1965ம் ஆண்டு வெளியான வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமானவர் மூர்த்தி. இப்படத்தில்தான் ஜெயலலிதா மற்றும் நிர்மலா ஆகியோர் அறிமுகமானார்கள். எனவே இப்படத்தின் தலைப்பு மூர்த்திக்கும், நிர்மலாவுக்கும் நிலைத்துப் போனது. குணசித்திர வேடத்தில் நடித்து வந்த மூர்த்தி ஒரு கட்டத்தில் காமெடிக்கு தாவினார். தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்ட மூர்த்தி ரசிகர்களை கவர்ந்தார்.
ஏண்டா மூதேவி. நீ திருந்தவே மாட்டியா?” என்கிற இவரின் புகைப்படத்தோடு கூடிய வாசகம் இப்போதும் முகநூலில் புகைப்பட கமெண்டாக நெட்டிசன்களால் பயன்படுத்தப்படு வருகிறது. தமிழ் சினிமாவில் அதிகமாக இரட்டை அர்த்த வசனங்களைப் பேசியவர் இவராகதான் இருப்பார். இந்நிலையில் 52 ஆண்டுகள் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த அவர் 2018 ஆம் ஆண்டு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதன் பின்னர் 7 ஆண்டுகளாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டில் அவர் சினிமாவில் தன்னுடைய 60 ஆவது ஆண்டை பூர்த்தி செய்யும் நிலையில் “1965 ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனேன். 2018 ஆம் ஆண்டுடன் இட்லி என்ற படத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்தினேன். இதுவரை 620 படங்களில் நடித்துள்ளேன். சினிமாவில் இது எனக்கு 60 ஆவது ஆண்டு. நிறைவாக இருக்கிறேன். என்னை வாழவைத்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.