthick
செவ்வாய், 8 அக்டோபர் 2024 (12:59 IST)

நமது சிறுவயதிலிருந்தே காய்கறிகள், கீரைகளைச் சாப்பிடுமாறு பெரியவர்கள் நமக்கு அறிவுறுத்துவார்கள்.

 

 

அந்த அறிவுரையைப் பின்பற்றுவதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றுடன் கூடிய நல்ல உணவு நமது ஆரோக்கியத்துக்கு முக்கியமானது என்று நமக்குத் தெரியும். ஆனால் அவற்றில் சில உணவுகள் உங்களைப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றக் கூடும் என்று உங்களுக்குத் தெரியுமா?

 

ப்ரோக்கோலியில் அப்படி என்ன இருக்கிறது?
 

முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற இலைதழை மிக்க ஒரு காய்கறிதான் (cruciferous vegetable) ப்ரோக்கோலி. பார்ப்பதற்கு பச்சைநிற காலிபிளவர் போன்ற இதற்கு புற்றுநோய் ஏற்படுவதை குறைக்கும் தன்மை இருக்கிறது, என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

 

ஒரேகன் பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆராய்ச்சியின்படி, நாம் உண்ணும் உணவில் சிறிய அளவில் ப்ரோகோலியைச் சேர்த்துக்கொள்வதுகூட புற்றுநோயைத் தடுக்க உதவும் என்று தெரியவந்துள்ளது.

 

அந்த ஆராய்ச்சியின்படி, ப்ரோக்கோலியின் முளைப்பயிரில் (broccoli sprouts) புற்றுநோயை தடுக்கும் பண்புகள் அதிகம் இருப்பதாகவும், அதற்கு சல்ஃபரோஃபேன் (Sulforaphane) என்னும் சேர்மம்தான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

 

ப்ரோக்கோலியில் மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும் கூறுகள் உள்ளதாகவும் நார்ஃபோக்கில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

இந்த ஆய்வில், மார்பக எக்ஸ்-ரேக்களில் இயல்புக்கு மாறான அறிகுறிகளைக் கொண்டிருந்த பெண்கள், தினமும் ஒரு கப் ப்ரோக்கோலி முளைப்பயிரைச் சாப்பிட்டு வந்தவுடன், இயல்புக்கு மாறான உயிரணுக்களின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரியவந்தது.

 

ப்ரோக்கோலி எப்படி புற்று நோயைத் தடுக்கிறது?
 

ப்ரோக்கோலி போன்ற இலைதழைமிக்க காய்கறிகளில் இருக்கும் இந்த சல்ஃபரோஃபேன் சேர்மம், நமது DNAவில் ஏற்படும் மாறுபாடுகளை தடுக்கிறது. அதன்மூலம் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.

 

ப்ரோகோலி குறித்து நடத்தப்பட்ட பல ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஆய்வு செய்த ஒரு குழு, ‘அதிகளவில் ப்ரோகோலி உட்கொண்டவர்களுக்கு, ப்ரோகோலியைக் குறைவாக உட்கொண்டவர்களையோ, ப்ரோகோலியே உட்கொள்ளாதவர்களையோ விட, பல வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து குறைவாக இருப்பதாக’ தரவுகள் கூறுகின்றன என்கிறது.

 

ஆனால், இந்தத் தொடர்பினை உறுதிப்படுத்த இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

 

ப்ரோகோலியில், வைட்டமின் சி, ஆன்டி-ஆக்சிடண்டுகள், மற்றும் கரோடினாய்டுகள் என்ற நிறமிகள் ஆகியவை உள்ளன.

 

இந்தக் காய்கறியை உண்பவர்களுக்கு மரபியல் சார்ந்த நோய்கள், இதய நோய்கள் ஆகியவற்றின் ஆபத்துகள் குறைகின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

 

ப்ராஸ்டேட் புற்றுநோய்த் தடுப்பு
 

ப்ரோக்கோலி புற்று நோயைத் தடுக்க வல்லது என்பதை 2010-ஆம் ஆண்டு நார்ஃபோக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

 

ப்ராஸ்டேட் புற்றுநோயைக் குறித்து ஆராய்ச்சி செய்துவந்த அவர்கள், ப்ரோக்கோலியில் சல்ஃபரோஃபேன் இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த சல்ஃபரோஃபேன், PTEN (phosphatase and tensin homolog) என்ற மரபணு குறைவாக இருக்கும் செல்களின் வளர்ச்சியைக் கடுப்படுத்துகிறது என்று அந்த ஆய்வு கண்டறிந்தது.

 

இந்த PTEN மரபணு குறைவாகவோ, செயலிழந்தோ காணப்பட்டால், ப்ராஸ்டேட் புற்றுநோய் பரவும். மனித ப்ராஸ்டேட் தசைகள் மற்றும் எலிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில், சல்ஃபரோஃபேன் புற்றுநோய் செல்களாக மாறக்கூடிய செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது கண்டறியப்பட்டது.

 

PTEN என்பது புற்றுநோயைத் தடுக்கும் மரபணு, அது அழிந்தோலோ, செயலிழந்தாலோ அது ப்ராஸ்டேட் புற்றுநோயை ஊக்குவிக்கும், என்று நோர்விச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரிச்சார்ட் மித்தென் பிபிசி-யிடம் கூறியிருந்தார்.

 

ப்ரோக்கோலியில் இருக்கும் சல்ஃபரோஃபேன், PTEN இல்லாத செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது, ஆனால் PTEN இருக்கும் செல்களின் மீது அது எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை, என்று அவர் கூறியிருந்தார்.

 

ப்ரோக்கோலியின் பிற நன்மைகள் என்ன?

இது தவிர, ப்ரோக்கோலியில் இருக்கும் சல்ஃபரோஃபேன் ஆர்த்ரைட்டிஸ் நோயைத் தடுப்பதற்கும் உதவுகிறது என்று ஏஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

 

மனித செல்கள் மற்றும் எலிகள் மீதான சோதனைகளில் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளிலிருக்கும் சல்ஃபோராபேன், குருத்தெலும்புகளைச் சேதப்படுத்திக் கேடுவிளைவிக்கும் ஒரு நொதியைத் (enzyme) தடுக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

 

மேலும், லிவர்பூல் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் ப்ரோக்கோலி வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளையும் சீராக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டது.

 

ப்ரோக்கோலி, வாழைப்பழம், ஆகியவற்றில் இருக்கும் நார்ச்சத்து, நமது குடலில் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் தங்குவதைத் தடுக்கின்றது என்று கண்டறிந்தது.

 

பிபிசி தளங்களில் வெளியான பல்வேறு செய்திகளில் இருந்து தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்