இஸ்ரேல் - இரான்: போர் மூண்டால் இந்தியாவில் சாமானியர்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்?

Prasanth Karthick

வியாழன், 3 அக்டோபர் 2024 (12:30 IST)

அக்டோபர் 1ஆம் தேதியன்று இரான் இஸ்ரேல் மீது பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியது. இஸ்ரேலை இரான் நேரடியாகத் தாக்குவது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறை.

 

 

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இருவருடைய இறப்புக்குப் பின் இரானால் நடத்தப்பட்ட முக்கியமான தாக்குதல் இது.

 

இரான் 181 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும் இத்தாக்குதலில் பாலத்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

 

மத்திய கிழக்கில் இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பகைமையின் இந்தப் புதிய கட்டம், விரைவில் முடிவுறும் எனத் தோன்றவில்லை.

 

இந்தத் தாக்குதலுக்குப் பின் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பழிதீர்ப்பது குறித்துப் பேசினார். “இரான் இன்று பெரிய தவறு செய்துள்ளது. அதற்கான விலையை இரான் கொடுக்க நேரிடும்” என்றார்.

 

இதற்கு ஒருநாளுக்கு முன்பு, செப்டம்பர் 30 அன்று, நெதன்யாகுவிடம் பேசிய பிரதமர் மோதி, “நம் உலகில் பயங்கரவாதத்திற்கு எந்த இடமும் இல்லை” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில், இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நேரடி போர் ஏற்பட்டால், அது இந்தியா மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் இப்போதிருக்கும் பெரிய கேள்வி.

 

சாமானியர்களை எப்படி பாதிக்கும்?
 

இஸ்ரேல் மீதான இரானின் தாக்குதலுக்குப் பின் மத்திய கிழக்கில் நெருக்கடி அதிகரித்துள்ளது. இது எண்ணெய் விலையில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து பேசப்பட்ட நேரத்திலேயே, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் அதிகமானது. இதிலிருந்தே இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ளலாம்.

 

சர்வதேச அளவில் எண்ணெய் விலைக்கு பிரெண்ட் கச்சா எண்ணெய் அளவுகோலாக உள்ளது. அதன் விலை 1 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து ஒரு பேரல் 74.40 டாலர்களாக உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின்போது இது 5 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

 

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் மூத்த ஆய்வு மாணவர் ஃபஸுர் ரகுமான், இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர் தொடங்கினால், அது இந்தியாவிலுள்ள சாமானியர்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

 

அவர் கூறுகையில், “போர் ஏற்பட்டால் அதன் தாக்கம் இரானோடு நிற்காது. ஆப்கானிஸ்தான், இராக், சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் வரை அதன் தாக்கம் நீளும். இவை, இந்தியா பெருமளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள்” என்றார்.

 

மேலும், “தாக்குதலின்போது, எண்ணெய் விநியோகம் குறைவாகவும் அதன் தேவை அதிகமாகவும் இருக்கும். அந்தச் சூழலில் எண்ணெய் விலை உயரத் தொடங்கி, இந்தியா மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.

 

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அமைதி மற்றும் நெருக்கடி தீர்மானத்திற்கான நெல்சன் மண்டேலா மையத்தின் பேராசிரியர் ரேஷ்மி காஸியும் இதே கருத்தைக் கூறுகிறார்.

 

“வளைகுடா மற்றும் செங்கடல் என இரு பிரதேசமும் போர் முனைகளாக மாறி வருகின்றன. சண்டை அதிகரித்தால், எண்ணெய் விலை மிகவும் அதிகரிக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

 

இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள ராஜ்ஜீய சவால்

 

இரான், இஸ்ரேல் இரண்டு நாடுகளிடமும் இந்தியா நல்லுறவைப் பேணி வருகிறது. இந்தியாவுக்கு அதிகளவில் எண்ணெய் விநியோகிக்கும் நாடுகளுள் ஒன்றாக இரான் உள்ளது.



 

அணுசக்தி திட்டம் தொடர்பாக சர்வதச அளவில் தடைகள் இருந்தாலும் இரானுடன் இந்தியா உறவை சமநிலையில் பேணி வருகிறது.

 

சமீபத்தில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விமான விபத்தில் உயிரிழந்தார். அப்போது ஒருநாள் துக்க அனுசரிப்பை இந்திய அரசு அறிவித்தது.

 

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்கும் விதமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். எந்த அரசு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் அந்நாளில் நடைபெறாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

 

மற்றொருபுறம், இந்தியா இஸ்ரேலுடன் 1948ஆம் ஆண்டு முதலே ராஜ்ஜீய உறவை நிறுவியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் வலுபெற்றுள்ளது.

 

ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் நாடுகளுள் ஒன்றாக இஸ்ரேல் உள்ளது.

 

ஃபஸுர் ரகுமான் கூறுகையில், “இரு நாடுகளுக்கு இடையே ராஜ்ஜீய சமநிலையைப் பேணுவது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும். எனினும், இதுவரை இந்தப் பணியை நாம் நன்றாகச் செய்துள்ளோம்” என்றார்.

 

பேராசிரியர் ரேஷ்மி காஸி இரு நாடுகளுக்கிடையே இந்தியா சமநிலையைப் பேண வேண்டும், ஏனெனில் இந்தியா எந்த நாட்டையும் எரிச்சலூட்ட முடியாது என்றார்.

 

அவர் கூறுகையில், “இந்தியா இஸ்ரேல் பக்கம் சாய்ந்தால், இரானுடனான அதன் உறவை அது பாதிக்கும். இது, வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

 

மேலும், “சமீபத்தில் போர்ச்சுகீசிய கொடி பொருத்தப்பட்ட வணிகக் கப்பலை இரான் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்தது. அக்கப்பலில் 17 இந்தியர்கள் இருந்தனர். இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலையிட வேண்டியிருந்தது.

 

அதன்பிறகு இந்தியர்கள் விடுவிக்கப்பட்டனர். எனவே, இரான் மீது ஏதேனும் பாரபட்சம் காட்டினால், அவர்கள் எதிர்வினையாற்றலாம் என்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன” என்றார்.

 

இந்திய திட்டங்கள் பின்னடைவைச் சந்திக்குமா?

 

இரானின் சபாஹர் துறைமுகம் இந்தியாவிற்கு வியூகரீதியாக மிகவும் முக்கியமானது. இந்தத் துறைமுகத்தின் உதவியுடன், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடன் வர்த்தகம் செய்ய இந்தியா, பாகிஸ்தான் வழியாகச் செல்ல வேண்டியதில்லை.

 

இரு நாடுகளும் 2015இல் கைகோர்த்து சபாஹரில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தை மேம்படுத்தியது.

 

இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் தொடங்கினால், இரானின் முழுக் கவனமும் இஸ்ரேல் பக்கம் திரும்பும். சபாஹர் போன்ற திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்படும். இதன் விளைவாக அத்திட்டம் நிறுத்தப்படும் என்று ஃபஸுர் ரகுமான் கூறுகிறார்.

 

இதற்கிடையில், ரேஷ்மி காஸி கூறுகையில், சபாஹர் ஏற்கெனவே மத்திய கிழக்கின் புவிசார் அரசியலால் ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஒரு திட்டம், அத்தகைய சூழ்நிலையில் இந்தத் திட்டம் மீண்டும் நிறுத்தப்படும் என்றார்.

 

மறுபுறம், "மத்திய கிழக்கில் திட்டமிடப்பட்டுள்ள பல பெரிய திட்டங்களில் இந்தியாவுக்கும் பங்கு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் ஒரு புதிய போர் தொடங்கினால், திட்டங்களில் இருந்து கவனம் திசை திருப்பப்படும். அவை சரியான நேரத்தில் முடிக்கப்படாது," என்று ஃபஸுர் ரகுமான் கூறுகிறார்.

 

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத் திட்டம் 2023ஆம் ஆண்டு புது டெல்லியில் ஜி20 உச்சிமாநாட்டின்போது கையெழுத்தானது. இதில் இந்தியா, அமெரிக்கா, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்கும்.

 

இந்த வழித்தடத்தின் நோக்கம் ஒரு பெரிய போக்குவரத்து வலையமைப்பை நிறுவுவதாகும். அதன் உதவியுடன், குஜராத்தில் உள்ள காண்ட்லாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கிரீஸ் வழியாக இந்திய பொருட்கள் எளிதாக ஐரோப்பாவை அடைய முடியும்.

 

போர் ஏற்பட்டால், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும், ஏனெனில் அதன் முழு காலக்கெடுவும் சீர்குலைந்துவிடும் என்று ஃபஸுர் ரகுமான் கூறுகிறார்.

 

இதுதவிர, I2U2 போன்ற புதிய வணிகக் குழுக்களும் சிரமங்களைச் சந்திக்கலாம். இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இந்தக் குழுவில் உள்ளன.

 

அந்நிய செலாவணி கையிருப்பு மீதான தாக்கம்

 

இந்தியாவில் இருந்து ஏராளமானோர் வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகள்படி, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பஹ்ரைன், கத்தார், குவைத் ஆகிய நாடுகளில் சுமார் 90 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

 

இதில், அதிகபட்சமாக, 35 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கின்றனர். அதேநேரம், சௌதி அரேபியாவில் சுமார் 25 லட்சம் பேர், குவைத்தில் 9 லட்சம் பேர், கத்தாரில் 8 லட்சம் பேர், ஓமனில் சுமார் 6.5 லட்சம் பேர், பஹ்ரைனில் 3 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கின்றனர்.

 

இரானில் இந்தியாவை சேர்ந்த சுமார் 10,000 பேரும் இஸ்ரேலில் 20,000 பேரும் வசிக்கின்றனர். அந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பெரும் தொகையை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர்.

 

இந்திய ரூபாயுடன் ஒப்பிடுகையில் வளைகுடா நாடுகளின் பண மதிப்பு மிகவும் அதிகம். இதனால் தொழிலாளர்கள் பயனடைகின்றனர். ஒரு பஹ்ரைன் தினார் இந்திய மதிப்பில் ரூபாய் 221 ஆகவும், ஒரு ஓமன் ரியால் இந்திய ரூபாயில் 217 ஆகவும் உள்ளது.

 

இதுதவிர, கத்தார் ரியால், சவுதி ரியால் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ரியாலின் மதிப்பு ரூ.22 முதல் 23 வரை உள்ளது.

 

"வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கோடிக்கணக்கான டாலர்களை இந்தியாவுக்கு அனுப்புவதால், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வலுப்பெறுகிறது. இரான்-இஸ்ரேல் இடையே போர் மூண்டால், அது அந்நியச் செலாவணி கையிருப்பில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்" என்கிறார் டாக்டர் ஃபஸுர் ரகுமான்.

 

வெளியுறவு அமைச்சகம் 17வது மக்களவையில் சமர்ப்பித்த அறிக்கைப்படி, டிசம்பர் 2023 வரை, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பஹ்ரைன், கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து 120 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா பெற்றுள்ளது.

 

“போர் ஏற்பட்டால், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதும், பின்னர் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும், இது எளிதான காரியம் அல்ல” என்கிறார் ஃபஸுர் ரகுமான்.

 

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா?

 

போர் ஏற்பட்டால், இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான சவால்களும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

 

"அதிகார வெற்றிடம் அதிகரிக்கும்போது, ​​அரசு சாரா குழுக்கள் தங்களுக்கான இடத்தை உருவாக்கத் தொடங்குகிறார்கள். அரபு நாட்டில் போர் நடக்கும்போது, ​​அங்குள்ள ஆயுதக் குழுக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்கிறார் ஃபஸுர் ரகுமான்.

 

"அரபு எழுச்சியின்போது (அரசுக்கு எதிராக நடந்த போராட்டம்) ஐ.எஸ்.ஐ.எஸ் முன்னுக்கு வந்தது, பின்னர் ஐ.எஸ்-கொராசன் உருவானது. அதன் பிறகு அவர்கள் ஆப்கானிஸ்தானை நோக்கி நகர்ந்தனர். அவர்கள் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு ரீதியாக சவாலை ஏற்படுத்தினர்” என்கிறார் அவர்.

 

மேலும், "இதுபோன்ற அமைப்புகள் இந்தியாவை நோக்கியும் வரலாம் என்றுகூடக் கூறப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றம் இந்தியாவை எல்லா வகையிலும் பாதிக்கப் போகிறது" என்று அவர் விளக்குகிறார்.

 

“தற்போது ஐஎஸ் போன்ற அமைப்புகள் ஒடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் போர் ஏற்பட்டால், அவர்கள் வெளியே வந்து தங்களைத் தாங்களே பலப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்” என்கிறார் ஃபஸுர் ரகுமான்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்