பிக்பாஸ் சீசன் 6: விக்ரமனுக்கு வாக்கு கேட்ட திருமாவளவன் - விடுதலை சிறுத்தைகள் கூறுவது என்ன?

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (14:31 IST)
"பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விக்ரமனை வெற்றி பெற செய்வோம்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் டிவிட்டரில் வெளியிட்ட பதிவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. 

நெதர்லாந்தைச் சேர்ந்த எண்டமோல் என்ற ஊடக நிறுவனம் பிக் பிரதர் என்ற பெயரில் உருவாக்கிய ரியாலிட்டி நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. பின்னர், தமிழிலும் நுழைந்த பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி  கடந்த ஆறு ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்தி வழங்கி வருகிறார். 

கடந்த 2017ஆம் ஆண்டு முதன்முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பானபோது, தமிழ் கலாசாரத்திற்கு ஒவ்வாத நிகழ்ச்சி என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால், நமிதா, ஓவியா, ஜூலி, காயத்ரி ரகுராம், சினேகன், சக்தி, ஆரவ் போன்றோருடன் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சி மாபெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றது. 

தற்போதைய சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டைட்டிலை வெல்லும் போட்டியாளர்கள் பட்டியலில் அமுதவானன், ஷிவின், விக்ரமன், அசீம், மைனா நந்தினி ஆகியோர் உள்ளனர்.  இதில், அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின்  ஆகியோரில் ஒருவர் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இறுதிப்போட்டிக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் வாக்கு சேகரித்து அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்த திருமாவளவன்

போட்டியாளர்களில் ஒருவரான விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விக்ரமனுக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன்  தனது டிவிட்டர் பக்கத்தில், தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். 

பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் விக்ரமனுக்கு வாக்களிப்போம். என்றும் அறம் வெல்லும் என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டிருந்தார். 

மற்றொரு பதிவில், "விக்ரமன் வெற்றி பெற வேண்டும். இது சராசரியான ஒரு நபராய் என் விருப்பம்.

விக்ரமன் முதிர்ச்சியான பக்குவமான நேர்மறையான ஒரு ஆளுமை. பொழுதுபோக்கான வணிகமயமான ஆடம்பரமான விளையாட்டுக் களத்தை சமத்துவக் கருத்தியலைப் பரப்புவதற்கான ஒரு களமாக்கிய பொறுப்பு மிக்க ஆளுமை," என்றும் திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அக்கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் விக்ரமன் ஆதரவாளர்கள் அறம் வெல்லும் என்ற ஹேக்டேக் உடன் விக்ரமனுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். 

பிக்பாஸ் என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதை தாண்டி அரசியலிலும் தனது தாக்கத்தை முன்னரே ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா வெற்றிபெற வேண்டும் என பலரும் அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்ததோடு, அவருக்கு வாக்கும் அளித்தனர். இதனை அப்போது விமர்சித்த பாமகவின் தற்போதைய தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டின் ஏழரை கோடி மக்களில் மூன்றரை கோடி மக்கள் பிக்பாஸை பார்க்கின்றனர். அதில் ஒன்றரை கோடி மக்கள் ஓவியாவிற்கு ஓட்டுபோட்டுள்ளனர். அந்த ஒன்றரை கோடி பேர் எனக்கு ஓட்டு போட்டிருந்தால் நான் மக்களை காப்பாற்றி இருப்பேன்` என்று பொதுநிகழ்ச்சி ஒன்றில் பேசியது அப்போது விவாதமானது. 

சமூக வலைதளங்களில் எதிர்ப்பு

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிடும் ஒருவருக்கு ஆதரவாக மக்கள் பிரதிநிதியான திருமாவளவன் கருத்து தெரிவிப்பது எப்படி சரியாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடக்க காலங்களில் விமர்சித்தவர்களில் திருமாவளவனும் ஒருவர். பரபரப்புக்காக திட்டமிட்டு, முன்கூட்டிய வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ் என்றும் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் சொல்லாடல் வேண்டுமென்ற கையாலப்படுகிறதோ என்று தோன்றுவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது, தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் போட்டியாளராக உள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக திருமாவளவன் கருத்து பதிவிடுவது சரியா என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் வைக்கப்படுகிறது. 

பிக்பாஸை கமல் தொகுத்து வழங்கலாமா?

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸிடம் பிபிசி தமிழ் சார்பில் தொடர்புகொண்டு பேசியபோது, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டும் சரியா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய ஆளூ ஷானவாஸ், “எங்கள் கட்சியைச் சேர்ந்த தோழர் அந்த நிகழ்ச்சியில் சரியாக வெளிப்பட்டுள்ளார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார்.  ஒரு சமூகத்திற்கோ, சாதிக்கோ ஆதரவாக பேசாமல் ஒட்டுமொத்த மக்களுக்கான கருத்தை பேசியுள்ளார். அப்படியிருக்கும்போது அவரின் பக்கம் இருக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு” என்று கூறினார். 

திருமாவளவன் மட்டும் இல்லாமல் எல்லா தலைவர்களும் இதனை வரவேற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடும் ஆளுர் ஷா நவாஸ், “திராவிட இயக்கத்தின் சினிமாவே அத்தகையதுதான். பக்தி இலக்கியமாகவும், பொழுதுபோக்காகவும் இருந்த திரையுலகில் தலைகீழ் மாற்றத்தை திராவிட இயக்க சினிமாக்கள் ஏற்படுத்தின.  தற்போது சினிமா, பொழுதுபோக்கு ஆகியவை வேறு விதமாக உள்ளன. அதற்குள்ளேயும் ஒருவர் சமூக கருத்தை பேசும்போது நாம் கொண்டாட வேண்டும். ” என தெரிவித்தார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்க காலத்தில் அதனை திருமாவளவன் விமர்சித்திருந்த நிலையில், தற்போது அதில் பங்கேற்கும் போட்டியாளருக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பது சரியானதா என்ற பிபிசி தமிழ் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஒரு வடிவம் தவறாக போகும்போது விமர்சிக்கிறோம். அதே சரியாக இருக்கும்போது ஆதரிக்கிறோம்.

அரசியலில் தவறான செயல்கள் நடைபெறும்போது விமர்சிக்கிறோம். அரசியலை சாதி வெறிக்கும் மத வெறிக்கும் பயன்படுத்தும்போது எதிர்க்கிறோம். அதேவேளையில், சமூக நீதிக்காக பயன்படுத்தும்போது ஆதரிக்கிறோம். இப்போதும் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது விமர்சனங்கள் உள்ளன.  ஆனால், அதற்குள்ளேயும் ஒருவர் போய் சரியாக வெளிப்படும்போது வரவேற்கிறோம். நாங்கள் தெருவில் நின்று முழக்கமிட்ட ஒரு கருத்து தற்போது தொலைக்காட்சியில் வேறு விதமாக வெளிப்படும்போது அதனை வரவேற்கிறோம் ” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்