வங்கதேசத் தலைநகர் டாக்காவில் ஒரு பள்ளி கட்டிடத்தின் மீது சீனாவில் தயாரிக்கப்பட்ட F-7 ரக ஜெட் பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மாணவர்கள் உட்பட பலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், விமானம் மோதிய அடுத்த சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயங்களுடன் பள்ளியை விட்டு அச்சத்துடன் வெளியே ஓடி வந்துள்ளனர். குறைந்தது 100 பேர் காயம் அடைந்திருப்பதாகவும், ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேச விமானப்படை இந்த விபத்தை உறுதி செய்திருந்தாலும், விமானி உயிர் பிழைத்தாரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. விமான விபத்து நடந்த இடத்தில் ராணுவம் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.