பெங்களூரின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், 21 வயதான ஜீவன் கவுடா என்ற மாணவர், தனது வகுப்பு தோழியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்டோபர் 10 அன்று மதிய உணவு இடைவேளையின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியை ஏழாவது மாடிக்கு வரவழைத்து, அவர் வெளியேற முயன்றபோது, ஆறாவது மாடியில் உள்ள ஆண்களுக்கான கழிவறைக்குள் இழுத்து சென்று இந்த வன்கொடுமையை செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன உளைச்சல் காரணமாக மாணவி முதலில் புகார் அளிக்க தயங்கிய நிலையில், பெற்றோரின் உதவியுடன் அக்டோபர் 15 அன்று அனுமந்தநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த தளத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்றபோதிலும், தடயவியல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் கர்நாடக அரசியலில் எதிரொலித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.