பொதுவாக, ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமர் தான் அதிகாரபூர்வமாக அந்த நாட்டின் பிரதிநிதியாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். ஆனால், பாகிஸ்தானை பொறுத்தவரை, பிரதமரை ஒரு பொருட்டாகவே கருதாமல், பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசீம் முனீர் சமீபத்தில் அமெரிக்கா சென்று டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து, இரண்டு மணி நேரம் மதிய உணவோடு ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அசீம் முனீர் பிரதமரின் அனுமதி இல்லாமலேயே இலங்கை மற்றும் இந்தோனேசியா தலைவர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையில் அவர் பாகிஸ்தானின் ராணுவ தளபதி மட்டும்தானா அல்லது அதிபர் அதிகாரத்தையும் சேர்த்து எடுத்துக் கொண்டாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன்னுடைய உயிருக்கு அசீம் முனீரால்தான் ஆபத்து என்று கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் அசீம் முனீர் தனது கையில் எடுத்துக்கொண்டுவிட்டாரோ என்ற கேள்வி வலுவாக எழுப்பப்படுகிறது.
ஏற்கனவே, பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்த பிறகு, தனது பாதி நாட்களுக்கு மேலாக ராணுவத்தின் பிடியில்தான் இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மீண்டும் ஒரு ராணுவ ஆட்சி நடக்குமா, அல்லது அசீம் முனீர் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.