ஒன்றோடொன்று மோதிய விமானங்கள் - 4 பேர் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 14 மே 2019 (16:39 IST)
சுற்றுலாப் பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த இரண்டு விமானங்கள் தென் கிழக்கு அலாஸ்காவில் ஒன்றோடொன்று மோதியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு பேர் மயமாகியுள்ளதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
 
11 பேருடன் சென்ற ஒரு விமானமும், ஐந்து பேருடன் சென்ற மற்றொரு விமானமும் தென் கிழக்கு அலாஸ்காவின் கெட்சிகன் என்னுமிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக அசோசியேட் பிரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
11 பேருடன் சென்றுக் கொண்டிருந்த முதல் விமானத்தில் உயிர் பிழைத்த பத்து பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
மற்றொரு விமானத்தில் பயணித்த ஐவரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த நான்காவது நபர் எந்த விமானத்தில் பயணித்தவர் என்று இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை.
 
வாஷிங்டனை சேர்ந்த தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தை சேர்ந்த விசாரணை அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலைக்குள் சம்பவ இடத்தை வந்தடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடல் சார்ந்த பகுதிகளில் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு விமானங்களுமே ராயல் பிரின்சஸ் எனும் கப்பல் நிறுவனத்துக்கு சொந்தமானது. கெட்சிகனிலுள்ள புகழ்பெற்ற சுற்றுலா விடுதிக்கு அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்